murasoli thalayangam
திமுக அரசின் சாதனைக்கும் இவருக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? வாய்க்கு வந்தபடி வடை சுடுகிறார் பழனிசாமி!
முரசொலி தலையங்கம் (98-10-2022)
என்ன செய்தார் பழனிசாமி?
இப்போது ஊர் ஊராகப் பட்டணப்பிரவேசம் போய் கொண்டு இருக்கிறார் பழனிசாமி.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தனது செல்வாக்கை(!) தூக்கி நிறுத்துவதற்கான பயணமாம் இது?அத்தகைய பயணத்தின் போது அவர் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். ‘அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த திட்டங்களைத் தான் தி.மு.க. அரசு தொடங்கி வைத்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெரிதாக எந்தத் திட்டத்தையும் கொண்டு வரவில்லை. 2021 பொதுத் தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை” என்று பொத்தாம் பொதுவாக உளறி வருகிறார்.
அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த திட்டங்களைத்தான் தி.மு.க. அரசு தொடங்கி வைத்து வருகிறது என்றால் அது என்னென்ன திட்டங்கள் என்று பழனிசாமி வரிசைப்படுத்தி இருந்தால், அவர் ஆண்ட யோக்கியதை வெளிப்பட்டு இருக்கும். அதை வரிசைப்படுத்தாமல் - அப்படி எதுவும் இல்லாததால் பொத்தாம் பொது வாகச் சொல்லி இருக்கிறார்.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட 60 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சொல்லி வருகிறார்கள். அவை என்னென்ன திட்டங்கள் என்பதையும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் வரிசைப்படுத்தி வருகிறார்கள். ‘முதலமைச்சர் நிறைவேற்றிவிட்டதாகச் சொல்லும் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை’ என்பதையாவது தனது புத்திசாலி மூளையால்(!) அவர் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதனையும் செய்யவில்லை. அதை விட்டுவிட்டு வாய்க்கு வந்தபடி வடை சுட்டுள்ளார் பழனிசாமி.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது பழனிசாமி திட்டமிட்டு இருந்ததா? மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என்பதன் மூலமாக இதுவரை 176.84 கோடி முறை மகளிர் இலவச வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு 39.21 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்கிறார்கள். இது பழனிசாமி திட்டமிட்டு இருந்ததா? வேளாண் துறைக்காக தனியாக நிதி நிலை அறிக்கையை பழனிசாமி போட்டாரா? ‘விவசாயி’ என்று சொல்லி பச்சைத் துண்டு போட்டு ஏமாற்றினாரே? மாட்டுவண்டியில் போனாரே? தனக்குத் தானே பாராட்டு விழா நடத்திக் கொண்டாரே? அவரது ஆட்சியில் தனி நிதி நிலை அறிக்கை வந்ததா? இன்றைக்கு தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு அதிகமாகி இருக்கிறது. இதன் மூலமாக விளைச்சல் அதிகமாகி இருக்கிறது. இதன் மூலமாக விலைவாசி குறைந்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் தமிழ்நாட்டில் உணவுப் பொருள்கள் விலை அதிகரிக்காததற்கு காரணம், உற்பத்தி அதிகமானது தான். வாங்கும் சக்தி அதிகமானதற்குக் காரணம் இதுதான் என்று பிரபல ஆங்கில நாளேடுகள் இப்போது எழுதுகின்றதே. பழனிசாமி காலத்தில் அப்போது எழுதினார்களா? இல்லை!
மிகப்பெரிய இளைய சக்தி உருவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார். இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், கல்லூரிக் கனவு - ஆகிய திட்டங்களின் மூலமாக பள்ளி - கல்லூரி களில் படிப்பவர்கள் மட்டுமல்ல படிப்பை முடிப்பவர்கள் தங்களது தனித்திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். சமூகம் எதிர்பார்க்கும் ஆற்றல் கொண்டவர்களாக வளர்கிறார்கள். இதன் மூலம் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான திறமைசாலிகளை தமிழ்நாட்டுக்குள் இருந்தே எடுத்துக் கொள்கிறது. இது இன்றைய அரசாக மட்டுமில்லாமல் - அடுத்த தலைமுறைகளின் அரசாகவும் இதனை வழிநடத்தி வருகிறார் முதலமைச்சர். அப்படி ஏதாவது திட்டத்தை பழனிசாமி தன் காலத்தில் தொடங்கி இருந்தாரா?
ஆசியாவின் புகழ்பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சிதைத்தது தான் அ.தி.மு.க. ஆட்சியின் சாதனையாகும். சென்னையில் இருப்பதைப் போல - மதுரையில் கலைஞர் பேரால் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறதே; இதற்கும் பழனிசாமிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த உரிமை கேட்டு சென்னை கடற்கரையில் போராடியவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டது அ.தி.மு.க. அரசு. இதோ ஜல்லிக்கட்டு நடத்த தனி மைதானம் கட்டித் தர திட்டமிட்டுள் ளது தி.மு.க. அரசு. இதற்கும் பழனிசாமிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? 200 அம்மா கிளினிக் அமைக்கப் போகிறேன் என்று அறிவித்தார் பழனிசாமி. கார் ஷெட்டில் அமைத்தார். சுடுகாட்டு தகன மேடையில் அமைத்தார். 100 அடி இடம் கிடைத்தால் அதில் தகர ஷெட் போட்டு பச்சைப் பெயிண்ட் அடித்தார். புதிதாக மருத்துவர்களை வேலைக்கு எடுக்கவில்லை. செவிலியர்களை வேலைக்கு எடுக்கவில்லை. அருகில் இருந்த மருத்துவமனையில் இருந்து அள்ளிக் கொண்டு வந்து, ‘இதோ பார் அம்மா கிளினிக்’ என்று கிலுகிலுப்பை காட்டினார். மருந்தும் இல்லை, மாத்திரையும் இல்லை, அது மருத்துவமனையும் இல்லை. வெறும் மனை மட்டும் தான். ஆனால் இன்று மக்களைத் தேடி மருத்துவம் சென்று கொண்டுள்ளது.
வீட்டுக்குள் படுத்திருப்பவரின் கட்டிலுக்கே சென்று சிகிச்சை தரப்படுகிறது. ஒரு கோடியைத் தொட்டுவிட்டது இந்த பயன்பாடு. நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதற்கும் பழனிசாமிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் பழனிசாமிக்கு! அவர் வெறும் கையில் முழம் போட்டுக் கொண்டு இருந்தார். கோடிக்கணக்கானவர்
கரங்களில் பூக்களைக் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.பழனிசாமி ஆட்சியில் நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையம் அமைத்தார். அதன் அறிக்கையை பெற்றுவிட்டது தி.மு.க. அரசு. தூத்துக்குடி
துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைத்தது அ.தி.மு.க. அரசு. அதனை முடித்து வைத்துவிட்டது தி.மு.க. அரசு.இதனை மனதில் வைத்துத்தான், ‘அ.தி.மு.க. ஆட்சியில் செய்ததைத் தான் தி.மு.க. அரசு செயல்படுத்துகிறது’ என்று சொல்கிறாரோ பழனிசாமி?!
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!