murasoli thalayangam
“பிரிட்டிஷ் அரசுக்கு 5 முறை கருணை மனு அனுப்பியவர் சாவர்க்கர்” : ‘அரைகுறைகளுக்கு’ வரலாற்றாசிரியர் பதிலடி!
அரைகுறைகளுக்கு - 2
‘தேசியக் கொடி மீதும், இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் மீதும் உங்களுக்கு என்ன திடீர் பாசம்?’ என்று பா.ஜ.க.வினரைப் பார்த்துத் தான் நாடு கேட்கிறது!
சுதந்திரப் போராட்டம் என்ற பெயரால் அவர்கள் தியாகிகளாக நினைத்துக் கொண்டவர்களுக்கு இதுவரை செய்யப்பட்ட மரியாதை என்ன? அதனை முழுமையாகக் கூட அல்ல, அரைகுறையாகவாவது பட்டியல் போட முடியுமா? ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருக்கும் மோகன் பகவத், சமீபத்தில் எழுதிய சுதந்திரதினக் கட்டுரையில் சாவர்க்கர் பெயரை மட்டும் குறிப்பிடுகிறாரே தவிர, வேறு எவர் பெயரையும் சொல்ல முடியவில்லை.
1977 முதல் அகில இந்திய அளவில் எத்தனையோ முறை தனித்தும்,- கூட்டணியாகவும் ஆட்சி அமைத்துள்ளது பா.ஜ.க. இக்கூட்டணி ஆட்சிகளின் போது விடுதலைப் போராட்ட வீரர்களுக்குச் செய்யப்பட்ட மரியாதைகள் என்ன?
* 2002 மே 4 - அந்தமான் போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு சாவர்க்கர் பெயர் சூட்டப்பட்டது.
* 2003 பிப்ரவரி 26 - நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் சாவர்க்கர் படம் திறக்கப்பட்டது.
* 2018 அக்டோபர் 31 - குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை திறக்கப்பட்டது.
இதில் படேல் சிலை திறக்கப்பட்டதற்கான குஜராத் ‘படேல் ஜாதி’ அரசியல் அனைவருக்கும் தெரியும். பா.ஜ.க.வுக்குச் சிலை வைக்க பா.ஜ.க. தலைவர் ஒருவர் கிடைக்கவில்லை. காங்கிரசுத் தலைவர்க்கு மாபெரும் சிலை வைத்ததுதான் பா.ஜ.க.வின் சாதனையாக இருக்கிறது!
சாவர்க்கரைப் பற்றிய விடுதலை வீரர் பிம்பமும் கட்டமைக்கப்பட்டதுதான் என்பதை பல்வேறு ஆய்வாளர்கள், பல்வேறு ஆவணங்களின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் கால சிறை ஆவணங்களை முழுமையாகப் பார்த்து சம்சுல் இஸ்லாம் எழுதிய நூல் தமிழில் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் கைது செய்யும் போது இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்தான் சாவர்க்கர். ஆனால் அந்தமான் சிறையில் வைக்கப்பட்டபோது 1911, 1913, 1914, 1918, 1920 - ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை கருணை மனு அனுப்பி வைத்தார். ‘வல்லமை பொருந்தியவரே கடுமையாக இருக்க முடியும். மனந்திருந்திய மைந்தன் பெற்றோர் போன்ற அரசாங்கத்தின் வாயிலைத் தவிர வேறு எங்கு திரும்பி வருவது?’ என்று பிரிட்டிஷ் அரசைக் கேட்கிறார் சாவர்க்கர்.
ஐம்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற அவர் 9 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார். அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்பதற்கான நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டது. ஆனால் அவரது மதவாத நடவடிக்கைகளுக்குத் தடை இல்லை. கிலாபத் இயக்கத்தை சிதைப்பதற்காகவே இவர் விடுதலை செய்யப்பட்டார் என்று ஆய்வாளர்கள் எழுதி இருக்கிறார்கள்.
‘நவீன இந்தியாவில் வகுப்புவாதம்’ என்ற புத்தகத்தை எழுதிய இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பிபின் சந்திரா இவர்கள் யாரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறித்து விரிவாக எழுதி இருக்கிறார். ‘வகுப்புவாதத் தலைவர்கள் சில சமயங்களில் ஆங்கில ஆட்சியாளர்களை விமர்சித்தனர்.
ஆனால் ஆங்கில ஆட்சிக்கு எதிரான அடிப்படையான காலனிய எதிர்ப்பு பகுப்பாய்வு எதையும் செய்யவில்லை’ என்கிறார். முஸ்லிம்களைக் கீழ்ப்படியச் செய்வதே இவர்களின் இலக்கே தவிர, பிரிட்டிஷாரை வெளியேற்றுவது அல்ல என்கிறார் பிபின்.
ஆங்கிலேயருடன் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்து மகாசபைக் கூட்டத்தில் பாய் பரமானந்த் -1933 இல் பேசியதை பிபின் எடுத்துக் காட்டுகிறார். சுதந்திரப் போராட்டத்தையே ‘தற்கொலை’ என்றவர் பரமானந்த். காங்கிரசின் கோரிக்கைகளை, ‘பைத்தியக்காரத்தனமான பிடிவாதம்’ என்றவர் இவர். ‘பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்’ என்று சொன்னவர் இந்து மகா சபைத் தலைவர் வி.எஸ்.மூஞ்சே.
இந்து மகாசபைத் தலைவராக சாவர்க்கர் ஆனதும், அவரும் சுதந்திரப்போராட்ட காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். சுதந்திரப் போராட்ட காங்கிரசு தலைவர்களை துரோகிகள் என்றார் கோல்வார்க்கர். ‘துரோகிகள் தேசிய நாயகர்களாக அரியாசனம் ஏறுவதும், தேசபக்தர்கள் அவமானத்துடன் குனிந்து கிடப்பதும் விசித்திரம், பெரும் விசித்திரம்” என்று சொன்னவர் கோல்வார்க்கர்.
இசுலாமியர்களையும் இணைத்துக் கொண்டு சுதந்திரப் போராட்டம் நடந்ததை இவர்கள் ஏற்கவில்லை. கிலாபத் இயக்கம் மூலமாக இசுலாமியர்களும், ‘அரிஜன நலம்’ என்ற சொல்லாடல் மூலமாக பட்டியலினத்தவரையும் காங்கிரசை நோக்கி காந்தி ஈர்த்ததை இவர்கள் விரும்பவில்லை. அதனால்தான் இந்திய தேசியம் என்பதை இந்து தேசியமாக சுருக்கினார்கள்.
‘இந்தியன்’ என்ற சொல்லாடலில் பிரிவினையை விதைத்தார்கள். இது பிரிட்டிஷ் அரசுக்கே சாதகமாக அமைந்தது. இந்தியா - பிரிட்டிஷ் என்ற மோதலாக பெரிதாக மாற வேண்டிய நேரத்தில் இந்து - முஸ்லிம் மோதலாகக் கட்டமைக்கப்பட்டது. ஒன்றுபட்ட இந்தியா என்பதை, ‘இந்தியாவுக்குள் இரண்டு நாடுகள் இருக்கின்றன. ஒன்று இந்து இந்தியா, இன்னொன்று முஸ்லிம் இந்தியா’ என்ற சாவர்க்கரின் இருதேசத் தத்துவம் முட்டுக்கட்டை போட்டது.
முகலாயர்களுக்கு எதிராக மராட்டியர்கள் நடத்திய போராட்டத்தையே இவர்கள் தேசிய விடுதலைப் போராட்டமாக நினைப்பார்களே தவிர- பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தை அல்ல! முகலாய எதிர்ப்பு வீரர்களையே தேசிய வீரர்களாக இவர்கள் கருதுவார்களே தவிர - காந்தி, நேரு, நேதாஜி, பகத்சிங்கை அல்ல!
இன்றைக்கு தேசியக் கொடிக்கு மொத்தக் குத்தகைதாரர்களாக நினைத்துக்கொள்கிறார்கள் பா.ஜ.க.வினர். இந்தியாவின் அரசியல் நிர்ணய சபை மூவர்ணக் கொடியைத் தேசியக் கொடியாக அங்கீகரித்த போது ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகார பத்திரிகையான ஆர்கனைசர் அதன் ஆகஸ்டு 14, 1947 இதழில் என்ன எழுதியது என்பதை ஏ.ஜி.நூரானி அவர்கள் தனது நூலில் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
“விதி கொடுத்த உதையால் அதிகாரத்திற்கு வந்தவர்கள் நம் கையில் மூவர்ணக் கொடியைக் கொடுத்திருக்கலாம், அதனை ஏற்க மாட்டோம்” என்றும், மூன்று என்ற எண்ணே சரியானது அல்ல என்றும் அந்த தலையங்கம் சொல்கிறது. வெளியிட முடியாத சொற்கள் அந்த தலையங்கத்தில் உள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகும் கூட மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக ஏற்க மறுத்தது ஆர்.எஸ்.எஸ். கோல்வால்கர் தன் ‘சிந்தனைக் கொத்து’ என்ற புத்தகத்தில், கிண்டலாக எழுதி இருக்கிறார். (முழுமையாக அறிய ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் - ஏ.ஜி.நூரானி, தமிழில் ஆர்.விஜயசங்கர் என்ற நூலை பார்க்கவும்!)
எழுபதைந்து ஆண்டு கால வலதுசாரி அரசியலின் வளர்ச்சி என்பது காந்தியை ஒப்புக் கொண்டதும், இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக் கொண்டதும்தான்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!