murasoli thalayangam
“பா.ஜ.க வளர்த்த இந்தியா இதுதான்.. ஒப்புதல் வாக்குமூலம் அளித்த நிதின் கட்கரி 'தேசவிரோதி'யா?” : முரசொலி !
நிதின் கட்கரியின் ஒப்புதல் வாக்குமூலம்!
ஒன்றிய பா.ஜ.க. அரசு, இந்தியாவை ஒளிமயமானதாக உயர்த்திவிட்டதாக நித்தமும் சொல்லி வருகிறது. அதிலும் நிதி அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன் அவர்கள், நாட்டில் எந்தப் பிரச்சினையுமே இல்லை என்பதைப் போல பேசி வருகிறார். அதன் உண்மைத் தன்மைகளை விளக்கினாலே அவர்களுக்கு பா.ஜ.க.வினரால், 'தேசவிரோதி' பட்டம் எளிதில் தரப்படுகிறது.
ஆனால் ஒன்றிய அமைச்சரவையில் மிக முக்கியமான அமைச்சராக மட்டுமல்ல - பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக 2009 முதல் 2013 வரை இருந்தவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர். அந்த அமைப்பில் இருந்தபடி வளர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமையகம் இருக்கும் நாக்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் இவர். இன்றும் பா.ஜ.க.வின் கணிசமான தரப்பினரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.
அத்தகைய மாண்புமிகு அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள், இன்று நடக்கும் பா.ஜ.க. ஆட்சி குறித்து வழங்கி இருக்கிற ஒப்புதல் வாக்குமூலமானது, அந்த ஆட்சியின் போக்கை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதுவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்திய பாரத் விகாஷ் பரிஷத் விழாவில் பேசி இருக்கிறார். இதனைவிட ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு பாராட்டுப் பத்திரம் தேவையில்லை. இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வரவில்லை, நரேந்திர மோடி ஆட்சி அமைத்த 2014 ஆம் ஆண்டுதான் உண்மையான சுதந்திர தினம் என்று சொல்லி வருகிறார்கள் பா.ஜ.க.வினர்.
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தியாவைப் பார்த்து பயப்படத் தொடங்கி விட்டதாகவும் பரப்பி வருகிறார்கள். வெளிநாட்டுக்குச் சென்று குடியுரிமை வாங்கி வாழ்ந்து வருபவர்கள், தங்களது குடியுரிமையை ரத்து செய்து விட்டு இந்தியாவுக்கு வரத் தொடங்கி விட்டதாக ஒரு 'வாட்ஸ் அப்' செய்தியைப் பரப்புகிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் பிரதமர் மோடி எதற்காகச் செல்கிறார் என்றால், ரகசியமான 'சிப்' ஒன்றை புதைத்து வைப்பதற்காகவாம். இப்படி எத்தனையோ கப்சாக்களின் மூலமாக காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. இவை அனைத்துக்கும் நெத்தியில் அடித்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நிதின் கட்கரி.
இதோ நிதின் கட்கரி காட்டும், பா.ஜ.க. வளர்த்த இந்தியா இதுதான்..
* இந்தியா வளமான நாடாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் வறுமை,பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், ஜாதிவெறி, தீண்டாமை மற்றும் பண வீக்கத்தை எதிர்கொள்கிறார்கள்.
* இங்கே பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும்.
* நாட்டில் நகர்ப்புறங்கள்தான் வளர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் வசதிகள், மற்ற வாய்ப்புகள் இல்லாததால் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களை நோக்கி வருகிறார்கள்.
* சமூக ஏற்றத்தாழ்வைப் போலவே பொருளாதார ஏற்றத் தாழ்வும் அதிகமாகி உள்ளது.
* நமது பொருளாதாரம் உலகில் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் என நினைக்கிறோம். ஆனால் இங்கு ஏற்றத்தாழ்வுகள் அதிகம்.
* சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த சமூகப் பொறுப்பு மற்றும் சமூக உணர்வுடன் பல்வேறு துறைகளில் எவ்வாறு பணியாற்றுவது என்பதுதான், நம் முன் உள்ள மிகப்பெரிய சவால்; - என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி சொல்லி இருக்கிறார்.
இவரும் 'தேச விரோதி' ஆகிவிடுவாரா? தேசவிரோதியாக ஆக்கி விடுவீர்களா? சொன்னது எதையும் செய்யாத அரசு பா.ஜ.க. அதைவிட, இருந்ததைவிட நிலைமையைத் தரைமட்டத்துக்கு தாழ்த்தியது பா.ஜ.க.
'கருப்புப் பணத்தை மீட்டு வருவோம்' என்றார்கள். மீட்கப்பட்டதா? இல்லை. 'மீட்டு வந்த பணத்தை தலைக்கு 15 லட்சமாகத் தருவோம்' என்றார்கள். 15 ரூபாய்கூட தரப்படவில்லை . 'விவசாயிகள் இரண்டு மடங்கு லாபத்தைப் பெறுவார்கள்' என்றார்கள். அவர்களிடம் இருக்கும் நிலத்தைப் பறிக்கவும் மூன்று வேளாண் சட்டங்கள் போடப்பட்டதுதான் மிச்சம். “அவன் பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது" -என்று எழுதினார் கவிக்கோ அப்துல்ரகுமான். அதுதான் பா.ஜ.க. ஆட்சி அனைத்துத் தரப்பினருக்கும் தந்த பரிசாகும்.
'ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலைகள் தரப்படும்' என்றார்கள். வேலை இழந்தோர் எண்ணிக்கை அதிகமான ஆண்டுகளாக பா.ஜ.க. காலம் ஆகிப் போனது. ஆனால் எப்போதும் கனவுலகப் பேச்சுகளுக்கு பஞ்சம் இல்லை. 2022 பற்றி பேசுவது இல்லை. 2030 பாருங்கள், 2047 பாருங்கள் என்று எல்லாமே 'தொலை நோக்கு'ப் பார்வை தான்.
* காங்கிரஸ் தலைவர் படேலுக்கு 3 ஆயிரம் கோடியில் சிலை
* அதானி குழுமத்தின் அபாரமான வளர்ச்சி
* காஷ்மீரத்தைப் பிரித்து, தனி உரிமையை ரத்து செய்தது; இந்த மூன்றைத் தவிர எந்தச் சாதனையும் இல்லை.
தமிழ்நாட்டுடன் பொருத்திப் பார்ப்போமா ஒரு சாதனையை? 2017-ல் அடிக்கல் நாட்டிய பிலாஸ்பூர் 'எய்ம்ஸ்' மருத்துவமனையை பிரதமர் மோடி நேற்றைய தினம் திறந்து வைத்துள்ளார். இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர், பிலாஸ்பூரில் ஆயிரத்து 1470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 'எய்ம்ஸ்' மருத்துவ மனையை அவர் திறந்து வைத்தார். நாட்டில் மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்கும், மருத்துவத்தை மேம்படுத்துவதற்கும் 'பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதனை அமைத் துள்ளார்கள். மதுரை மாவட்டம் - தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார்.
இதன் கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் சுற்றுச்சுவரைத் தவிர்த்து வேறு எந்தப் பணிகளும் நடக்கவில்லை. இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் அவர்களால்? சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு வேறுபாடு என்பதற்கு 'எய்ம்ஸ்' மருத்துவமனையே உதாரணம்! நமக்குத் தெரியும் இவை, நிதின் கட்கரி அறியமாட்டாரா? அதனால்தான் பொங்கி இருக்கிறார் பா.ஜ.க. அமைச்சர்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!