murasoli thalayangam
“வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாகவும், சமூக ஒருமைப்பாட்டு நாளாகவும் கொண்டாடுவோம்” : முரசொலி!
தனிப்பெரும் கருணை
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன். பசியினால் அயர்த்தே
வீடு தோறிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என்
நேர் உறக் கண்டுளம் துடித்தேன்
ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டு இளைத்தேன்’ –
– என்று பாடியவர் தனிப்பெரும் கருணையான வள்ளலார் இராமலிங்கர். பாடியவர் மட்டுமல்ல; தன் பாட்டுக்கு ஏற்ப வாழ்ந்த வள்ளலார் அவர்.
1867ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் வடலூரில் அடிகள் தொடங்கினார் சத்திய தருமச் சாலை. அடுப்பு மூட்டினார். இன்றுவரை எரிந்து கொண்டு இருக்கிறது நெருப்பு. பசிப்பிணி போக்கி வருகிறது வள்ளலாரின் தரும சிந்தனை வயிறு.
‘பசிப்பிணி மருத்துவராக’ இயங்கிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வள்ளலார் பிறந்த நாளை ‘தனிப்பெரும் கருணை நாளாக’ அறிவித்திருக்கிறார். இந்த ஆண்டு வள்ளலார் பெயரில் முப்பெரும் விழா நடத்த இருப்பதாக அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவித்திருக்கிறார்.
* வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள்
*அவர் தொடங்கிய தரும சாலைக்கு 156 ஆண்டுகள்
* அவர் ஏற்றிய தீபத்துக்கு 152 ஆண்டுகள் -– ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அக்டோபர் 5 ஆம் நாள் கொண்டாட இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. ‘திராவிட மாடல்’ அரசின் இன்னொரு பரிமாணம் இது.
இறையியலுக்கு எதிரானதாக தி.மு.க.வைக் கட்டமைக்க ஒரு கூட்டம் துடித்துக் கொண்டு இருக்கிறது. எது ‘இறையியல்’ என்பதுதான், நமக்கும் அவர்களுக்குமான பிரச்சினையே. மக்களைப் பிளவுபடுத்துவது இறையியலாக இருக்க முடியாது. அது அவர்களது ‘இரை’ இயலாக வேண்டுமானால் இருக்கலாம்.
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!” என்பதுதான் நமது இறையியல். இதன் தொடக்கம்தான் வடலூர் வள்ளலார்.
‘’சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்
அலைந் தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே! “
என்கிறார் வள்ளலார் இராமலிங்கர்.
“சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்” - என்றவர் அவர்.
அதாவது அனைத்து மதங்களையும் கடந்த ஒருமைப்பாட்டை இவர் வலியுறுத்தினார். மூடநம்பிக்கைகளை எதிர்த்தார். புராணங்கள், இதிகாசங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றைக் கற்பனைகள் என்றார். மோட்சம் நரகத்தை ஒப்புக் கொள்ளவில்லை. நால் வருணத்தை நிராகரித்தார். ‘கண்மூடி வழக்கமெல்லாம் மண் மூடிப் போக’ என்றார். “அறிவின் முதிர்ச்சியால் உயர்ந்தவர் உண்டே தவிர பிறப்பால் அல்ல” என்றார்.
இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்மொழித் துறவியாக இருந்தார். சென்னையில் இருந்த காலத்தில் அவர் சந்திரசேகர சங்கராச்சாரியார் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. ‘அனைத்து மொழிகளுக்கும் சமஸ்கிருதமே மாத்ரு பாஷை’ (அதாவது தாய் மொழி) என்றார் சங்கராச்சாரியார்.
‘’அப்படியானால் தமிழ்தான் அனைத்து மொழிகளுக்கும் பித்ரு பாஷை’’ என்றவர் இராமலிங்கர். (அதாவது தந்தை மொழி) அத்தகைய நெஞ்சுரம் கொண்டவர் இராமலிங்கர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் புரட்சிவிதைகளைத் தூவியவர் இராமலிங்கர். (1823 - 1874) சன்மார்க்க சங்கம், சத்திய ஞான சபை ஆகியவற்றை உருவாக்கி வடலூரில் வாழ்ந்தார். பசிப்பிணி மருத்துவராய் இருந்தார்.
“மண்ணுல கதிலே உயிர்கள் தாம் வருந்தும்
வருத்தத்தை ஒரு சிறிதெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும் நான் சகித்திட மாட்டேன்” – என்றவர் வள்ளலார்.
பசி ஒழித்தல் கோட்பாட்டின் உயிர் விளக்கமாக ஒளிவீசிக் கொண்டு இருக்கிறார் இராமலிங்கர். அத்தகைய வள்ளலாரைக் கொண்டாடுகிறது ‘திராவிட மாடல்’ அரசு. காலை உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்த அரசு இது. வள்ளலாரைப் போற்றாமல் யாரைப் போற்றும்?
தனித்தனி சமையல் அல்ல, பொதுச் சமையலறையை உருவாக்கி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். மொத்தமாக பொதுச் சமையலறையில் உணவைத் தயாரித்து அதனை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல உத்தரவிட்டுள்ளார். இதுதான் வடலூரில் வள்ளலார் மூட்டிய அடுப்பு ஆகும். அங்கே வந்து சாப்பிட வேண்டும். ஆனால் இப்போதோ மாணவர்களுக்கு அவர்களது இடத்துக்கு உணவு போய்ச் சேருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து இப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சஞ்சய் கிஷன் கவுல் அவர்கள் சமீபத்தில் நடந்த விழாவில் பேசும்போது, “தமிழ்நாடு பல்வேறு சமுதாய சீர்திருத்த இயக்கங்களின் வளமான வரலாற்றை நமக்களித்து அதன் முன்னோடியாகவும் இருந்து வருகிறது. அதன் காரணமாக சமுதாய உரிமைகளைப் பாதுகாக்க ஏதுவாக இருக்கிறது.
அதிகமாக நேசித்து அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற உயரிய கோட்பாட்டை வள்ளலார் மற்றும் பெரியார் அவர்களிடம் நாம் கற்றுக்கொண்டோம் என்பதைப் பெருமையாக எடுத்துக்கொள்கிறேன். அவர்களின் கருத்துகளில் ஒன்றிணைந்து தோளோடு தோள் நிற்கும் பெருமை நமக்குக் கிடைத்திருக்கிறது” என்றார்.
வள்ளலாரின் அடையாளம் என்பது இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கிறது. பரவவும் வேண்டும்.
‘’ஏழைகளுக்கு உணவு கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியை அடைவார்கள்? அந்த பசியைப் போக்கினால் எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகும்?’’ என்று உருகிச் சொன்னவர் வள்ளலார். அவரது பிறந்த நாளை ‘தனிப்பெரும் கருணை நாளாக’ மட்டுமல்ல; சமூக ஒருமைப்பாட்டு நாளாகவும் கொண்டாடுவோம்!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?