murasoli thalayangam
“நீட் தேர்வு தகுதித் தேர்வு அல்ல” : தவறான வழிகாட்டுதலை வழங்கிய ஆளுநர் RN.ரவிக்கு ‘முரசொலி’ பதிலடி !
நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டது. தமிழக ஆளுநர் அதன் தலையும் வாலும் புரியாமல் தவறான வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறார். “தமிழ்நாட்டில் நீட் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் தங்களது திறமையால் பெரிய மாநிலங்களைக் கூடப் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி அடையாத மாணவர்கள் மிரட்சியோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை. இது வெறும் தற்காலிகப் பின்னடை மட்டுமே. கடின உழைப்பைச் செலுத்தி உறுதியான மனத்துடன் நம்மை தயார் செய்தால் வெற்றி பெறுவது உறுதி" என்று சொல்லி இருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள்.
தமிழ்நாட்டின் தேர்ச்சி விபரம் கொண்ட புள்ளிவிபரத்தை பார்த்திருந்தால் இப்படியொரு அறிக்கையை அவர் வெளியிட்டு இருக்க மாட்டார். 'நீட்' தேர்வை ஆளுக்கு முன்னால் விழுந்து தூக்கிக் காப்பாற்ற வேண்டிய துடிப்பு அவருக்கு எதனால் ஏற்படுகிறது? யாரால் ஏற்படுத்தப்படுகிறது?
தமிழ்நாட்டில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 67 ஆயிரத்து 787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதாவது 51.30 சதவிகித மாணவர்கள் தான் தேர்ச்சியே பெற்றுள்ளார்கள்.
அதிக மதிப்பெண்ணா, எவ்வளவு மதிப்பெண் என்பது எல்லாம் அடுத்தடுத்த விவகாரங்கள். இந்தியா முழுவதும் தேர்வு எழுதியவர்கள் 17 லட்சத்து 64 ஆயிரத்து 571 பேர். இதில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தான் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
அதாவது பாதி அளவில் தான் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 56.44
2021 ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 56.34
2022 ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 56.27 - இப்படி குறைந்து கொண்டே போகிறது தேர்ச்சி விகிதம்.
தேர்வு எழுதியதில் பாதிக்கும் மேற்பட்டவர்களைத் தோல்வி அடைய வைத்திருப்பது தான் ஒரு தகுதித் தேர்வா? இதற்கு 'தோல்வித் தேர்வு' என்று பெயர் சூட்டுவதே சரியானதாக இருக்கும்.
மதுரையைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவர் தேசிய அளவில் 30 ஆவது இடத்தைப் பிடித்துவிட்டதால், பெரிய மாநிலங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்ள முடியுமா? பாதிக்கு பாதி மாணவர்களை தோல்வியடையச் செய்ததன் மூலமாக பாதி மாணவர்களைத் தகுதிநீக்கம் செய்ததை யார் பேசுவது?
இது குறித்த செய்தியை வெளியிட்ட 'தினமணி' நாளிதழ், 'நீட் தேர்வில் தேசிய அளவில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிர மாணவர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்' என்று சுட்டிக் காட்டி இருக்கிறது. டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தான் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அது என்ன சூட்சுமம்? அப்படியானால் இது வடமாநிலத் தேர்தல் அல்லவா இது? ஏன் இதில் தமிழ்நாடு விதிவிலக்கு கேட்கிறது என்பதை இது உணர்த்த வில்லையா?
நீட் தேர்வு முடிவுகள் வந்த நாளில் நாளிதழில்களில் கோச்சிங் சென்டர்கள் சார்பில் தரப்பட்டுள்ள விளம்பரங்களைப் பாருங்கள். அதில் உள்ள முகங்களைப் பாருங்கள். அது யாருக்கான தேர்வு என்பதை அறியலாம். பல லட்சங்கள் கொடுத்து இத்தகைய பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்களால் மட்டுமே இத்தேர்வில் வெல்ல முடியும் என்பதைத் தான் இது காட்டுகிறது.
இத்தகைய பயிற்சி நிறுவனம் நடத்துபவர்கள் கடந்த ஐந்தாண்டு காலத்தில் தங்கள் வருமானத்தை எத்தனை மடங்கு அதிகமாகக் காட்டி இருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரம் கூட வந்ததே. சில தனியார் நிறுவனங்களின் மூளையில் தோன்றி - சில அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு உள்ளே சொருகப்பட்ட மிக மோசடித்தனமான தேர்வு முறை தான் நீட் தேர்வு. அதனால் தான் தமிழ்நாடு தொடந்து எதிர்க்கிறது.
தோல்வி அடைந்தவர்களை தற்காலிக பின்னடைவு தான்' என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார் ஆளுநர் அவர்கள். இரண்டாவது முறையாகவும் தேர்வு எழுதி மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் மாணவி லக்சனா சுவேதா. இப்படி எத்தனை பேர்? அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதங்கள் மிகமிகக் குறைவாகும். அவர்களால் பல லட்சம் கொடுத்து பயிற்சி பெற முடியவில்லை என்பது ஒன்று தானே காரணமாக இருக்க முடியும்?
இதனை மனதில் வைத்துத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2021' என்பதை உருவாக்கினார்கள்.
« சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக்கல்வியைப் பெறும் கனவிற்கு இடையூறாகவும் சமூகப் பொருளாதாரத்தில் வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து, எம்.பி.பி.எஸ். மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளிலுள்ள பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது.
« அரசுப் பள்ளியின் மாணவர்கள், பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்திற்கும் குறைவாக கொண்டுள்ளவர்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
« எம்.பி.பி.எஸ். மாணவர்களின் தகுதி அல்லது தரத்தினை நீட் தேர்வு உறுதி செய்வதாக தெரியவில்லை
« ஒப்பிடுகையில், குறைந்த செயல்திறன் கொண்ட (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மேனிலை மதிப்பெண்களில்) மாணவர்கள் எம்.பி.பி.எஸ்க்கு சேர்க்கை பெறுவதற்கு மட்டுமே தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு புகுத்தியுள்ளது.
« நீட் தேர்வானது மருத்துவக்கல்வியின் தரத்தை மேம்படுத்துகிறது என்பதும் தவறானதே. - என்று சட்டமுன்வடிவில் தெளிவாக உள்ளது.
நீட் தேர்வை எதிர்ப்பதற்கு இவைதான் காரணம் ஆகும். இது தகுதித் தேர்வு அல்ல. இதற்கு முன் தகுதி இல்லாதவர்கள் எல்லாம் பணம் கொடுத்து படிக்க வந்தார்கள், அதனை நீட் தேர்வு தடுத்துவிட்டது என்பதே மாபெரும் பொய்யாகும்.
நீட் தேர்வின் மொத்த மதிப்பெண் 720 ஆகும். அரசு நிர்ணயித்துள்ள தகுதி மதிப்பெண் 117 ஆகும். 117 மதிப்பெண் எடுத்து பணம் கொடுத்து உள்ளே நுழைய வழிமுறை இருக்கும் போது, இது எப்படி தகுதித் தேர்வு ஆகும்?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!