murasoli thalayangam
"தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கி தமிழை உலகமெல்லாம் பரவ வகை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்": முரசொலி!
முரசொலி தலையங்கம் (27-09-2022)
கழகமும் கழகமும்!
திராவிட முன்னேற்றக் கழக அரசு, தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கி இருக்கிறது!
“தமிழ் வாழும் காலமெல்லாம் நின்று நிலைபெறக் கூடிய தமிழ்ப் பரப்புரைக் கழகத்தைத் தொடங்கி வைப்பதை எனது வாழ்நாள் கடமையாக மட்டுமல்ல -வாழ்நாள் பெருமையாகவும் கருதுகிறேன்.
‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ - என்பதை முழக்கமாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் தொடங்குவது என்பது முழுமுதற் கடமையாகும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமை பொங்க அறிவித்துள்ளார்கள்.
கழக ஆட்சி தொடங்கிய காலம் முதல் தமிழாட்சி தான் நடந்து வருகிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள், நாம் வாழும் நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். தமிழும், ஆங்கிலமும் தான் என்ற இருமொழிக் கொள்கையை சட்டமாக்கினார். பல்லாயிரம் ஆண்டு பழமை கொண்ட தமிழுக்கு செம்மொழித் தகுதியை ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றுத்தந்தார் தமிழினத் தலைவர் கலைஞர். பொறியியல் கல்லூரி வரை தமிழில் படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கி அனைத்து நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வழங்கினார் கலைஞர். இதன் தொடர்ச்சியாக தமிழாட்சியை நடத்தி வருகிறார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவிகிதம் நியமனம் செய்யும் பொருட்டு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடம் தகுதித் தேர்வாக கட்டாயம் என ஆக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழித் தகுதித் தாள் தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயப்படுத்தப்படுகிறது. கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்த பட்சம் 40 சதவிகித மதிப்பெண் தேர்ச்சி கட்டாயப்படுத்தப்படுகிறது. தகுதித் தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதரப் போட்டித் தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது. தற்போது நடைமுறையில் உள்ள பொதுத்தமிழ், ஆங்கிலம் ஆகிய தேர்வுகளில் ஆங்கிலத் தாள் நீக்கப்பட்டு பொதுத் தமிழ்த்தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.
ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளைப் பொறுத்தவரையில் கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இதுதான் தமிழாட்சியின் முக்கிய மகுடம் ஆகும்.
அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்த அரசு உதவி வருகிறது. சென்னையில் நிரந்தர புத்தகப் பூங்கா அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.மதுரையில் கலைஞர் பெயரால் ரூ.114 கோடி மதிப்பீட்டில் மாபெரும் நூலகம் அமைய இருக்கிறது.
* தமிழ்நூல்கள் நாட்டுடமை
* எழுத்தாளர்கள் பிறந்தநாளில் கூட்டங்கள்
* குறைந்த விலையில் சங்க இலக்கிய நூல்கள் வெளியீடு
* திராவிடக் களஞ்சியம் உருவாக்கம்
* இதழியலாளர்க்கு கலைஞர் எழுதுகோல் விருது
* உலகப் பல்கலைக் கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள்
* நூலகங்களுக்கு சிற்றிதழ்கள்
* இலக்கியமாமணி விருதுகள்
* உயரிய விருது பெற்ற எழுத்தாளர்க்கு கனவு இல்லம்
* திசை தோறும் திராவிடம்
*முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம் - என ஏராளமான தமிழ்க் காப்புத் திட்டங்களை இன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்தி வருகிறது.
1960,70 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட 875 நூல்களில் 635 நூல்களை இந்த ஓராண்டு காலத்தில் மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழின் மிகச் சிறந்த படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகி உள்ளது. இத்தகைய மொழிபெயர்ப்பு பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
கால்டுவெல்லின் ‘திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலை மொழி அறிஞர் பா.ரா.சுப்பிரமணியம் அவர்கள் மொழிபெயர்த்துத் தர அதனை அரசு வெளியிட்டுள்ளது. சங்க இலக்கிய நூல்களை செம்பதிப்பாக வெளிவர இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மகுடம் வைப்பதைப் போல தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி உள்ளார்கள்.
‘இந்தி பிரச்சார சபா’க்களைப் போல இவை தமிழ்ப் பரப்புரைக் கழகமாக உருவெடுத்துள்ளன.
உலக நாடுகளில் உள்ள தமிழ் உறவுகள் அனைவரும் எளிதில் தமிழ்ப் படிக்கவே இந்த பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மூலமாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் இணையக் கல்விக் கழகத்தை உருவாக்கியதே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.
ஐந்து நிலைகளில் இந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு நிலை பாடப்புத்தகம் வெளியாகி இருக்கிறது. அந்த புத்தகம் 24 மொழிகளில் உருவாகி இருக்கிறது. பாடமாக படிக்காமல் செயல்வழிக் கற்றல் முறைப்படி துணைக் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. ஒளி - ஒலிப் புத்தகமாக இணைய வழியில் கற்கலாம். அசைவூட்டும் காணொலிகள் அதிகமாக இருக்கும். புத்தகத்தில் உள்ள பயிற்சிகளை தானே செய்து பார்த்துக் கொள்ளலாம். தமிழ் மொழியை தமிழர்களும், தமிழ் படிக்க விரும்பும் அயல் மொழியினரும் கற்றுக் கொள்ள வாய்ப்பாக இந்த முயற்சியை தமிழ் இணையக் கல்விக் கழகம் வடிவமைத்துள்ளது.
இப்படி கற்றுக் கொள்பவர்கள் தேர்வு எழுதுவதற்காக கற்றல் மேலாண்மை அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இப்பயிற்சிக்கு முன் வருபவர்களுக்கு பட்டயச் சான்றிதழும் தரப்பட இருக்கிறது. இதன் மூலமாக தமிழ் ஆர்வம் கொண்டவர்கள் அனைவரும் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களாக ஆவார்கள். அவர்களது தமிழ் ஆர்வமானது, சமூகத்துக்கும் பயன்படும். தமிழ்க் கலைகள், இதே பாங்கில் கற்றுத் தரப்பட உள்ளது. தேவாரம் உள்ளிட்ட நம்முடைய இலக்கியங்கள் இசை வடிவிலும் கிடைக்க இருக்கின்றன.
‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்றான் கவி. பரவச் செய்து கொண்டு இருக்கிறார் தமிழாட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்