murasoli thalayangam
"ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு இப்போது வாய்கிழிய பேசுகிறார்" -பழனிசாமிக்கு பதிலடி
இப்போது சட்டம்-ஒழுங்கைப்பற்றி வாய்கிழிய பேசிக்கொண்டு இருக்கிறார் பழனிசாமி. ஆனால் அவர் காலத்தில் அமைதியாக நடந்த ஊர்வலத்தைக் கலைத்து கலவரம் ஏற்படுத்தி அப்பாவிகள் 13 பேரை சுட்டுக் கொன்றதை தனக்கு வசதியாக மறந்து விட்டு பேசுகிறார்.
“அது எனக்குத் தெரியவே தெரியாது” என்று பேட்டி அளித்தார் சட்டம், ஒழுங்கைக் கையில் வைத்திருந்த பழனிசாமி. “நானும் உங்களை மாதிரித்தான் டி.வி. பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்” என்று சொன்னார் பழனிசாமி. ஊரே ரணகளமாகக் காட்சி அளித்தபோதும் பழனிசாமி அந்தப் பக்கமாகப் போகக் கூட இல்லை. தூத்துக்குடிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு இரண்டு மூன்று முறை அந்தப் பயணத்தை ரத்து செய்தார். இறுதியாக ஊரெல்லாம் கடைகளை அடைக்கச் சொல்லி விட்டு ரகசியப் பயணத்தை மக்களுக்குத் தெரியாமல் நடத்திக் கொண்டார். இதுதான் அவர் ஆட்சி நடத்திக் கிழித்த லட்சணம் ஆகும்.
இதையெல்லாம் நாடும், நாட்டு மக்களும் மறந்திருப்பார்கள் என்று நினைத்து இப்போது பழனிசாமி பேசிக்கொண்டு இருக்கிறார். நாடும், நாட்டு மக்களும் மறக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என்பது பழனிசாமியின் சதி எண்ணங்களுக்கான சாட்சியம் என்பது வரலாற்றின் பக்கங்களில் பதிவாகிவிட்டது.
2018 மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தை ஒடுக்க பழனிசாமி அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். மே 28 ஆம் நாள் காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது. இதனை அமைச்சரவைத் தீர்மானமாகக் கொண்டு வாருங்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால் எடப்பாடி அரசு அதனைச் செய்யவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பவர்களைச் சுடுவதும், இன்னொரு பக்கம் மூடுவதுமான நாடகத்தை எடப்பாடி அரசு நடத்தியது.
உயர்நீதிமன்றத்தில் நல்லபிள்ளையைப் போல வாதங்களை வைத்த தமிழக அரசுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய 13 பேரைச் சுட்டுக் கொன்றது. நாட்டு மக்கள் மத்தியில் இந்த 13 பேர் படுகொலை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக வேறு வழியில்லாமல் ஆலைக்கு எதிரான நிலையை எடுக்க அன்றைய பழனிசாமி அரசு தள்ளப்பட்டது.
100 நாட்களுக்கு மேல் அமைதியாகப் போராடிய மக்கள் மீது அராஜகத்தை ஏவிவிட்டு அந்தப் பகுதியையே ரணகளமாக்கியது அ.தி.மு.க. அரசு. ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள போராட்டங்களையும், அமைதியான பேரணிகளையும் அடக்கி ஒடுக்கி விடலாம் என்று நினைத்த அ.தி.மு.க. அரசை எதிர்த்து அம்மாவட்டத்து மக்கள் கிளர்ந்து எழுந்தார்கள். அவர்களை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். 100 நாட்கள் அமைதியாக போராடியவர்களை, தீவிரவாதிகளைப் போலக் காட்டினார்கள். அடுத்து போராட்டம் நடத்த வரவிடாமல் தடுத்தார்கள்.
அமைதியாக ஊர்வலம் சென்றவர்கள் மீது தொலைவில் இருந்து குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கியைப் பயன்படுத்தி சுட்டார்கள். குண்டுகள் பின் தலையின் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்றது. இதன் மூலமாக தப்பிச் சென்றவர்கள், சுடப்பட்டது தெரியவந்தது. பொதுவாக கூட்டங்களைக் கலைக்க காலில் சுடுவார்கள். ஆனால் இறந்த 13 பேரில் 6 பேர் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். ஒரே ஒரு போலீஸ்காரர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் 17 ரவுண்ட் சுட்டுள்ளார். அவரே நான்கு இடங்களுக்குச் சென்று சுட்டுள்ளார்.
போராட்டக் களத்தில் இருந்து தப்பி, வீட்டுக்குப் போனவரை வீட்டில் இருந்து இழுத்து வந்து சுட்டுள்ளார்கள். ‘சாகவில்லை' என்று தெரிந்து, மீண்டும் ஒருவர் சுடப்பட்டுள்ளார். கூட்டம் கலையத் தொடங்கினால், சுடுவது, அடிப்பதை காவல் துறை நிறுத்த வேண்டும். கலையத் தொடங்கிய பிறகுதான் தாக்குதல் அதிகமாகி இருக்கிறது. பழனிசாமி தனது நேரடிக் கட்டுப்பாட்டில் நடத்திய கொடூர சம்பவங்கள் இவை.
இது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையில் தரப்பட்டுள்ளது. அதனை தமிழக அமைச்சரவை நேற்றைய தினம் விவாதித்துள்ளது. இந்திய காவல்பணி அலுவலர்கள் உள்ளிட்ட 7 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவை துறைகளின் பரிசீலனையில் இருக்கிறது. இந்த அறிக்கை கிடைத்ததும், அதனை தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைப்போம் என்று தமிழக அமைச்சரவை உறுதி அளித்துள்ளது.
நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்கப்படும் போது தான் பல உண்மைகள் வெளி வரும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!