murasoli thalayangam
“தோழர் ஜீவா.. தோழர் சீனிவாசராவ் வழித்தடத்தில் தொய்வில்லாமல் உழைத்தார் நல்லகண்ணு” : முரசொலி புகழாரம்!
தகைசால் நல்லகண்ணு வாழ்க!
தகைசால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தகைசால் தமிழர் விருதை தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு வழங்கிச் சிறப்பிக்க இருக்கிறார்கள்!
தோற்றத்தில் எளிய விவசாயியைப் போலத் தோன்றி தமிழ்நாட்டு அரசியலில் தூய்மையான, நேர்மையான, உண்மையான அரசியலை விதைத்து வரும் தோழர் நல்லகண்ணு அந்த விருதுக்கு மிகமிகப் பொருத்தமானவர் என்பதை உணர்ந்து தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.
- 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் பிறந்தவர் தோழர் நல்லகண்ணு . 97 வயதைக் கடந்து வாழ்கிறார். கல்லூரியில் படிக்கும் போது ‘வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார். அன்றுமுதல் அவரது வாழ்க்கை என்பதே போராட்ட வாழ்க்கை தான். தனது பதினெட்டாவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். இன்று வரை தடம் மாறாமல், தரம் மாறாமல் அக்கட்சியில் செயலாற்றி வருகிறார். கம்யூனிசம் பேசுவது எளிது. வாழ்வது சிரமம். அப்படி கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து வருபவர் தோழர் நல்லகண்ணு.
”ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் அடிமை நீக்ரோவைப் போல உழைக்க வேண்டும், அதற்கான பலனை அமெரிக்க முதலாளியைப் போல அடைய வேண்டும்” என்று சொன்னார் சோவியத் ஒன்றியத்தை கட்டமைத்த ஜோசப் ஸ்டாலின்.
தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை இன்றுவரை உழைப்பாகவே அமைந்திருந்தது. அதற்கான பலனை அடிமை நீக்ரோவை விடக் குறைவாகவே பெற்றவர். அதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாதவர்.
எண்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாயை வசூலித்து கட்சி அவருக்கு வழங்கியது. அதனை கட்சிக்கே திருப்பித் தந்தார். தமிழ்நாடு அரசு அம்பேத்கர் விருது வழங்கியபோது கொடுத்த ஒரு லட்சத்தில் கட்சிக்கு ஐம்பதாயிரத்தையும், விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கு ஐம்பதாயிரத்தையும் வழங்கினார்.
அவர் தம் மனைவி ரஞ்சிதம் அவர்கள் மறைந்தபோது அளித்த பேட்டியில் சொன்னார்:
“நான் சம்பாதிச்சுது என்னனு எல்லாருக்கும் தெரியும். வெளியே போகும் போது செலவுக்கு அவகிட்டதான் காசு வாங்கிட்டுப் போவேன். கொஞ்சம் நிலம் இருந்தது. அதுல இருந்து அரிசி வரும். மத்தபடி “அது இல்ல இது இல்ல'னு எதுவும் எங்கிட்ட சொல்லாம, அவளே சமாளிச்சு குடும்பத்தக் கொண்டு போனா. என் பிறந்தநாளுக்கு துணிமணி எடுத்துக் கொடுப்பா. அவளுக்கு, நான் விட்டுல இருந்தாலே பரிசுதான்னு சொல்லுவா. எப்பவாச்சும் டெல்லிக்குப் போனா அவளுக்கு சேலை எடுத்துட்டு வருவேன். ரொம்ப சந்தோசப்படுவா. வெளிய போயிட்டு நேரடியா வீட்டுக்கு வர்றதா இருந்தா எதாவது பண்டம் வாங்கிட்டு வந்து கொடுப்பேன்.
எங்க அப்பா, என் கூடப் பொறந்தவங்களுக்கு எல்லாம் அவங்கவங்க பேருல விட்டை எழுதிவெச்சாரு. என் பங்கு வீட்டை மட்டும் என் மனைவி பேருல தான் எழுதி வெச்சிருக்காரு. பொது வாழ்க்கையில இருக்கேன், வீட்டையும் வித்து செலவு பண்ணிடுவேனோனு பயம் அவருக்கு" என்றார் நல்லகண்ணு. இதுதான் நல்லகண்ணு. தகைசால் மனிதரல்லவா?
மிகச்சிறுவயதில் ஏற்படும் போராட்டக் குணம் இறுதிவரைக்கும் அனைவர்க்கும் தொடர்வது இல்லை. நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் அந்தக் காலத்தில் நெல் மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த ஒருவர் குறித்து 'ஜனசக்தி'யில் எழுதி அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுக்க வைத்தது இவரது முதல் நடவடிக்கை.
பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலம். - பிரிட்டிஷார் வெளியேறிய பிறகு இந்தியாவை பலாத்கார புரட்சியின் மூலமாக கம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றப் போகிறார்கள் என்று சொல்லி அக்கட்சி தடை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கம்யூனிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டார்கள். அப்போது கைது செய்யப்பட்டவர் தான் நல்லகண்ணு. ஏழு ஆண்டுகள் சிறையையே வாழ்க்கையாகக் கொண்டார். 1949, டிசம்பர் 20 அன்று தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாகப் பதுங்கியிருந்த நல்லகண்ணுவைக் கைது செய்தது போலீஸ். அவரது மீசையைப் பொசுக்கியும் முடிகளைப் பிய்த்தும் போலீஸார் நடத்திய சித்திரவதையே நல்லகண்ணு மீசையைத் துறக்கக் காரணமானது.
நல்லகண்ணு, தோழர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 1951 முதல் 1956 வரையில் ஏழாண்டுகள் சிறையில் இருந்தார். வெளியில் வந்த பிறகும் அவரது போராட்டக் குணம் வீரியம் பெற்றது. நான்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச்செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக் கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் என்று அவர் நடத்திய போராட்டங்களின் வரலாறு நீளமானது.
நல்லகண்ணுவின் சிறப்பு என்பது மிகச்சிறந்த தத்துவங்களின் அனைத்துக் கூறுகளையும் ஒன்றாக்கிக் கொள்வதும் ஆகும். மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்கரியம் ஆகியவற்றின் கூட்டுத் தன்மையையும், கூட்டுச் செயல்பாட்டையும் ஆதரிக்கக் கூடியவராக இருப்பார். இலக்கியத்தில் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோரைத் துணைக் கொள்வார்.
தோழர் ஜீவாவைப் போலவே கலை இலக்கிய அரங்குகளுக்கு முக்கியத்துவம் வழங்கினார். சீனிவாசராவ் வழித்தடத்தில் தொழிற்சங்கப் பணிகளிலும் தொய்வில்லாமல் தொடர்ந்தார். விவசாயத் தொழிலாளர் மேம்பாட்டுக்கு உழைத்தார். மதவாதத்துக்கு எதிரான அவரது குரல்கள் எப்போதும் ஒலித்தது. சாதியவாதத்துக்கு எதிரான அவரது போராட்டங்கள் தொடர்ந்தது. சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் தருபவராக இருந்தார். இப்படி பன்முக கொள்கைக் கூர்மை உடையவராக நல்லகண்ணு அவர்கள் செயல்பட்டு வருகிறார்.
அரசியல் வாழ்க்கையிலும் - பொது வாழ்விலும் தனிவாழ்விலும் அனைவரும் பின்பற்றத் தக்க மனிதரே நல்லகண்ணு. அவர் வாழ்க! வாழிய!
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!