murasoli thalayangam
“இது இந்தியாதான்.. ஹிந்தியா அல்ல” : மோடி - அமித்ஷா கும்பலுக்கு நெற்றிப் பொட்டில் அடித்து சொன்ன முரசொலி !
ஹிந்தியா அல்ல இது-1
உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்போது இந்திஷா ஆகி இருக்கிறார்: இந்தி பேசும் மாநிலங்களின் கட்சிதான் பா.ஜ.க என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டு இருக்கிறார். இந்தி பேசும் மாநிலங்களின் தயவு இருந்தால் போதும் என்றும் அவர் நினைத்துக் கொள்கிறார்.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் இந்திப் பாசத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இந்தி தாய் மொழி அல்ல என்பதுதான் வேதனையான வேடிக்கை, புலியைவிட புலி வேஷக்காரர்கள் நன்றாக நடிப்பார்கள். அதைத்தான் இவர்கள் இருவரும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
"அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒற்றுமை என்னும் கயிற்றில் இணைக்கிறது" என உள்துறை அமைச்சர் அமித்ஷா அரிய கருத்து ஒன்றைத் தெரிவித்து இருக்கிறார். எப்படி இணைக்கிறது என்பதை அவர் சொல்லவில்லை. அவரால் சொல்ல முடியாது, இந்திக்காரர்கள் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்து தமிழ் கற்றுக் கோண்டு பேசுகிறார்கள். அவர்களை இங்கு ஒற்றுமைப்படுத்த இந்தி பயன்படவில்லை. தமிழ்நாடுதான் பயன்படுகிறது.
"அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒற்றுமை என்னும் கயிற்றில் இணைக்கிறது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் தோழன் இந்திதான், மோடி அரசாங்கம் இந்தி உட்பட அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிறது. இந்தியைப் பாதுகாக்கவும், பிரபலப்படுத்தவும் பங்காற்றியவர்களுக்கு வணக்கம்.” என்கிறார் அமித்ஷா.
அனைத்து இந்திய மொழிகளுக்கும் இந்தி எப்படி தோழனாக இருக்க முடியும்? அனைத்து இந்திய மொழிகளிலும் இந்தியைக் கலந்து பேசுகிறார்களா? அனைத்து மாநில மொழிகளும் இந்தியில் இருந்து தோன்றியதா? அனைத்து இந்திய மொழிகளின் வளர்ச்சிக்காகவும் மோடி அரசாங்கம் பாடுபடுகிறது என்றால் இந்தி தினம் கொண்டாடுவதைப் போல மற்ற இந்திய மொழி தினங்கள் கொண்டாடப்படுகிறதா? அதற்கு அமித்ஷா அறிக்கை கொடுப்பாரா? எதற்காக இந்தியை வளர்க்கும்போது மற்ற இந்திய மொழிகளை வம்பிழுக்க வேண்டும்?
“ஒரு மொழிக்குரிய நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைப்பது இயல்பானது. ஆனால், கலாச்சாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்கிற பண்பாட்டிற்கு நேர் எதிரானது" என்று நெற்றிப் பொட்டில் அடித்ததைப் போலச் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
"சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். இந்தி சட்டப்படியான தேசிய மொழியும் அல்ல, அது மட்டுமே ஆட்சி மொழியும் அல்ல. இந்திய ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக இந்தி உள்ளது.
அதுபோலவே. இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அலுவல் மொழியான இந்தியின் ஆதிக்கத்திலிருந்து தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் தனித்தன்மைமிக்க மொழிகளைக் காப்பதற்காக அரசியல் சட்டத்தின் வழியே போடப்பட்ட வேலிதான் இணை அலுவல் மொழி என்கிற ஆங்கிலம்," என்பதை முதலைமச்சர் அவர்கள் தெரிவுபடுத்தி இருக்கிறார்கள். இது இந்தியாதான். ஹிந்தியா அல்ல” என்றும் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். இந்தி நீங்கலாக மற்ற இந்திய மொழி பேசும் மக்களின் முழக்கமாக இதுதான் அமைய வேண்டும்.
இந்தி மொழி இந்தியாவுக்கு உலக அளவில் சிறப்பு பெருமை சேர்த்துள்ளது. அதன் எளிமை, தன்னிச்சையான தன்மை மற்றும் உணர்வுத் திறன் எப்போதும் மக்களை ஈர்க்கிறது. நாட்டின் மிகப்பெரிய பேசும் மொழியை வளப்படுத்தவும். வலுப்படுத்தவும் அயராது முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருக்கிறார். இந்தி மொழியால் இந்தியாவுக்கு உலக அளவில் சிறப்புப் பெருமை சேர்ந்துள்ளது என்ற வார்த்தைகளுக்குப் பொருள் என்ன? அதனை மட்டும் விளக்கி யாராவது சொல்லட்டும்.
இந்தி என்ற மொழியை தனிப்பட்ட முறையில் யாரும் குறை சொல்ல வரவில்லை. அதுவும் லட்சக்கணக்கான மக்களுக்கு தாய் மொழி. அதனைக் கொச்சைப்படுத்தவோ, இழிவுபடுத்தவோ வரவில்லை. ஆனால், இந்திதான் இந்தியாவைக் காப்பாற்றும், உலகத்துக்கு இந்தியாவின் பெருமையைச் சொன்னது இந்திதான் என்பது போன்ற பம்மாத்துகள் எதற்காக? இந்தியா என்பது இந்தி பேசும் மக்களுக்கானது என்பதைக் கட்டமைப்பதற்கு என்ன காரணம்?
இந்தி பேசும் ஏழு மாநில மக்களின் வாக்குகளை வாங்கி ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கான தந்திரமாக இந்தி வேஷம் கட்டுவதுதான் காணச் சகிக்க முடியாததாக இருக்கிறது.
ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியை உட்கார வைக்கப் பார்க்கிறார்கள். அதற்கான தந்திரமாக தாய்மொழிப் பற்று என்ற பம்மாத்தும் செய்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்னால் டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்துப் பேசும்போது, உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும். என்றார்.
"பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாத வரையில், அது பரப்பப்படாது. இந்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது. அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். அப்போதே பலத்தை எதிர்ப்பை இது உருவாக்கியது. உடனே நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்றார் அமைச்சர் அமித்ஷா.
மொழிப்பிரச்சினையை இவர்கள் கிளப்புவதற்கு உண்மையான காரணம் என்ன?
தொடரும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!