murasoli thalayangam

தென் மாநில கவுன்சில் கூட்டத்தை இந்தியாவுக்கான கூட்டமாக மாற்றியுள்ளார் முதல்வர்.. - முரசொலி புகழாரம் !

ஒன்றிய அரசிடம் உரிமைக்குரல் !

திருவனந்தபுரத்தில் நடந்த 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான உரிமைக் குரலை ஓங்கி ஒலித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இவற்றில் சில கோரிக்கைகள், தமிழ்நாட்டுக்கானவை மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைக்குரலாக அமைந்துள்ளன.

* சரக்கு மற்றும் சேவை வரிக்கு இழப்பீடு வழங்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும்.

* பேரிடர் நிவாரண நிதியும் மற்றும் அது போன்ற பிற நிதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

* நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

* தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்ட வகுப்புக்கான சேர்க்கைச் சட்டமுன்வடிவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்.

* புதிய விமான நிலையங்களுக்கான இடங்களைக் கையகப்படுத்தித் தருவது மாநில அரசுகள்தான். எனவே, விமான நிலையங்களுக்கான இடங்களை பரிமாற்றம் செய்யும் போது மாநில அரசுக்கான பங்கினை அளிக்க வேண்டும்.

* அதிவேக ரயில் தாழ்வாரங்களை கோவை, தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் அமைக்க வேண்டும்.

* சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மாநில அரசுகளுடனும், வெளிநாடு களுடனும் ஏற்படும் போது அதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான அனுமதிகள், தடையில்லாச் சான்றிதழ்கள் வெளியுறவுத் துறையால் கிடைப்பது தாமதம் ஆகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

* ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட மின்சாரத் திருத்தச் சட்டம் திரும்பப் பெற வேண்டும்.

* மின்சாரத்தை மக்களுக்கு தாங்கக் கூடிய கட்டணத்தில் தொடர்ந்து வழங்க அனுமதிக்க வேண்டும்.

* தமிழ்நாட்டில் அதிக உயர் அளவிலான கடல் காற்றுத் திறன் உள்ளது. எனவே, கடலுக்குள் காற்றாலை அமைக்க அனுமதி வேண்டும்.

* உள்நாட்டுப் பாதுகாப்பைப் பொறுத்தவரையில் உண்மையான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

- இவைதான் முதலமைச்சரின் உரிமைக் குரல் ஆகும்.

தமிழ்நாட்டுக்கானவை மட்டுமல்ல, தென் மாநிலங்களுக்கானவை மட்டுமல்ல, பல மாநிலங்களுக்கானவை இவை. இவற்றை முன் மொழிவதன் மூலமாக, தென் மாநில கவுன்சில் கூட்டத்தையே இந்தியாவுக்கான கவுன்சில் கூட்டமாக உயர்த்தி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். தனது கோரிக்கைகளின் மூலமாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற எல்லையைத் தாண்டி இந்தியாவின் முக்கிய ஆளுமை என்பதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிரூபித்திருக்கிறார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசைப் பொறுத்தவரையில் அனைத்துமே ஒருவழிப் பாதையாக இருக்கிறது. எதையும் கேட்டுப் பெறுவதே நிலைமையாக இருக்கிறது. அதுவும் கேட்டுக் கொண்டே இருந்தால்தான் கிடைக்கும் என்பதே நிலைமையாக இருக்கிறது. கையையும் காலையும் கட்டிப் போட்டுவிட்டு, இந்தப் பறவைக்கு பறக்கத் தெரியாது என்று மாநிலங்களைக் காட்ட நினைக்கிறது பா.ஜ.க.

மாநிலங்களின் நிதி உரிமையைப் பறித்துக் கொண்டு, ஒன்றிய அரசு பலப்படுத்தப்படுகிறது. அதனை ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள். இத்தகைய நிதியை நேரில் போய் தான் கேட்க வேண்டியதாக இருக்கிறது. அல்லது பொது மேடைகளில் தான் கேட்க வேண்டியதாக இருக்கிறது.

திட்டக் கமிஷனைக் கலைத்ததன் மூலமாக இதற்காக கேள்வி கேட்கும் இடமே கூட பறிபோயிருக்கிறது. முதல் தலைமை அமைச்சர் நேரு அவர்களால் உருவாக்கப்பட்டதுதான் திட்டக் கமிஷன் ஆகும். அகில இந்திய ரீதியில் 1950 ஆம் ஆண்டு இது தொடங்கப்பட்டாலும், அதற்கான விதை என்பது அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. பொருளியல் மேதை விசுவேஸ்வரய்யா அவர்கள் தனது நூலில் 1934 ஆம் ஆண்டு இது பற்றி எழுதி இருந்தார். இதனை அன்றைய காங்கிரசு தலைவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், காங்கிரசு கட்சி ஆளும் மாநிலங்களில் அமைக்க வலியுறுத்தி வந்தார்.

நாடு விடுதலை அடைந்ததும், சீரான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும், வறுமை மற்றும் வேலையின்மையை தவிர்ப்பதற்காகவும் திட்டக் கமிஷன் அமைக்கப்பட்டது. பிரதமர் நேருவே இதன் தலைவராக இருந்தார். இதன் மூலமாகத்தான் இந்தியா முழுமைக்குமான ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டன. 1992 வரையில் எட்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதில் கூடுதல் - குறைவு இருந்தாலும் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கான திட்டமிடுதல் என்பதாவது இருந்தது.

பா.ஜ.க. அரசு வந்ததும் செய்த காரியங்களில் முக்கியமானது இந்த திட்டக்கமிஷன் கலைப்பு ஆகும். திட்டக்கமிஷனைக் கலைத்து விட்டு அதற்குப் பதிலாக மாற்றுவழி ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார்கள். மாற்றுப் பாதை என்பது பாதையை அடைப்பதாக மாறிவிட்டது. ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலங்களுக்குத் தேவையான திட்டங்களை பேசிப் பெறவோ அனைத்து மாநிலங்களுக்கும் உரிய அளவீட்டில் திட்டங்கள் தீட்டப்படுகிறது என்பதை அறியவோ ஜனநாயக வெளிப்படையான அமைப்பு இல்லை.

அதனால்தான் பொதுவெளியில் கேட்க வேண்டியதாக உள்ளது. பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு கேட்கலாமா என்று சிலர் விமர்சித்தாலும், அதுதான் வழியாக இருக்கிறது. அல்லது இவை போன்ற கவுன்சில் கூட்டங்கள் தான் வழியாக உள்ளன.

எனவே மக்களின் குரலை - நமது மாநிலத்தின் குரலை அனைத்து மாநிலங்களுக்குமான உரிமைக் குரலை ஒலித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அவர் வைத்துள்ள கோரிக்கைகளை தென் மாநில முதலமைச்சர்கள் மட்டுமல்ல; அனைத்து மாநில முதலமைச்சர்களும் வழிமொழிய வேண்டும்.

Also Read: 'புதுமைப் பெண் திட்டம்' : பெண்களுக்கு ரூ.1000 வழங்குவது மூலம் என்னென்ன பயன்கள் ? - முதலமைச்சர் விளக்கம் !