murasoli thalayangam
"ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா" - நஷ்டம் நாட்டுக்கு, லாபம் தனியாருக்கா ? - முரசொலி கேள்வி !
முரசொலி தலையங்கம் (14.9.2022)
மின் கட்டணம் - பல உண்மைகள் - 2
ஒன்றிய அரசின் மின்சாரத் திருத்தச் சட்டத்தின் மிக மோசமான தன்மையை மறைக்கவே தமிழக அரசு மீது பழிபோட்டுக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. ஒன்றிய அரசின் மின்சாரத் துறை அமைச்சகம், மின்சார சட்டத் திருத்த மசோதா - 2022 ஐ ஆகஸ்ட் 8 ஆம் நாள் மக்களவையில் அறிமுகம் செய்தது. இது அனைத்துத் தரப்பாலும் கடுமையாக எதிர்ப்பை எதிர்கொண்டது. உடனடியாக எரிசக்தி நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். எப்போது கொண்டுவந்தாலும் எதிர்க்கப்பட வேண்டிய மக்கள் விரோத, மாநில விரோத சட்டம் ஆகும்.
விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் இலவசமாகவோ, மானியமாகவோ தரப்பட்டு வரும் மின்சாரத்தை நிறுத்துவதற்கான தந்திரம்தான் ஒன்றிய அரசின் இந்த சட்டம் ஆகும். ‘நிறுத்தமாட்டோம்’ என்று அவர்கள் இன்று சமாதானம் சொல்லலாம். முழுக்க முழுக்க மின் விநியோகத்தை தனியார் மயமாக ஆக்குவதற்கு திட்டமிடுகிறார்கள். எந்த தனியார் நிறுவனம் மானியத்துக்கும், இலவசத்துக்கும் மின்சாரத்தைத் தரும்? தாருங்கள் என்று யார் சொல்ல முடியும்?
‘’மானிய விலையில் நாங்கள் மின்சாரம் தருகிறோம், இலவசமாகவும் தருகிறோம். இதனைப் பெறும் ஏழைகளின் கதி என்ன?’’ என்று நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேட்ட கேள்விக்கு பதில் இல்லை! மின்சார உற்பத்தியையும், மின் விநியோகத்தையும் படிப்படியாக தனியார் மயமாக்குவதுதான் ஒன்றிய அரசின் மின்சார சட்டம் ஆகும்.
இப்படி ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு முன்னால் மாநில அரசுகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஏனென்றால் மின்சாரம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்றிய அதிகாரப் பட்டியலில் இருக்கும் பொருள் அல்ல. அது பொதுப் பட்டியலில் இருக்கும் பொருள் ஆகும். அதாவது ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்குமான பொருள் ஆகும். இரண்டும் இணைந்துதான் மின்சாரச் சட்டத்தை உருவாக்க முடியுமே தவிர தானே ஒன்றிய அரசு ஒரு மின்சாரச் சட்டத்தை உருவாக்கிவிட முடியாது. உருவாக்கிக் கொள்ள முடியாது.
மாநில அரசுகளின் கீழ் உள்ள மின் பகிர்வை ஒன்றிய அரசு தட்டிப் பறிப்பதாக இதன் பல விதிகள் அமைந்துள்ளன. 5,11,12,13,15,23 ஆகிய பிரிவுகள் இத்தகையதாக அமைந்துள்ளன. மின் விநியோகிப்பாளர்களுக்கான நிபந்தனைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் என்பதே ஒன்றிய அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமான பல பிரிவுகள் உள்ளன. தனியார் நிறுவனங்கள், மின் விநியோகத்தில் ஈடுபட்டால் அவர்கள் மாநில அரசுகளால் பல்லாயிரம் கோடியில் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்த சட்டம் அனுமதிக்கிறது. இதற்காக தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தொகை என்பதும் குறைவாக இருக்கிறது. அதாவது குறைவான வருவாய்தான் மாநில அரசுகளுக்கு வரும். மின் விநியோகத்தில் தனியாரைக் கொண்டுவரும் தந்திரமாகவே இதனைப் பார்க்க வேண்டி இருக்கிறது.
டெல்லி,கொல்கத்தா,மும்பை ஆகிய நகரங்களில் சில இடங்களில் மின் விநியோகமானது தனியாருக்கு தரப்பட்டுள்ளது. உற்பத்தியும், கொள்முதலும் மாநில அரசிடமும், விநியோகம் மட்டும் தனியாரிடமும் உள்ளது. அப்படியானால் லாபம் அனைத்தும் தனியாருக்கு போய்விடும். மாநில அரசுகளின் கதி, அதோ கதிதான்.பெட்ரோல், டீசல் விலையானது சந்தைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல், மின்கட்டணத்தையும் நிர்ணயிக்கத் திட்டமிடுகிறார்கள்.
ஒரே பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மின்சாரம் தயாரித்து வழங்கும் போது கூடுதல் விலைக்கு வாங்குவதற்கு - அதனை குறைந்த விலைக்கு மக்களுக்கு தருவதற்கு மாநில அரசுகள் மானிய நிதி வைத்திருக்க இச்சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இப்படி பல பிரிவுகள் தனியாரை மின் துறைக்குள் அனுமதித்து - பொதுத்துறை நிறுவனத்தைச் சிதைக்கும் நோக்கம் கொண்டதாகவே அமைந்துள்ளன.
அப்படியானால் இதுவரை மின் வாரியத்தில் பணியாற்றியவர்கள் கதி என்ன? அதனைத்தான் அந்த தொழிலாளர்கள் கேட்கிறார்கள். இதுவரை சரியான பதில் இல்லை.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி சொன்னார்: ‘’இந்த சட்டம் லாபத்தை தனியார் மயமாக்குகிறது. நஷ்டத்தை தேசிய மயமாக்குகிறது” என்றார். இதுவே முழு உண்மை ஆகும்.
இத்தகைய மின்சாரக் கொள்கையைக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அதனைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இதை விவாதப் பொருளாக மாற்றாமல் திசை திருப்பவே, தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்ந்து விட்டது என்று கூச்சலிடுகிறார்கள்.
‘’தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 15 மாதங்களில் தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் சுமையும், கடனுக்கான வட்டியும் அதிகம் செலுத்த வேண்டிய நிலை இருந்தபோதும், மின் கட்டணத்தை உயர்த்தாமல் முதல்வர் பார்த்துக் கொண்டார். மின் வாரியத்தை மேம்படுத்த மானிய உதவியையும் வழங்கினார் முதல்வர்.
இந்த நிலையில் ஒன்றிய அரசும், ஒழுங்குமுறை ஆணையமும் மின் கட்டணத்தை உயர்த்துமாறும் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு தொடர்ந்து கடிதங்களை அனுப்பின” என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்லி இருக்கிறார்.
‘குஜராத் மாநிலத்தை விட தமிழகத்தில் குறைவான மின் கட்டணமே வசூலிக்கப்படுகிறது’ என்றும் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சொல்லி இருக்கிறார். அதற்கு பதில் சொல்லிவிட்டு அப்புறம் பேசலாம் அண்ணாமலை!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!