murasoli thalayangam
திராவிடவியல் கொள்கைகளை நெஞ்சில் தாங்கிய கொள்கை வீரராக செயல்பட வேண்டும்.. பொதுக்குழுவில் தலைவரின் கட்டளை!
முரசொலி தலையங்கம் (11-10-2022)
கட்டளைப் பொதுக்குழு!
கொட்டும் மழையில் இராபின்சன் பூங்காவில் கழகத்தைத் தொடங்கி வைத்து பேரறிஞர் அண்ணா பேசியதைப் போல – பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்னால் திருச்சி மாநாட்டில் தமிழினத் தலைவர் பேசியதைப் போல -
கழகத்தின் 15 ஆவது பொதுக்குழுவில் தலைவர் -மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் முழங்கி இருக்கிறார்கள். அண்ணாவும்- கலைஞருமான ஈருயிரானது மு.க.ஸ்டாலின் என்ற ஓயிருராய் ஆன காட்சியாக அது அமைந்திருந்தது.
இந்த உரை என்பது கழகத்தவர்களுக்கு பொதுவெளியில் அனைத்துத் தரப்பினரும் கொண்டாடப்படும் உரையாக அமைந்துள்ளது. இன்றைய சூழல் எத்தகையதாக அமைந்துள்ளது, அத்தகைய சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதாக அவரது உரை அமைந்தது. பொதுவெளியில் மிகமிக கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டிய தலைவர் அவர்கள், ‘ஒரு சொல் வெல்லும் - – ஒரு சொல் கொல்லும்’ என்று குறிப்பிட்டார்கள். இதனைத்தான் சமூக ஊடகங்களில் பெரும்பாலானவர்கள் சுட்டிக் காட்டி எழுதி இருக்கிறார்கள்.
“தலைவரின் இந்தப் பேச்சு, அரசியலுக்கு மட்டுமல்ல. குடும்பம், நட்பு, வியாபாரம் என அனைத்துக்கும் பொருந்தும்’’ என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “ஒரு சாமானியனாக எனக்கு உண்மையில் இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியின் தலைமை சரியாகச் சிந்திக்கிறது. செயல்படுகிறது. மற்றும் தன் கட்சியினருக்கு கண்டிப்பான வாத்தியாராகவும் பிரம்படி கொடுக்கவும் செய்கிறது. கழகம் நீடித்து வாழும்” என்று இன்னொரு இளைஞர் எழுதி இருக்கிறார்.
எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதை விளக்கிய தலைவர் அவர்கள், கழகத்தை எத்தகைய கொள்கைக் கூடாரமாக வளர்க்க வேண்டும் என்பதையும் அ.தி.மு.க.வின் நிலைமையுடன் ஒப்பிட்டுக் காட்டினார்.
“அம்மையார் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கலகலத்துக் கிடக்கிறது அ.தி.மு.க. உறுதியான வலிமையான தலைமை அந்தக் கட்சிக்கு அமையாததால் நான்கு பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது அ.தி.மு.க.,
தி.மு.க.வை எதிர்ப்பதைத் தவிர வேறு எந்தக் கொள்கையும், எந்தக் காலத்திலும் அ.தி.மு.க.வுக்கு இருந்தது இல்லை. அதனால்தான் இன்று உணர்ச்சியில்லாமல் கிடக்கிறது. எந்தக் கட்சியாக இருந்தாலும் தகுதியான தலைமையும் – -வலிமையான கொள்கையும் இருந்தால் மட்டும்தான் வெல்லும் என்பதற்கு உதாரணமாக நாம் திகழ்ந்து கொண்டு இருக்கிறோம்” என்று தலைவர் அவர்கள் பிரித்துக் காட்டி விளக்கிய பாங்கு மிகமிக முக்கியமானது.
இத்தகைய சூழலில் கழகம் என்பது இதுவரை கொள்கைப் பாசறையாக எப்படிச் செயல்படுகிறதோ அதே போலத்தான் எந்தக் காலத்திலும் செயல்பட வேண்டும் என்பதையும் தலைவர் உறுதிபட விளக்கி இருக்கிறார். ‘திராவிட மாடல்’ கொள்கைப்படி ஆட்சி நடப்பதைப் போல திராவிடவியல் கொள்கைகளை நெஞ்சில் தாங்கிய கொள்கை வீரர் கூட்டமாக கழகமும் செயல்பட வேண்டும் என்பது தலைவரின் கட்டளையாகும்.
இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடத்தி வரும் ‘திராவிடப் பயிற்சிப் பாசறைகளையே’ இதற்கான களங்கள் என்றும் முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். “இளைஞரணியின் செயலாளர் உதயநிதி முன்னெடுப்பின் காரணமாக நாடு முழுவதும் திராவிட மாடல் பாசறைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ‘முரசொலி’யில் ஊர் ஊராக நடக்கும் பட்டியலைப் பார்க்கும் போது எனக்கு மிகமிகமிக மனநிறைவாக இருக்கிறது. இத்தகைய பாசறைக் கூட்டங்களின் மூலமாகக் கொள்கை வீரர்களை தொடர்ந்து உருவாக்க வேண்டும். கட்சிக்கு கூட்டம் சேர்ப்பது முக்கியமல்ல, அது கொள்கைக் கூட்டமாக இருக்க வேண்டும். அதற்கு இத்தகைய பாசறைக் கூட்டங்கள் பயன்படும். இதனால் கழகம் பயன்பெறும்” என்று தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
முன்னதாகப் பேசிய இளைஞரணிச் செயலாளர் அவர்களும், இக்கூட்டங்களை நடத்தும் வாய்ப்பை இளைஞரணிக்கு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். இதே போன்ற இலக்கு, அனைத்து அணிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் இளைஞரணிச் செயலாளர் கேட்டுக் கொண்டார்.
சமூக நீதி – சுயமரியாதை - பகுத்தறிவு – பெண்ணுரிமை – மொழியுணர்வு – இன உணர்வு – மாநில சுயாட்சி – கூட்டாட்சித் தத்துவத்தின் செயல்பாடுகள் – பழக்க வழக்கங்கள் – கூட்டுறவு எண்ணம் – குடும்ப பாசம் – கருணை – அடுத்தவர்க்கு உதவுதல் – உயர்வு தாழ்வு பார்க்காமை – இவை அனைத்தை யும் உள்ளடக்கியதுதான் திராவிடவியல் கொள்கை ஆகும். இத்தகைய விழுமியங்களை இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் விதைக்கும் பணியை கழகத்தவர் அனைவரும் செய்தாக வேண்டும் என்று தலைவர் அவர்கள் விரும்பியது தான் அவரது பொதுக்குழு உரையாக விரிந்துள்ளது.
அரசியல் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டது இந்த கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் என்று நினைக்க முடியாது. அரசியல் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதே இத்தகைய கூட்டங்கள்தான். மரங்களுக்கு முக்கியம் வேர்கள் என்பதைப் போல இக்கொள்கைக் கூட்டங்களே வேர்கள். மரத்தை நிலத்தோடு இறுக்கிப் பிடித்திருப்பவை இந்த வேர்கள் தான். ‘மூச்சு வேர்கள்’ என்றும் இதனைச் சொல்வார்கள். ஒரு இயக்கத்துக்கு கொள்கை வீரர்கள்தான் மூச்சு வேர்கள் ஆவார்கள். அத்தகையவர்களை உருவாக்க வேண்டும் என்கிறார் தலைவர்.
“எந்தவொரு தனிமனிதரையும்விட கழகம்தான் பெரிது!
கொண்ட கொள்கைதான் பெரிது!
இதனை எந்நாளும் நெஞ்சிலேந்திச் செயல்படுங்கள்!” என்பதே தலைவரின் உறுதிமிகு கட்டளையாகும்!
நாம் கட்சிக்காரர்கள் அல்ல, கொள்கைக்காரர்கள் என்பதை நிரூபிக்கும் கட்டளைப் பொதுக்குழுவாகவே 15 ஆவது பொதுக்குழு நடந்துள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?