murasoli thalayangam
“மோடி அரசின் மாநில மொழி கபட வேடத்தை கிழித்தெறிந்த தமிழ்நாடு - முதல்வரின் மொழிப் போர் முழக்கம்” : முரசொலி!
முதல்வரின் மொழிப் போர் முழக்கம்
“இந்திக்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் இராமசாயிப் பெரியாரும். புலவர் சோமசுந்தர பாரதியாரும் ஆகிய இருவர் மட்டும்தான்" -என்று இதே சட்டமன்றத்தில் 1938 ஆம் ஆண்டு சொன்னார் அன்றைய முதலமைச்சர் இராஜாஜி அவர்கள். "எதிர்ப்பது இருவர் என்றால் ஆதரிப்பது நீங்கள் ஒருவர் மட்டும்தானே" என்று பதில் தொடுத்தார் அன்றைய நீதிக்கட்சித் தலைவரான சர் ஏ.டி. பன்னீர்செல்வம்.
அதே சட்டமன்றத்தில் ஒரே ஒரு கட்சி மட்டும் வெளிநடப்பு செய்ய -உள்ளே இருந்த மொத்த உறுப்பினர்களாலும் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது இந்தி ஆதிக்க திணிப்புக்கு எதிரான தீர்மானம்.
"வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற கொள்கைக்குச் சொந்தக்காரர்களாகிய நாம் அன்னைத் தமிழ் மொழியைக் காப்பதற்காக மட்டுமல்ல, ஆதிக்க மொழித்திணிப்புக்கு எதிராக என்றும் குரல் கொடுப்பவர்கள். தமிழ் காக்க சிறை சென்று சிறைச்சாலையில் மரணம் அடைந்த நடராசன், தாளமுத்து தொடங்கி, தீக்குளித்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, துப்பாக்கிக் குண்டுக்குப் பலியான சிதம்பரம் ராசேந்திரன் வரையிலான தியாகிகளை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.
மொழி என்பது நமது உயிராய் உணர்வாய் விழியாய் நம் அனைவரது எதிர்காலமாய் இருக்கிறது. அத்தகைய மொழியை வளர்க்கவும், பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து காக்கவுமே திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. தோன்றிய காலம் முதல் இன்று வரை தமிழ் மொழிக்கான ஒரு தனிப்பெரும் பாதுகாப்பு இயக்கமாகவே இருந்து செயல்பட்டு வருகிறது" என்று முழக்கயிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
1938 ஆம் ஆண்டு முதல் இந்தி மொழித் திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்க சக்திகளும் விடுவதாக இல்லை. நாமும் விடுவதாக இல்லை. இது வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல தமிழினத்தை, தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாக நாம் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். தொடரவே செய்வோம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக தமிழ்நாட்டு மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்." என்று இடிமுழக்கம் செய்துள்ளார்கள்.
முதலமைச்சர் அவர்களின் மொழிப்போர் முழக்கமானது வரலாற்றின் பக்கங்களில் எந்நாளும் எதிரொலிக்கும் முழக்கமாக அமைந்துள்ளது. "இந்தித் திணிப்பை எதிர்த்து 1938 ஆம் ஆண்டு தொடங்கிய போராட்டம் இன்றும் தொடர்கிறது" என்று அவை முன்னவர் துரைமுருகன் எடுத்துக் காட்டினார்கள்.
பெரியார் போன்ற அரசியல் தலைவர்களும், மறைமலையடிகள் - அருணகிரிநாதர் போன்ற இறையியலாளர்களும் -- நாவலர் சோமசுந்தரபாரதியார் போன்ற தமிழறிஞர்களும் இணைந்து நடத்திய போராட்டம் அது பெண்கள் அதிகம் பங்கெடுத்து சிறை சென்ற போராட்டம் அது. தங்கள் கைக் குழந்தைகளோடு சிறைச் சாலையை தவச்சாலையாக ஆக்கினார்கள் அன்று தமிழ் வீராங்கனைகள்.
1965 போராட்டக் காலத்தின் சாட்சியாக இருந்தும் அவை முன்னவர் மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் சில காட்சிகளை விவரித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்ட அறிவிப்பால், உணர்ச்சி பெற்ற மாணவ சமுதாயம்-வீறுகொண்ட போராட்டத்தை அன்று நடத்தியது. அது போராட்டமல்ல, போர் என்று சொல்லத்தக்க வகையில் நடந்தது. ஐம்பது நாட்கள் நெருப்பாக எரிந்தது தமிழகம்.
இராணுவய் வந்தால்தான் அணைக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது துப்பாக்கிக் குண்டுகளின் மூலமாக ஒடுக்க நினைத்தார்கள். மார்பு காட்டி மொழிக்காக உயிர் கொடுத்தார்கள் தமிழ் மாணவர்கள். அந்த நெருப்பால் உருவானதுதான் 1967 வெற்றியாகும். அத்தகைய உணர்ச்சியால் முதலமைச்சராக எழுந்து நின்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் தீட்டிக் கொடுத்த திட்டம்தான் இருமொழிக் கொள்கை.
தாய்மொழியாம் தமிழும் உலகத் தொடர்பு மொழியாம் ஆங்கிலமும் அடங்கியது இருமொழிக் கொள்கை. இந்தக் கொள்கைதான் தமிழ்நாட்டை ஐம்பது ஆண்டுகளாகக் காத்து வருகிறது. பள்ளி முதல் உயர் கல்வி வரை தமிழில் படிக்கலாம் என்ற நிலை இங்கு இருக்கிறது. உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலத்திலும் திறன் பெறலாம் என்ற நிலை இருக்கிறது.
இன்றைக்கு உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வர இந்த இருமொழிக் கொள்கைதான் காரணம். 1965 ஆம் ஆண்டு அனைத்தும் இந்திமயம் என்பதை நாம் ஏற்றுக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? இங்கு மட்டுமல்ல எங்கும் எந்த வேலையும் கிடைத்திருக்காமல் முடிந்திருப்போம். அதனை நீக்கி உலக வாசலை தமிழ்நாட்டுக்குத் திறந்து வைத்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு.
அதன் தொடர்ச்சியாகத்தான் முழங்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஆங்கிலத்தை அகற்ற முனைவது அந்த இடத்தில் இந்தியைக் கொண்டு வைப்பதற்குத்தான் என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறார் முதலமைச்சர். இவர்களது மாநில மொழி கபட வேடத்தையும் கிழித்தெறிந்திருக்கிறார்..
இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இந்தி மயம் ஆகுமானால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மத்தியக் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் தமிழ் கட்டாயம் ஆக்கப்படும் என்று சட்டம் போடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா? இல்லை.
இதுதான் கபடத் தனம் ஆகும். இதனை இந்தி பேசாத மாநில மக்கள் அனைவருக்கும் உணர்த்துவதாக முதலமைச்சரின் உரை அமைந்துள்ளது. சமூகநீதி-மாநில சுயாட்சிக்கு மட்டுமல்ல - மொழிக்காப்பு உரிமையிலும் இந்தியாவுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!