murasoli thalayangam
திருக்குறளை கையில் எடுத்து மாற்று மதத்தினர் மீது வெறுப்பு பேச்சு.. ஆளுநரின் நோக்கம் என்ன?: முரசொலி கேள்வி
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 27, 2022) தலையங்கம் வருமாறு:
ஆரியம், ஆத்திகம், சனாதனம், வேதங்கள் -குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ‘என்ன மாதிரியான விளக்கங்களை இன்று அளித்துள்ளார்’ என்ற பேராவல், தினந்தோறும் ஏற்படுகிறது. அவர் ‘ஆளுநர்’ என்ற பொறுப்பான பொறுப்பில் இருந்து பேசுவதால்தான் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் கவலையேபட வேண்டியதில்லை.
நேற்றைய தினம், திருக்குறளைக் கையில் எடுத்திருக்கிறார் ஆளுநர். அவரது பேச்சில் மாற்று மதத்தினர் மீதான அவரது வெறுப்புதான் வெளிப்படுகிறதே தவிர, திருக்குறள் வெளிப்படவில்லை. ‘‘தமிழறிஞர்களின் மொழிபெயர்ப்பால்தான் திருக்குறளில் உள்ள ஆன்மிகம் வெளிப்பட்டது” என்ற அரிய கருத்தை அவர் சொல்லி இருக்கிறார்.
‘’திருக்குறளை ஜி.யு.போப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. திருவள்ளுவர் குறிப்பிட்ட தமிழர்களின் ஆதிபகவன் என்கிற ஆன்மிக ஞானத்தைச் சின்னாபின்னமாக்கும் காலனித்துவ நோக்கத்துடன் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளில் இருந்த ஆன்மிகத்தை முற்றிலுமாக அகற்றி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜி.யு.போப், குறிப்பிட்ட மதத்தின் பிரச்சாரகர் மட்டுமல்ல; பிரிட்டன் நாடாளு மன்றத்தின் திட்டங்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டவர். அதே சமயத்தில் தமிழ் அறிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைப் படிக்கும்போது மகிழ்ச்சியுற்றேன்” - என்று பேசி இருக்கிறார் ஆளுநர் ரவி அவர்கள். ‘’திருக்குறளை நெறிமுறைகள், நன்னெறிகள் புத்தகமாக குறைத்து விட்டார்கள்” என்றும் கவலைப்பட்டுள்ளார் ஆளுநர். திருக்குறளில் இருக்கிற ஆன்மிகத்தைச் சிதைத்துவிட்டார்கள் என்றும் பொங்கி இருக்கிறார்.
2050 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட திருக்குறள் இன்று, உலகின் 200க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாக உயர்ந்து நிற்கிறது. அதனை உள்ளூர்ப் புத்தகமாக, ஒரு மதநெறியாளர்க்கு மட்டும் உரியதாகச் சுருக்கப் பார்க்கும் தந்திரம்தான் அவர் உரையின் மூலமாக வெளிப்படுகிறது.
உலகின் எந்த நூலும் அடைய முடியாத உயரத்தில் இருக்கிறது திருக்குறள். அதை ஞானத்தின் ஊற்று, நித்திய ஆன்மிகம், ஞானத்தின் காவியம், தர்மத்தின் கண், ஆதிபகவன், பக்தி, ரிக்வேதம், உலகத்தைப் படைத்தவன் ஆதிபகவன் - என்று சொல்வதன் மூலமாக, ஒரு கூட்டுக்குள் அடைக்கப் பார்க்கிறார்கள்.
இவை அனைத்தும் புதிதல்ல. இப்படி அடைக்கப்பட்டுக் கிடந்த திருக்குறளை விடுவித்தவர்கள்தான் தமிழ்நாட்டுத் தமிழறிஞர் பெருமக்கள்.
தமிழறிஞர்களுக்கெல்லாம் பெரும் அறிஞராகப் போற்றப்படுபவர் - கப்பலோட்டிய தமிழர் - வ.உ.சிதம்பரனார் அவர்கள். அவர், பழுத்த ஆத்திகர். அவரது பெரும்பாலான புகைப்படங்களில் நெற்றி நிறைய நீறு பூசியவாறுதான் இருப்பார். பழுத்த சைவர். ‘சைவன்’ என்று சொல்லிக் கொண்டவர். அவர் திருக்குறள் குறித்து என்ன எழுதி இருக்கிறார் என்பதை ஆளுநர் அவர்கள் படிக்க வேண்டும்.
“கடவுள் வாழ்த்து” அதிகாரமே இடைச்செருகல் என்று சொன்னவர் வ.உ.சி.அவர்கள்.
திருக்குறள் - மணக்குடவர் உரையைப் பதிப்பித்தவர் வ.உ.சி. அவர்கள். அதில், ‘’திருக்குறளில் நான்காவது அதிகாரமாக இருக்கிறது ‘அறன் வலியுறுத்தல்’. முதல் மூன்று அதிகாரங்கள் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை ஆகும். இந்த மூன்று அதிகாரங்களும் வள்ளுவர் எழுதியது அல்ல, உரையாசிரியர்கள் சிலர் எழுதிச் சேர்த்தது’’ என்பது வ.உ.சி. அவர்களின் கருத்து.
சிறப்புப் பாயிரமாக, உரையாசிரியர்கள் சிலர் எழுதியதை வள்ளுவர் எழுதியதாக பிற்காலத்தில் சேர்த்து விட்டார்கள் என்றும், மொத்தமே 130 அதிகாரங்கள்தான் திருவள்ளுவர் எழுதியதே தவிர 133 அதிகாரங்கள் அல்ல என்றும் வ.உ.சி. சொல்கிறார்.
‘மெய்யுணர்தல்’ அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறிய இலக்கணம், ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரத்தில் கடவுளுக்குக் கூறிய இலக்கணம் - ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டையும் எழுதியவர் ஒருவரல்ல என்பதை அறியலாம் என்றவர் வ.உ.சி.
எனவே, கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை - ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் ‘இடைப்பாயிரம்’ என்று பிரித்து விட்டார் வ.உ.சி. அவர்கள். “ஆதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற அந்தணருக்கும் பிறந்தவர் வள்ளுவர் என்பது கட்டுக்கதை” என்கிறார் வ.உ.சி.
இப்படி கட்டுக்கதையை உருவாக்கியவர்கள் பிற்காலத்தில் எழுதிச் சேர்த்ததே அது என்பது வ.உ.சி. அவர்களின் ஆய்வு. ‘பொய்க்கதையை மெய்மெய்யெனக் கொண்ட பிற்காலத்துப் புலவன் ஒருவனால் பாடப்பட்டதென்பதற்குப் போதிய சான்றா மென்பது எனது துணிபு” என்று எழுதி இருக்கிறார் வ.உ.சி.
‘இது பொய்க்கதைதான்’ என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும் எழுதி இருக்கிறார்கள். எனவே, திருக்குறளைக் கையகப்படுத்த சிலர் முயற்சித்தபோது, அதனை முறியடித்தவர்கள் வ.உ.சி., நாவலர் சோமசுந்தரபாரதி போன்ற தமிழறிஞர்கள்தான்.
வேதத்தில் உள்ள அறநெறிதான், திருக்குறளில் இருக்கிறது என்பது போலச் சிலரால் சொல்லப்பட்டு வருகிறது. அதுவும் தவறு. வேதநெறி வேறு, குறள் நெறி வேறு. ‘வைதிக தர்மமும் பொதுமறை அறமும் ஒன்றென நினைப்பவர் அறிவின் முடவர்’ என்று எழுதுகிறார் நாவலர் சோமசுந்தர பாரதியார்.
“பிறப்பால் உயர்வு, பீடில்லாத் தாழ்வு, மேலோர் மூவர்க்கும் நால்வேறு நிலையில் வாழ்வுரிமை, ஓதல் மேலோர் சிறப்புரிமை, இரு பிறப்பாளர் அனைவர்க்கும் பொருளுரிமை மறுப்பு, பிறப்பால் குலமுறை பேணி அதன்வழி உணவும்,மணமும், அறமும் விதிப்பதுதான் வைதிக தர்மம்” - என்கிறார் நாவலர் பாரதியார். இவை அனைத்துக்கும் முற்றிலும் முரணானது ‘குறள் நெறி’ என்கிறார்.
வள்ளுவரின் தமிழ்க் குறள், பிறப்புரிமையும் சாதியுரிமையும் பேசவில்லை என்றும், ‘கல்வி, -மனைமாட்சி, தவம், -துறவு ஆகிய நானிலை வாழ்வும் எல்லா மாந்தர்க்கும் உரிமையாம்’ என்றும், எல்லார்க்கும் கல்வியை பொதுவுடமை ஆக்குவது என்றும், ‘இன்பமும் அறமும் பொருளும் அனைவர்க்கும் பொது’ என்றும் சொல்வது குறள் என்கிறார்.
‘திருக்குறள் என்பது சமயத்திற்காகத் தோன்றிய நூலன்று’ என்று சொன்னவர் குன்றக்குடி அடிகளார் அவர்கள். ‘திருக்குறளைப் பிற்காலத்தவர்கள் வடமொழி நான்மறையோடு ஒத்தது என்பர். இல்லை, இல்லவே இல்லை” என்றவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். எனவே வேதநெறியையும் குறள் நெறியையும் ஒப்பிடுவதே தவறு. அணைத்து அழிக்கும் தந்திரம் ஆகும் இது.
‘தமிழ்நாட்டின் முதல் புரட்சியாளர்’ என்று பேராசிரியர் இலக்குவனார் அவர்களால் போற்றப்பட்ட திருவள்ளுவரை. மீண்டும் புனைவுகளுக்குள் அடைக்கக் கூடாது.
ஜி.யு. போப்பின் நோக்கம் என்ன என்பது இருக்கட்டும். இன்றைய ஆளுநரின் நோக்கம் என்ன?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!