murasoli thalayangam
“பண்பாட்டுத் திருவிழா.. செஸ் போட்டியை நடத்தியதன் மூலம் உலகமே வியக்கிறது” : முதல்வருக்கு முரசொலி பாராட்டு!
முதலமைச்சரை உலகமே வியக்கிறது!
44 ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டியை உலகமே வியக்கும் வகையில் நடத்திக் காட்டியதன் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை உலகமே வியந்து பார்த்துக் கொண்டு இருக்கிறது.
அதனை ஒரு விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்லாமல், உலகின் பண்பாட்டுத் திருவிழாவாக நடத்திக் காட்டியதன் மூலமாக, 'யார் இவர்?' என்று வியப்பு மேலிடப் பார்க்க வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
சர்வதேசப் போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வருகை தந்திருந்தார்கள். அப்போது பேசிய முதலமைச்சர் அவர்கள், “இந்திய நாடு இதுவரை அடையாத ஒரு பெரும்புகழை அடையும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.
பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டியானது, முதன்முதலாக இந்தியாவில் நடக்கிறது என்பது நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் நடைபெறுவது அதைவிட மிகப்பெரிய பெருமை. இதன் மூலமாக இந்தியாவின் புகழ், தமிழ்நாட்டின் புகழ் உலகம் முழுக்க பரவும், உலக நாடுகளிடையே நம்முடைய செல்வாக்கு உயரும்” என்று குறிப்பிட்டார்கள்.
போட்டிகள் நிறைவுற்ற நாளில் விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் சொன்னதன் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சரின் புகழும் வானளாவிய அளவில் உயர்ந்துள்ளது. 'இதுவரை இப்படி நடந்தது இல்லை' என்றும், 'ஒரு போட்டியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு நடத்தியுள்ளது' என்றும் அவர்கள் பேட்டிகள் தந்துள்ளார்கள்.
சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் அர்கடி துவார்கோவிச் அவர்கள் பேசும் போது, “என் அடி மனதிலிருந்து பாராட்டுகிறேன். மேலும் பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. நான்கு மாதங்களில் இந்தளவுக்குச் சிறப்பான ஏற்பாட்டை வேறு யாராலும் செய்து தந்திருக்க முடியாது.
இப்போட்டியின் மூலம் விளையாட்டு மட்டுமல்ல, எப்படி போட்டியில் போராட வேண்டும், எப்படி மரியாதை கொடுக்க வேண்டும், கலை, - கலாச்சாரம் என அனைத்தையும் கற்றுக் கொள்ள நல்ல தருணமாக அமைந்தது. தமிழ்நாடு நடத்தி இரூக்கும் இந்த விழாவைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் 'success story' என்ற சொல்லைத்தான் சொல்ல வேண்டும். இந்த success story க்கு காரணமான முதலமைச்சரைப் பாராட்டுகிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.
“இந்தியாவில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட்தான் வரலாற்றில் மிகச் சிறந்த செஸ் ஒலிம்பியாட்" என்று அனைத்திந்திய சதுரங்கக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சஞ்சய் கபூர் சொல்லி இருக்கிறார். “சில பெருமை மிக்க, வலிமை மிக்க மனிதர்கள் இருந்ததால் மட்டுமே நான்கு மாதங்களில் இத்தனை முயற்சியும் வெற்றி பெற்றுள்ளது” என்று முதலமைச்சரின் திறமையை வியந்து பாராட்டி இருக்கிறார்.
பத்தொன்பது வயதில் இருந்து விளையாடுகிறார் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள். முப்பது ஆண்டுகளாக விளையாடி வருகிறார். அவர் போகாத நாடு இல்லை, பெறாத வெற்றிகள் இல்லை. கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாடு அரசு செய்து கொடுத்த வசதிகளைப் பார்த்து, “மிகவும் பெருமிதத்துடன் இங்கு நிற்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.
“நேப்பியர் பாலம் துவங்கி பால் பாக்கெட் வரை செஸ் விளையாட்டை பிரபலப்படுத்தி சாத்தியப்படுத்திய முதல்வருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்" என்று அவர் சொல்லி இருக்கிறார். “இனி எனது செஸ் விளையாட்டு நண்பர்கள் தமிழகத்தை மிகவும் வியந்து பார்ப்பார்கள்" என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
"எதைப் பற்றியாவது புகார் சொல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் புகார் சொல்லும் விதமாக இதுவரை எதையும் பார்க்கவில்லை. எல்லாமே சிறப்பாக இருக்கிறது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை" என்று, ஸ்பானிஷ் நாட்டு வீரர் வெல்லேஜு போன்ஸ் சொல்லி இருக்கிறார்.
ஐந்து முறை சேம்பியன் பட்டம் வென்றவர் அவர். "செஸ் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொள்கிறேன். இப்போட்டியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. வீரர்கள் தங்குவதற்கு செய்த ஏற்பாடுகளான விடுதி, உணவு என அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தது. என்ன சொல்வது என்றே தெரியவில்லை" என்று அல்ஜீரியா வீரர் மாங்கின்ஸ் சொல்லி இருக்கிறார்.
இலங்கையில் இருந்து வந்திருந்த பெண் வீராங்கனை ராணா சிங்கே, “44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது, அரசுத் தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மிகுந்த பிரமிப்பு அளித்தது. தமிழ்நாடு அரசு, காவல்துறை, பொதுமக்கள் மற்றும் ஊடகத்துறைக்கு மிக்க நன்றிகளை எனது குழு சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதை எங்கள் நாட்டில் சொல்வோம்” என்று சொல்லி இருக்கிறார்.
இந்தியாவின் 100 ஆண்டுகால வரலாற்றில் 187 நாடுகள் பங்கேற்ற முதல் விளையாட்டுப் போட்டி என்று இது சொல்லப்படுகிறது. 187 நாடுகளில் இருந்து வந்த வீரர்களுக்கும் தமிழ்நாடும், நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மறக்க முடியாதவை மட்டுமல்ல என்றும் போற்றத்தக்கவையாக அமைந்து விட்டன.
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், "உலகத்தில் உள்ள பல்வேறு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக வரும் செப்டம்பர் 22ஆம் தேதி உலக அளவிலான மகளிர் டென்னிஸ் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், கபடிப் போட்டி, சிலம்பம் போட்டி, முதலமைச்சர் விருதுக்கான போட்டிகள் நடத்த உள்ளோம்” என்று சொல்லி இருக்கிறார்.
விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் களமாக தமிழ்நாடு மாறுவதற்கான உதாரணமாக இது அமைந்து விட்டது. தமிழ்நாட்டில் நடத்த வேண்டும், தமிழ்நாட்டைப் போல நடத்த வேண்டும் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
'செய்வன திருந்தச் செய்' என்பார்கள். அத்தகைய முதலமைச்சரைப் பெற்றுள்ளது தமிழ்நாடு!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!