murasoli thalayangam
ஜெயலலிதா வந்த ஹெலிகாப்டரைப் பார்த்து வணங்கியவர்கள் தற்போது அனைத்தையும் மறந்துவிட்டனர் ! முரசொலி தாக்கு !
முரசொலி தலையங்கம் (21-10-2022)
குற்றவாளிகளின் கூடாரம் அது !
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவரது மரணம் தொடர்பாக, சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவகுமார் உள்ளிட்டவர்களை குற்றவாளிகளாகக் கருதி அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த முக்கியமான வாக்குறுதி ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக் கொண்டு வருவோம்’ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போது குறிப்பிட்டார்கள். அப்போது அ.தி.மு.க. தரப்பால் அதற்கு சரியான பதில் அளிக்க முடியவில்லை.
‘ஜெயலலிதாவை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது’ என்று மொண்ணையான பதிலைச் சொன்னார்கள். ‘ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையத்துக்கு தி.மு.க. குந்தகம் விளைவிக்கிறது’ என்றும் குற்றம் சாட்டினார்கள். ‘’ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஒழுங்காக நடந்திருந்தால் நான் ஏன் இதைப்பற்றி பேசுகிறேன்? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று முதலில் சொன்னது பன்னீர்செல்வம் தானே? அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும் என்று சொன்னது அவர்தானே? தனக்குத் துணை முதலமைச்சர் பதவி கொடுத்தபிறகு அவர் வாயை மூடிக் கொண்டாரே? ஜெயலலிதா பெயரைச் சொல்லி பிரச்சாரம் செய்யவில்லை. செய்யவும் தேவையில்லை. இறந்து போனவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
நான் தி.மு.க. தலைவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். கேள்வி கேட்பதற்கான, தகுதியும் கடமையும் எனக்கு இருக்கிறது” என்று தி.மு.க. தலைவர் அவர்கள் அப்போது பதில் அளித்தார்கள்.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தின் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. விசாரணை அறிக்கையும் வெளியாகிவிட்டது. ஜெயலலிதாவை பொறுப்பற்ற முறையில் எப்படி வைத்திருந்தார்கள் என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது இந்த ஆணையத்தின் அறிக்கை.
2016 செப்டம்பர் 22–-ம் தேதி இரவு சுயநினைவற்ற நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாகவும், போயஸ் கார்டனில் மயங்கி விழுந்து ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குப் பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு மருத்துவமனையின் 10 அறைகள் சசிகலாவின் உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சைக்கு வெளிநாட்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்தும் கடைசிவரை அது நடக்கவில்லை என்றும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா, டாக்டர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் ஆகியோரை குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து விசாரணைக்குப் பரிந்துரைப்பதாகவும் அதில் இருக்கிறது.
சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்களே தவிர அதற்கு வேறு எந்த ஆதாரங்களும், ஆவணங்களும் ஆணையத்தில் முன்வைக்கப்படவில்லை என்றும் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. டாக்டர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லத் தயார் எனக் கூறியிருந்தும் அது ஏன் நடக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.ஜெயலலிதாவிடம் இருந்து சசிகலாவைப் பிரிக்க பத்திரிகையாளர் சோ சதி செய்தார் என்பதை சசிகலா தனது வாக்குமூலத்தில் சொன்னதாகவும் இதில் உள்ளது. 2011 நவம்பர் மாதம் போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட போது பத்திரிகை ஆசிரியர் சோ உடனிருந்தார் எனவும், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் நல்லுறவு இல்லை என்று இளவரசியின் மகள் கிருஷ்ண ப்ரியா சாட்சியம் அளித்துள்ளதாகவும், ஜெயலலிதா தன்னுடன் பேசுவதில்லை என்று இளவரசி கூறியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக்குழு 5 முறை அப்போலோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜெயலலிதாவுக்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ஹைப்போ தைராய்டு, குடல் நோய் உள்ளிட்ட நோய்கள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 செப்டம்பர் 27-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டதாகவும், எய்ம்ஸ் மருத்துவர்கள் மேற்பார்வையிட மட்டுமே வந்தனர் என்றும் மருந்து எதுவும் பரிந்துரைக்கவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இறந்த நேரம் 5.12.2016 இரவு 11.30 என மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் சாட்சியங்களின் அடிப்படையில் 2016 டிசம்பர் 4ஆ-ம் தேதி மதியம் 3.00 முதல் 3.50 மணிக்குள் ஜெயலலிதா இறந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 நுரையீரல்களில் இருந்தும் திரவம் பெருமளவில் வெளியேறுவதை பார்த்தாவது ஜெயலலிதா மீது அனுதாபம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய அறிக்கையைப் பார்த்து அ.தி.மு.க.வில் யாரும் துளி கண்ணீரும் சிந்தவில்லை என்பதுதான் அதிர்ச்சிக்குரியது. ஜெயலலிதா வாழ்ந்த காலத்தில் அவர் இருக்கும் திசையைப் பார்த்து தெண்டனிட்டுக் கிடந்தக் கூட்டம் அது. ஜெயலலிதா தனது இறுதிக் காலத்தை யாரும் கவனிப்பாரற்று -எவ்வளவு கொடூரமான சோகத்துடன் கழித்திருக்கிறார் என்ற அறிக்கை வெளிவந்த நாளில் பழனிசாமி கூட்டத்துக்கு அது சம்பந்தமாக இரக்கம் வரவில்லை என்றால் அதுதான் ஜெயலலிதாவின் மரண மர்மத்தை விட ‘மர்மம்’ ஆனது. ஜெயலலிதா வந்த ஹெலிகாப்டரைப் பார்த்து வணங்கியவர்களுக்கு அவர் மரணத்துக்குப் பிறகு எல்லாவற்றையுமே மறந்துவிடுகிறார்கள் என்றால் நடந்த குற்றத்துக்கு அவர்கள் மொத்தப் பேருமல்லவா உடந்தை?
- தொடரும்
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!