murasoli thalayangam
“வன்முறையாளர்களை ஒடுக்குவதில் அரசு தயக்கம் காட்டாது” - மதவாத சக்திகளுக்கு முரசொலி பதிலடி !
முரசொலி தலையங்கம் (29-09-2022)
மதவாத நச்சு சக்திகள் :
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் - ஆக்கபூர்வமான திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டு இருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் மதவாதப் பேர்வழிகள், தங்களது குதர்க்க சிந்தனை மூலமாக தமிழ்நாட்டை நாசம் செய்யக் கிளம்பி இருக்கிறார்கள். ஆக்கபூர்வமான அரசாக மட்டுமல்ல, அனைத்துத் தரப்பையும் அரவணைக்கும் அரசாகவும் இது இருக்கிறதே என்ற வருத்தம் அந்த மதவாத நச்சு சக்திகளுக்கு அதிகமாகி வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இருந்ததை விட - தி.மு.க. ஆட்சிக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் செல்வாக்கு அதிகமாகி இருப்பதைப் பார்த்தால் இந்த மதவாத சக்திகளுக்கு கோபம் அதிகமாகி வருகிறது. அனைத்துத் துறையின் வளர்ச்சி என்று சொல்கிறோம் என்றால், அதில் இந்து சமய அறநிலையத் துறையின் வளர்ச்சியும் இணைத்துத்தான் சொல்கிறோம். 3000 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோவில் பணியாளர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது. கோவில் நிலங்கள் குறித்த ஆவணங்கள் அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. துறை சார்பில் 10 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோவில் தல மரங்கள் பல்லாயிரம் நடப்பட்டுள்ளது. தமிழில் வழிபாடு நடத்துவதற்கு போற்றிப் பாடல் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒரு கால வழிபாடு நடக்கும் 12 ஆயிரம் கோவில் அர்ச்சகர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கோவில்களின் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தலைமுடி திருத்தும் பணியாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஒரு கால வழிபாடு செய்யும் கோவில்களுக்கு தலா 1 லட்சம் வழங்கப்படுகிறது. 81 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையில் துறை மேம்பாட்டுக்கு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு அனைத்துக் கோவில்களும் கண்காணிக்கப்படுகிறது. உண்மையான கடவுள் நம்பிக்கையாளர்கள், ஆன்மிக உள்ளம் கொண்டவர்கள், இறையியலாளர்களால் பாராட்டப்பட வேண்டிய அனைத்துச் செயல்களையும் தி.மு.க. அரசு செய்து வருகிறது.
ஆனால் பா.ஜ.க.வுக்கு அதிலெல்லாம் துளியும் நம்பிக்கை கிடையாது. இறையியல், கடவுள், ஆன்மிகம் என்பதைவிட அவதூறுகள், வதந்திகள், பொய்கள் ஆகியவற்றை மட்டுமே நம்பி கட்சி நடத்துபவர்களாக இருப்பதால்தான் தி.மு.க. அரசின் மீது விழுந்து பிறாண்டிக் கொண்டு கிடக்கிறார்கள்.
பழிகள், வதந்திகள், அவதூறுகள் மூலமாக தமிழ் நிலப்பரப்பை நாசம் செய்ய நினைக்கிறார்கள் இந்த மதவாத சக்திகள். பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இவர்களது செயல்கள், அதிர வைப்பவையாக இருக்கின்றன.
“எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன. மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்கப் பார்க்கின்றன" என்றும் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.
ஒரு சில இடங்களில் பா.ஜ.க. ஆதரவுப் பிரமுகர்களின் வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகள் வன்முறையாளர்களால் வீசப்பட்டுள்ளன. அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு விட்டார்கள். மொத்தம் 14 பேரைக் காவல் துறை கைது செய்துள்ளது.
இது கலவரமாக மாறாமல் - வன்முறையாகப் பரவாமல் - காவல்துறையின் துரிதமான, கடுமையான செயல்பாடுகள் மூலமாக தடுக்கப்பட்டு விட்டது. வன்முறையோ - குற்றச்செயலோ எந்தப் பக்கம் இருந்து வந்தாலும் - அதனை யார் செய்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு தயக்கம் காட்டாது என்பதை, ஒவ்வொரு நிகழ்வு களிலும் காவல்துறை நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.
அதே நேரத்தில் வார்த்தைகளில் வெப்பத்தைக் கூட்டி - வன்முறையைத் தூண்டிவிட சமூக விரோத மதவாத சக்திகள் முனையுமானால், அவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட வேண்டும். இவர்களை தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் காண்பார்கள்.
அனைத்து அரசியல் தத்துவங்களும் கடுமையான கருத்து மோதல் நடத்திய களம்தான் தமிழ்நாடு. ஆனால் எங்கும் எந்தச் சூழலிலும் வன்முறை மோதல் பூமியாக தமிழ்நாடு இருந்தது இல்லை. அத்தகைய மோதலை உருவாக்க மதவாத சக்திகள் முனைகின்றன. ‘அடித்தால் திருப்பி அடிப்பேன்', 'நான் எதையும் செய்வேன்', 'போலீஸ் அதிகாரிகள் நிரந்தரமானவர்கள் அல்ல', 'எல்லோருமே டெல்லிக்குக் கட்டுப்பட்டவர்கள்தான்', 'நாங்கள் 17 மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறோம்', - என்றெல்லாம் பேசி மிரட்டுவது என்பது, அண்ணாமலையின் தைரியத்தைக் காட்டவில்லை. பா.ஜ.க.வின் உள்கட்சி நெருக்கடி காரணமாக பயந்து போய் இப்படிப் புலம்பி வருகிறார் என்பதையே காட்டுகிறது.
சொந்தக் கட்சிக்காரர்களால் அனாதையாக்கப்பட்ட அண்ணாமலையின் புலம்பல்களாக இவை ஒரு பக்கம் அமைந்தாலும், இன்னொரு பக்கத்தில் எதையாவது சொல்லி அமைதியைக் குலைக்கும் பொறுப்பற்ற தன்மையே இதில் வெளிப்படுகிறது. அமைதியைக் குலைக்கும் எவராக இருந்தாலும் மக்களால் அந்நியப்படுத்தப்படுவார்கள் என்பதை அனைவரும் அறிவோம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!