murasoli thalayangam
"‘மக்களோடு செல்’ என்றார் பேரறிஞர் அண்ணா.. இன்று மக்களோடு இருக்கிறார் முதலமைச்சர்.." முரசொலி புகழாரம் !
அறிஞர் அண்ணாவே ஆள்கிறார்!
அறிவுக்கு விருந்தாம் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் வயிற்றுக்கு உணவு வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கடந்த மாதத்தில் ஒருநாள் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கான மனவளக் கலை பயிற்சி வகுப்பினைத் தொடங்கி வைக்கச் சென்றிருந்தார் முதலமைச்சர்.
அதிகாலையிலேயே பள்ளிக்குப் புறப்பட்டு வந்த பிள்ளைகளிடம், ‘காலையில் சாப்பிட்டு விட்டுத்தான் வந்தீர்களா?’ என்று கேட்டார். சிலர் சாப்பிட்டதாகச் சொன்னார்கள். சில பிள்ளைகள் சாப்பிடவில்லை என்று சொன்னார்கள். ‘‘பள்ளிக் கூடங்களில் காலை சிற்றுண்டியை முதல்கட்டமாகத் தொடங்கும் திட்டத்துக்கு நேற்று தான் கையெழுத்துப் போட்டேன்’’ என்று அந்த நிகழ்ச்சியில் சொன்னார்கள்.
‘‘பெரும்பாலான பிள்ளைகள் காலையில் புறப்படும் போது சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறார்கள் என்று சொல்கிறார்கள். காலையில் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. டாக்டர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் காலையில் தான் அதிகமாக சாப்பிட வேண்டும் என்கிறார்கள். மதியம் அதைவிட குறைவாகவும் -
இரவில் குறைவாகவும் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் எல்லாரும் காலையில் குறைவாகவும், இரவு அதிகமாகவும் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அது மாதிரி இருக்கக் கூடாது.
காலை உணவை யாரும் தவறவிடக் கூடாது. பள்ளிக்கூடத்துக்கு அதிகாலையில் அவசர அவசரமாகக் கிளம்பி வர வேண்டிய சூழல் இருப்பதை மனதில் வைத்து 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடங்கப் போகிறது’’ என்று அறிவித்தார்கள்.
வெள்ளுடை வேந்தர் தியாகராயர்
பெருந்தலைவர் காமராசர்
தமிழினத் தலைவர் கலைஞர்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். -ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட இந்த திட்டமானது இன்றைய அரசால் அடுத்த வளர்ச்சியை அடையப் போகிறது. இதன் மூலமாக மாணவச் சமுதாயம் மட்டுமல்ல, தமிழகக் கல்வியே மேம்பாடு அடையப் போகிறது.
தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியை மேம்படுத்த எத்தனையோ திட்டங்கள் தீட்டியுள்ளது தி.மு.க. அரசு.
* இல்லம் தேடிக் கல்வி
* நான் முதல்வன்
* பள்ளி மேலாண்மைக் குழுக்கள்
* பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி
* சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி
* 1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்க்கு எண்ணும் எழுத்தும் இயக்கம்
* பயிற்சித் தாள்களுடன் கூடிய பயிற்சிப் புத்தகங்கள்
* 9 முதல் 12 வரையிலான மாணவர்க்கு வினாடிவினா போட்டிகள்
* மாணவர் மனசு என்ற ஆலோசனைப் பெட்டி
* ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம்
* கணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி
* உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்
* வகுப்பறை உற்று நோக்கு செயலி
* வெளிப்படையான ஆசிரியர் கலந்தாய்வு
* முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டம்
* இளந்தளிர் இலக்கியத் திட்டம்
* கல்வித் தொலைக்காட்சி
* வயது வந்தோருக்கான கற்போம் எழுதுவோம் திட்டம்
* கல்வி தொடர்பான தரவுகள் கொண்ட கையேடு தரப்பட்டுள்ளது.
* மின் ஆசிரியர் என்ற உயர்தர டிஜிட்டல் செயலி வழங்கப்பட்டுள்ளது.
* மாதிரிப்பள்ளிகள்
* தகைசால் பள்ளிகள்
* ஸ்மார்ட் வகுப்பறைகள்
*பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் ( 7500 கோடி மதிப்பில்)
- இவை அனைத்தும் சேர்ந்து மாபெரும் கல்விப் புரட்சியை நிகழ்த்திக் கொண்டு இருக்கும் சூழலில் காலை உணவுத் திட்டம் என்பது மிகப்பெரிய ஊக்க சக்தியாக இருக்கப் போகிறது.
மதிய உணவுத் திட்டத்தைப் போலவே இன்னும் சொன்னால் அதை விடக் கூடுதலாகவே காலை உணவுத் திட்டத்தின் பலன் என்பது இருக்கப் போகிறது. காலையிலும் உணவு தருகிறார்கள் என்பதால் மாணவர் சேர்க்கையானது அதிகரிக்கும். அதேபோல் மாணவர்களின் வருகைப் பதிவும் சீராகவும் இருக்கும்.
காலை உணவு தாமதம், காலையில் சாப்பிடவில்லை, அதனால் ஏற்பட்ட மனச் சோர்வு காரணமாக பள்ளிக்கு வருகை தரும் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைகிறது. காலையில் உணவு தருகிறோம் என்றால் அந்த வருகைப் பதிவானது சீராகவும் ஒழுங்கானதாகவும் இருக்கும். இதன் மூலம் பள்ளியின் வருகைப் பதிவானது முறையானதாக மாறிவிடும்.
குழந்தைகளின் உடல் நலன் வலிமை பெறும். பலவீனமான உடலானது கல்வியைச் சரியாக ஏற்றுக் கொள்ளாது. உள்வாங்கிக் கொள்ள இயலாது. அந்தக் குறைபாடு நீங்கும். உடல் வலிமையுடன் மனவலிமையும் சேரும். இது அந்தக் குழந்தையின் குடும்பத்துக்கும், பெற்றோருக்கும் மனநிறைவைத் தரும். அவர்கள் குடும்பமே நிம்மதியை அடையும். வறுமை சூழ்ந்த குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளையும் ஏதாவது வேலைக்கு அனுப்பி வைக்கின்றன. அதன் மூலமாக அவர்களது உணவுத் தேவையைத் தீர்த்துக் கொள்ளட்டும் என்று நினைக்கின்றன. குடும்பப் பிரச்சினையின் ஆபத்தான சுழற்சி இது. இந்த சுழற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது காலை உணவுத் திட்டம்.
‘‘வீதியோரத்தில் வேலையற்றதுகள், வேலையற்றதுகளின் எண்ணத்தில் விபரீதங்கள், வேந்தே இதுதான் காலத்தின் குறி!” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா. அத்தகைய சூழல் திராவிட மாடல் ஆட்சியில் இருக்கக் கூடாது என்று திட்டமிட்டுத் திட்டங்களைத் தீட்டி வருகிறார் அண்ணாவின் தம்பியாய் கலைஞரின் உடன்பிறப்பாய் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
பேரறிஞர் பெருந்தகையே! கேள்விக்குறிகளை ஆச்சர்யக் குறிகளாக மாற்றும் ஆட்சியை நீங்கள் உருவாக்கிய கழகம் தந்து கொண்டு இருக்கிறது. 'தாழ்ந்த தமிழகமே' என்று நீங்கள் அழைத்தீர்கள். இன்றைய தமிழகம் தலைநிமிர்ந்து கொண்டு இருக்கிறது. ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று நீங்கள் சொன்னீர்கள். தெற்கை இன்று வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது வடக்கு. ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்று சொன்னீர்கள். ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்காக இன்றைய அரசு செயல்பட்டு வருகிறது. ‘மக்களோடு செல்’ என்றீர்கள். மக்களோடு மக்களாகத் தான் முதலமைச்சர் இருக்கிறார்.
அண்ணாவே ஆள்கிறார்!
அண்ணாவே சிறக்கிறார்!
அண்ணாவே மகிழ்கிறார்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!