murasoli thalayangam
போதைக்கு எதிரான போராட்டம் .. இளைய சமுதாயத்தின் மீது முதலமைச்சர் வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்பாடு!
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட 13, 2022) தலையங்கம் வருமாறு:
போதைக்கு எதிரான போராட்டத்தில் மும்முரமாக இறங்கி இருக்கிறது தமிழ்நாடு அரசு. போதை விழிப்புணர்வு உறுதிமொழியை சுமார் 35 லட்சம் பேர் நேற்றைய தினம் மட்டும் எடுத்துக் கொண்டுள்ளார்கள். அரசுத் துறைகள் தொடங்கி கல்லூரிகள், பள்ளிகள் வரை இதன் கொடூரம் உணர்த்தபபட்டுள்ளது.
விழிப்பு உணர்வை ஊட்டுவதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர்களை அழைத்துப் பேசினார் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அப்போது போதை மருந்து நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார்.
குஜராத், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வரும் தகவல்களைவிட தமிழகத் தகவல்கள் அதிர்ச்சி ஊட்டுபவை அல்ல. கடந்த ஓராண்டு காலத்தில் 41 ஆயிரத்து 625 பேரைக் கைது செய்துள்ளது காவல்துறை. போதை வியாபாரிகளின் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் குஜராத், மகாராஷ்டிரா நிலவரங்கள் பகீர் ரகம்.
2017 - முதல் இன்றுவரை குஜராத் துறைமுகங்களில் கைப்பற்றப்பட்ட போதை மருந்துகளின் மதிப்பே பல்லாயிரம் கோடி ஆகும். குஜராத் மாநில கடற்பகுதியில், ஒரு கப்பலில் இருந்து 1,500 கிலோ ஹெராயினை இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் 2017 ஆம் ஆண்டு கைப்பற்றினார்கள். ஒரு வணிகக் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த ஹெராயினின் மதிப்பு கிட்டத்தட்ட 550 மில்லியன் டாலர் இருக்கும் என கடலோரக் காவல் படை அறிக்கையே வெளியிட்டது. ‘’இவ்வளவு போதைப் பொருள்கள் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை” என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே.சர்மா சொன்னார்.
ஹெராயினின் முக்கிய மூலப்பொருளாக ஓபியம் உள்ளது. உலகின் மிகப்பெரிய ஓபியம் உற்பத்தியாளர்களால் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் குஜராத் வழியாக வருகிறது. ஆப்கானிஸ்தானில் தயாராகும் ஹெராயின்கள், இந்தியப் பெருங்கடல் வழியாக கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்காவுக்குக் கடத்தப்படுவதாக ஐ.நா.வின் போதைப் பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் கூறுகிறது. வட மாநிலமான பஞ்சாப், ஹெராயினால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
2021 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள முந்திரா துறைமுகத்துக்கு 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் வந்து இறங்கியது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய போதைப் புதையலை குஜராத் காவல்துறையினர் பிடித்தார்கள். அவர்கள் நடத்திய சோதனையில் குஜராத் கடற்கரைக்கு அருகே கடத்தல் படகு பிடிபட்டது. அதில், சாக்குப் பைகளில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா, மெத்தாம்பிடமைன் மற்றும் ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் 760 கிலோ கண்டுபிடிக்கப்பட்டன. இதன் சர்வதேச மார்க்கெட் விலை ரூ.2,000 கோடி. அண்டை நாட்டில் இருந்து செயல்படும் போதை கடத்தல் கும்பல், இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு கடல் மார்க்கமாக போதைப் பொருட்களை சப்ளை செய்து வருகின்றது என்று அறியப்பட்டது.
சமீப காலமாக குஜராத் துறைமுகங்களைப் பயன்படுத்தி போதைப் பொருள்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வெளியிட்டுள்ள ‘ட்விட்டர்’ பதிவில்;
“குஜராத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்கள் அங்கு தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. கண்மூடித்தனமாக போதைப் பொருள் வியாபாரம் செய்யும் இவர்கள் யார்? இந்த மாஃபியாக்களுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2988 கிலோ போதை மருந்து பிடிபட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வடமாநிலங்களில் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இத்தகைய மோசமான நிலைமை தமிழ்நாட்டில் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதை மருந்து தடுப்பு, -விழிப்பு உணர்வு ஆகிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முடுக்கி விட்டுள்ளார்கள்.
உயரதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரையில் ..
எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாகத் தடை செய்து விட்டேன் என்று ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக் கொண்டால் நிச்சயமாக போதை நடமாட முடியாது.
கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாகத் தடுத்தாக வேண்டும்.
மலையடிவாரங்களைக் கண்காணித்தாக வேண்டும்.
அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதைத் தடுத்தாக வேண்டும்.
எல்லை மாவட்டங்களின் சோதனைச் சாவடிகளை அதிகப்படுத்த வேண்டும்.
கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.
காவல் துறையினரின் ரோந்து அதிகரிக்க வேண்டும்.
அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
போதைப் பொருள்கள் அதிகம் விற்பனையாகும் இடங்களை நிரந்தரமாகக் கண்காணிக்க வேண்டும்.
பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும் – என்று உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர்.
தமிழ்நாடு அரசு இதுதொடர்பான சட்டங்களைக் கடுமையாக்க இருக்கிறது. சிறப்பு நீதிமன்றங்களை அதிகரிக்கப் போகிறோம் என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர். போதை மருந்து விற்பவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட இருக்கிறது, இதற்காக ‘சைபர் செல்’ உருவாக்கப்பட உள்ளது, போதைப் பொருள் தடுப்புப் பிரிவிற்கு என்று தனியாக ஒரு “இன்டெலிஜென்ஸ் செல்” ஏற்படுத்தப்பட இருக்கிறது என்றும் அறிவித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டு இளைய சமுதாயத்தின் மீது முதலமைச்சர் அவர்கள் வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்பாடு இது.
இல்லம் தேடி கல்வி, கல்லூரிக் கனவு, காலைச் சிற்றுண்டி, நான் முதல்வன் என்பது போன்ற திட்டங்கள் பள்ளி, கல்லூரி மாணவச் சமுதாயத்தை வளர்த்தெடுக்கும் முதலமைச்சரின்
கனவுத் திட்டங்களாகும். அதேநேரத்தில் தவறான பாதையில் அவர்கள் செல்லாமல் தடுத்தாக வேண்டும் என்பதற்காக போதைக்கு எதிரான போராட்டத்தையும் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். போதை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாகட்டும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!