murasoli thalayangam
“இந்தி மட்டுமே போதும் என சொல்வது இந்தியாவை தற்குறி நாடாக்கும்”: இந்திவாலாக்களின் அறிக்கையை சாடிய முரசொலி!
இந்திவாலாக்களின் அறிக்கை - 2
இந்தியாவை 'ஹிந்தியா' ஆக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் அமித்ஷா குழுவினரின் அறிக்கையில் இருக்கிறது. இந்தியாவை இந்தி மொழியின் அடிப்படையில் இவர்கள் செய்துள்ள பிரிவினையே இந்திய ஒருமைப்பாட்டுக்கு விரோதமானது ஆகும்.
நாட்டில் உள்ள இந்தி பேசும் மாநிலங்களில் இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.டி.), மத்திய பல்கலைக்கழகங்கள், கேந்திரிய வித்தியாலயா கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று சொல்வதன் மூலமாக மாணவர்கள் மத்தியில் இனி இந்தி படித்தால் மட்டுமே இந்த நிறுவனங்களுக்குள் நுழைய முடியும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறார்கள்.
இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள இதே போன்ற கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக உள்ளூர் மொழி இருக்க வேண்டும் என்று காதில் பூ சுற்றி இருக்கிறார்கள். நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.க்கள், மத்திய பல்கலைக் கழகங்கள், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக ஆக்கப்படுமா? அதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. அரசு தயாராக இருக்கிறதா? எதற்காக இந்த பொய்? ஒரு அரசாங்கம் கோடிக்கணக்கான மக்களை பொய் சொல்லி ஏமாற்றுகிறது என்பதைத் தவிர இது வேறு என்ன?
அனைத்துத் தேர்வுகளிலும் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் இருப்பதைக் கைவிடச் சொல்வதன் மூலமாக, அனைத்து இந்தியத் தேர்வுகளையும் இந்தி மயமாக்கத் துடிக்கிறார்கள் என்பதே தெரிகிறது. தமிழ்த் தேர்விலேயே இந்தி மொழி பேசுபவர்களை தேர்ச்சி அடைய வைத்து - வேலைகளுக்குள் புகுத்தும் போது அவர்களால் எதைத்தான் செய்ய முடியாது? இந்தியில் தோல்வி அடைபவர்கள், தமிழில் தேர்ச்சி அடைந்த நாடகத் தேர்வுகளைத்தான் நாம் பார்த்தோமே?
இனி நடக்கும் அனைத்துத் தேர்வுகளும் இந்தியில்தான் என்று சொல்வதன் மூலமாக, இந்தி பேசும் மாநில மக்களுக்கு மட்டும் தான் இனி அனைத்திந்திய பணி இடங்கள் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டார்கள். இந்தி தெரியாத யாரும் ஒன்றிய அரசின் பணியிடத்துக்குள் வராதே என்கிறார்கள். இந்தி பேசாத மக்களிடம் மொழித் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள்.
''பணியாளர் தேர்வுகளுக்கு நடைபெறும் போட்டித் தேர்வுகளின் வினாத்தாளில் ஆங்கில மொழியை அறவே நீக்கிவிட்டு, இந்தி மொழியில்தான் வினாத்தாள் இருக்க வேண்டும் என்பதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம். ஆங்கிலம் என்பது அந்நிய மொழி. காலனி ஆதிக்கத்தை ஒழிக்கும் வகையில் ஆங்கிலத்தை நாம் கைவிட வேண்டும்" என்று இக்குழுவின் துணைத்தலைவரான பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி.யான பார்த்ருஹரி கூறியிருக்கிறார். ஆங்கிலம் அவருக்கு அந்நிய மொழி என்றால், இந்தி நமக்குத் தாய் மொழியா? அந்நிய மொழி தானே?
ஆங்கிலத்தைத் திணித்தது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் என்றால், இந்தியைத் திணிப்பது பா.ஜ.க.வின் காலனியாதிக்கம் அல்லவா? திணிப்பு என்றால் எல்லாம் திணிப்பு தானே? ஆங்கிலத்தை திணிக்கக் கூடாது, இந்தியைத் திணிக்கலாமா?
பிரிட்டிஷார் திணிக்கக் கூடாது, சுதேசி திணித்தால் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? இரும்பு ஊசியால் குத்தினால் வலிக்கும், தங்க ஊசியால் குத்தினால் வலிக்காதா?
உங்கள் தாய்மொழியான இந்தியை ஆங்கிலம் அழிக்கிறது என்றால், எங்கள் தமிழ் மொழியை இந்தி அழிப்பதை பொறுத்துக் கொள்ள வேண்டுவதுதான் இந்திய ஒருமைப்பாடா? பாரதிய ஜனதாக் கட்சி இந்தியர்களின் கட்சியாக இருக்க நினைக்கவில்லை, இந்தி பேசுபவர் கட்சியாகவே இருக்க நினைக்கிறது என்பதற்கு இதுவே சாட்சியம் ஆகும்.
1968, 1976ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தங்கள், அதனடிப்படையிலான விதிகளின்படி ஒன்றிய அரசுப் பணிகளில் ஆங்கிலம் – இந்தி என இரு மொழிகளையும் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், அறிவியல் வளர்ச்சியையும் தொழில்நுட்ப வசதிகளையும் கவனத்தில் கொண்டு, எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக்குவதே ஒன்றிய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். அதை விடுத்துவிட்டு ஆங்கிலத்தையும் நீக்கிவிட்டு இந்தியை மட்டும் வைக்கப் போகிறார்கள்.
இந்த லட்சணத்தில், ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியை அலுவல் மொழியாக்க வேண்டுமாம். இங்கேயே தரித்திரம் தாண்டவம் ஆடுகிறதாம். பக்கத்து ஊருக்கு போய் தானதர்மம் செய்தானாம். அப்படி இருக்கிறது இவர்களது ஆசைகள். உள்ளூர் மொழிகளுக்கு உலை வைத்துவிட்டு, உலகத்தின் தலையில் இந்தியைக் கட்டப் பார்க்கிறார்கள்.
பாரதியார் பாட்டைச் சொல்வதால், திருக்குறளை மேற்கோள் காட்டுவதால் தமிழுக்கு என்ன பயன்? தமிழ் பயன்பட, தமிழ் பயனுற பா.ஜ.க. தனது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி என்ன செய்தது.... இந்திக்குச் செய்ய நினைப்பதைப் போல?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, அந்த மொழிகளை இந்திய நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட எந்த முயற்சியும் எடுக்காமல் ஐ.நா.வுக்கு போய்விட்டார்கள் இந்தியைத் தூக்கிக் கொண்டு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் '' ‘பாரத் மாதா கீ ஜே’ என்று நாடாளுமன்ற அவை மரபையும் மீறி குரல் எழுப்பி, கோஷம் போட்டுக் கொண்டே, அந்த ‘பாரத மாதா’ பெயரால் இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியது" என்று எச்சரிக்கைச் செய்துள்ளார்.
இந்தி மட்டுமே போதும் எனச் சொல்வது இந்தியாவை தற்குறி நாடாக்கும். இந்தியாவை, உலக வரைபடத்தில் தனிமைப்படுத்திவிடும். உலகப் போட்டியில் இந்திய இளைய சக்தியை முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளிவிடும். இந்த ஆபத்தை அனைவரும் உணர வேண்டும். இந்தியாவுக்கு பா.ஜ.க. காட்டும் பாதை படுகுழி பாதையாகும்.
தாய்மொழியும் -– இணைப்பு மொழியாக ஆங்கிலமும் என்ற பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டை வாழ வைத்தது. அதுவே இந்தியாவுக்கும் வழிகாட்டியாக அமைய முடியும். எங்கள் அண்ணா பேச்சை அமித்ஷாக்கள் கேட்கவும்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!