murasoli thalayangam
20 ஆண்டு இல்லாத அளவுக்கு நெல் உற்பத்தியில் புதிய சாதனை.. ஒரே ஆண்டில் சாதித்த கோன் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 24, 2022) தலையங்கம் வருமாறு:
“வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்” - என்று பாடினார் அவ்வைத் தமிழ்ப் பெருமாட்டி!
விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால் நீர் வயலில் அதிக அளவில் தங்கும். நீர் நிறையத் தங்கினால் நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால் மக்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எங்கே மக்கள் வறுமையின்றி மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அந்த அரசே சிறப்பான அரசாங்கமாக விளங்கும். அப்படிச் சிறந்த அரசை ஆளும் மன்னன் மிக உயர்ந்தவனாக போற்றப்பட்டும் மிகுந்த நற்பெயர் பெறுவான் என்பது இந்தப் பாட்டின் பொருள்.
திராவிட முன்னேற்றக் கழக அரசும், அதனைத் தலைமையேற்று நடத்திச் செல்லும் ‘கோன்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது கொற்றமும் எந்தளவுக்குச் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது என்பதற்கு உதாரணமான ஒரு புள்ளிவிபரம் நேற்றைய தினம் வெளியாகி இருக்கிறது.
இருபது ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி புதிய உச்சத்தைத் தொட்டுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
2014-15ஆம் ஆண்டில் 1.2 கோடி மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. 2020–21ஆம் ஆண்டில் 1.04 கோடி மெட்ரிக் டன்னாக இருந்த நெல் உற்பத்தி, இந்த ஆண்டு 1.22 கோடி மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
அதேபோல், 2020–21ஆம் ஆண்டில் நெல் உற்பத்தி பரப்பளவு 20.36 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், இந்த ஆண்டு 22.05 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
2000-01- ஆம் ஆண்டில் 20.08 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் வேளாண் மற்றும் உழவர் நலன் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் பெருமக்களின் நலன் காத்து, வருவாயைப் பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு வரலாற்றிலேயே முதன்முறையாக வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக நெல் சாகுபடியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நெல் ஜெயராமனின் ‘மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின்’ கீழ் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய விதை நெல்கள் வழங்கப் படுகின்றன. இதுதவிர டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விரைந்து கொள்முதல் செய்யப்பட்டு, நெல் மூட்டைகள் வீணாகுவது தடுக்கப்பட்டது.
மேலும், விவசாயிகள் வேறு தொழிலுக்குச் செல்லாமல், தொடர்ந்து விவசாயம் செய்திடும் வகையில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் பலனாக தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவில் நெல் உற்பத்தி புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மிகச் சரியான திட்டமிடுதல் தமிழக அரசுக்கு இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது. தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தபோது, அது, நிதிநிலை அறிக்கை என்ற எல்லையைத் தாண்டி இந்த மண்ணைக் காக்கும் மகத்தான பிரகடனமாக அமைந்திருந்தது. விவசாயிகளுக்கு சில சலுகைகளைத் தருவது, மானியங்களைத் தருவது என்று இல்லாமல் ஒட்டுமொத்தமாக வேளாண்மைத் தொழிலை எப்படி வருங்காலத்தில் கொண்டு செலுத்துவது என்பதற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக அந்த அறிக்கை அப்போது தாக்கல் செய்யப்பட்டது.
வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இந்த அறிக்கையின் தொடக்கத்தில் ஒன்றைச் சொல்லி இருந்தார். ‘’வேளாண்மை என்பது தேடுதலாகத் தொடங்கி, நாகரிகமாக மருவி, வாழ்வாக மலர்ந்து, மக்களை வாழ்வித்த நிலை மாறி - நாளடைவில் பிழைப்பாகப் பிசகி, பிறழ்ந்த நிலையை மாற்றி - பணியாக மருவி, தொழிலாக உயர்ந்து - மீண்டும் தமிழ்நாடு எங்கும் பசுமை தழைத்தோங்க, பயிர்கள் செழித்தோங்க- ‘குடியானவன் வீட்டுக் கோழி முட்டை அதிகாரி வீட்டு அம்மியாலும் உடையாத’ அளவுக்கு அவர்கள் வாழ்வு சமூகத்தில், - பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்பதற்காக அறிமுகப் படுத்தப்பட்டதுதான் வேளாண்மை நிதிநிலை அறிக்கை” - என்று சொல்லி இருந்தார். அதனை இன்று கண்முன்னே காண்கிறோம். அதுவும் ஓராண்டு காலத்துக்குள்!
முதலமைச்சர் அவர்கள், ‘அனைத்துத் துறை வளர்ச்சி’ என்று அழுத்தமாக தினமும் சொல்லி வருகிறார்கள். இதோ வேளாண்மைத் துறையின் வளர்ச்சியை நம் கண்முன்னே காண்கிறோம், அதுவும் ஓராண்டு காலத்துக்குள்!
இது யாரால் சாத்தியம் ஆனது? ‘கோன்’ மு.க.ஸ்டாலின் அவர்களால், ‘கொற்றம்’ தி.மு.க. அரசால் சாத்தியம் ஆனது. வரப்பை உயர்த்தியது ‘கோன்’ அல்லவா? மிகச்சரியாக ‘கோன்’ செயல்பட்டதால் வரப்பும் உயர்ந்தது. மக்களும் உயர்ந்தார்கள். அவ்வையின் பாட்டையே மாற்றி வாசிக்கத்தக்க மகத்தான சாதனையாகும் இது!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!