murasoli thalayangam
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை மீண்டும் உலகமே உச்சரித்த நாள் ஜூலை 28": முரசொலி தலையங்கம் புகழாரம்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூலை 30, 2022) தலையங்கம் வருமாறு:
உலகத்தின் புகழ் சதுரங்கத்தில் உச்சிக்குப் போய்விட்டது தமிழ்நாடு. உலகமே, தமிழகத்தை வியந்து பார்க்கும் நாளாக ஜூலை 28 அமைந்துவிட்டது. இப்போட்டிகளை உலகமே வியந்து பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயர் அனைவராலும் உச்சரிக்கப்படும் பெயராக மாறிவிட்டது. ‘ஸ்டாலின்’ என்பது ஏற்கனவே உலகம் அறிந்த பெயராக இருப்பதால் (சோவியத் ஸ்டாலின்!) அது இன்னமும் எளிமையாக ஆகிவிட்டது.
“செஸ்” என்றாலே சோவியத் ஒன்றியம்தான் என்ற புகழ் எப்போதும் உண்டு. இதோ, இப்போது இந்தியாவும் அத்தகைய புகழைப் பெறப் போகிறது. அங்கும் ஒரு ஸ்டாலின். இங்கும் ஒரு ஸ்டாலின். இது வெறும் பெயர் பொருத்தம் மட்டுமல்ல, சிந்தனைப் பொருத்தமும் ஆகும்.
1917 சோவியத் புரட்சிக்குப் பின்னால், நாட்டைக் கட்டமைக்க நினைத்த புரட்சியாளர்கள் லெனினும், ஸ்டாலினும் பல்வேறு வகைகளில் நாட்டை மேன்மைப்படுத்தத் திட்டமிட்டார்கள். அதில் ஒன்று, செஸ் விளையாட்டு ஆகும். போர் தந்திரம், வியூகம் அமைக்கும் முறை, எதிரியை வீழ்த்துதல் - ஆகியவை கொண்ட இந்த விளையாட்டை, தங்களது நாட்டின் தேசிய அடையாளங்களில் ஒன்றாகவே மாற்றினார்கள் அவர்கள். அந்த முக்கியத்துவத்தின் காரணமாக, பரிசுகளை அள்ளிக் குவிக்க அந்த நாட்டினரால் முடிந்தது.
1928 முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன. இதுவரை 43 போட்டிகள் நடந்துள்ளன. இப்போது தமிழ்நாட்டில் நடப்பது 44ஆவது போட்டியாகும். இதுவரை நடந்த போட்டிகளில் 18 தங்கம், 1 வெள்ளிப் பதக்கம் பெற்று சோவியத் நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. அதிகப்படியான தங்கப் பதக்கம் பெற்ற நாடாக ரஷ்யா இருக்கிறது. இங்கே சச்சின் போன்றவர்கள் அடைந்த புகழை, அங்கே செஸ் வீரர்கள் பெற்றுள்ளார்கள்.
இதோ இப்போது, அத்தகைய முக்கியத்துவத்தை நமது நாடும் கொடுப்பதற்கு அடித்தளம் அமைத்துள்ளது, சென்னையில் நடைபெறும் ‘44 ஆவது ஒலிம்பியாட்’ போட்டி. ‘அனைத்துத் துறை வளர்ச்சி’ என்பதை அடிக்கடி சொல்லி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். “வளர்ச்சி” என்றால் அது, “தொழில் வளர்ச்சிதான்” என்றிருந்ததை மாற்றி, “அனைத்துத் துறை வளர்ச்சி” என விரிவுபடுத்தினார். அதில் விளை யாட்டுத் துறையானது மலர்ச்சியைப் பெற்றுள்ளது. சாதாரண மலர்ச்சி அல்ல, உலகளாவிய மலர்ச்சி ஆகும் இது.
இந்தியாவில் இதுவரை நடந்தது இல்லை; ஆசியாவில் இரண்டு முறை நடந்திருக்கிறது என்றாலும், முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது. இத்தகைய நிலையில் செஸ் ஒலிம்பியாட் கூட்டமைப்பின் நன்மதிப்பைப் பெற்று – இந்தியாவுக்கு; அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டுக்கு இந்த வாய்ப்பைப் பெற்று வந்தது தமிழ்நாடு அரசு.
“44 ஆவது செஸ் ஒலிம்பியாட்” என்பது சோவியத் தலைநகர் மாஸ்கோவில்தான் நடந்திருக்க வேண்டும். நடத்த இயலாத சூழலை கடந்த பிப்ரவரி மாதம்தான் சொன்னார்கள். அப்படியானால் எங்கு நடத்தலாம் என்று அந்தக் கூட்டமைப்பு யோசித்துக் கொண்டிருந்த போது தமிழ்நாடு அரசு அதனை அறிந்து உள்ளே புகுந்து வெற்றிக் கனியைப் பறித்தது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் பத்திரிக்கையாளர் உ.ஸ்ரீராம் இதுபற்றி எழுதியுள்ள கட்டுரையில், தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்.
‘’கூட்டமைப்பின் செயலாளரான பரத் சௌஹான், செஸ் ஒலிம்பியாட் தொடர்பாக தமிழக அரசை அணுகியபோது, தாமதமேயின்றி தமிழ்நாடு அரசும் களத்தில் இறங்கியது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.92 கோடியை இதற்கென ஒதுக்கி, அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டார். அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பெருங்கனவும் தொலைநோக்குப் பார்வையுமே இதைச் சாத்தியப்படுத்தியது எனலாம்.
விளையாட்டுத்துறை சார்ந்து பெரும் எத்தனிப்புகளைச் செய்யத் துணியும் முதல்வர்கள் இந்தியாவில் ரொம்பக் குறைவு. 2017 ஆசியத் தடகள சாம்பியன்ஷிப்பை நடத்த இயலாதெனக் கடைசி நிமிடத்தில் ஜார்கண்டின் ராஞ்சிநகரம் பின்வாங்கியபோது, அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வெறும் 90 நாட்களில் ஆசிய சாம்பியன் போட்டித் தொடரை ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் நடத்திக் காட்டினார். இந்திய ஹாக்கியின் வளர்ச்சியில் நவீன் பட்நாயக்கின் பங்கைப் பற்றிப் புதிதாகச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
விளையாட்டை ஒதுக்கித் தள்ளாமல், அதற்காக அசகாய பிரயத்தனங்களை முன்னெடுக்கும் வெகு சில மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, 44ஆவது செஸ் ஒலிம்பியாட் நடத்தும் வாய்ப்பைப் பெற்றதில் ஆச்சரியமில்லை” என்று எழுதி இருக்கிறார் பத்திரிக்கையாளர் உ.ஸ்ரீராம்.
சுமார் 18 மாத கால அவகாசத்தில்தான் இத்தகைய போட்டிகள் நடத்துவார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த கால அளவு என்பது நான்கே மாதங்கள்தான். நான்கு மாதத்துக்குள் உலகம் வியக்க ஏற்பாடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
“உலக செஸ் ஒலிம்பியாட்” போட்டியை சீரும் சிறப்புமாக நடத்துவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவர் தலைமையிலான தமிழ்நாடு அரசும் காட்டி வரும் ஆர்வம், மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளிப்பதாக, சர்வதேச செஸ் அமைப்புகளும் முன்னணி வீரர்களும் வரவேற்புத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை வந்திறங்கியதும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும் உபசரிப்பும் இதுவரை எங்கும் காணாத அளவில் மிகச்சிறப்பானது என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் மிகவும் சிலாகித்து வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
“செஸ் ஒலிம்பியாட்” போட்டிக்கான ஏற்பாடுகள் மிக நேர்த்தியாக மட்டுமின்றி பிரமாண்டமாகவும் இருப்பதாக அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உலகப் பிரசித்தி பெற்ற செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு நிகழ்வினை சீரும் சிறப்போடும் நடத்தி தன் சொந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அவர் தலைமையிலான தமிழ்நாடு அரசும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வருவதாகவும் சர்வதேச வீரர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
‘’தமிழ்நாட்டின் மதிப்பு மேலும் உயர்கிறது” என்று, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சொன்னதைத் தான் முதல் நாளிலேயே பார்க் கிறோம்.
கீழடியில் கிடைத்த சதுரங்கக் காய்கள் கருப்பு நிறத்தால் ஆனவை என்பதை அறியும் போது, நமக்கும் இந்த விளையாட்டுக்குமான தொடர்பு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது.
‘இந்தியாவின் சதுரங்கச் சக்கரவர்த்தியாக தமிழ்நாடு திகழ்கிறது’ என்று இதனை மனதில் வைத்துத்தான் சொன்னார் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள்.
187 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது. புகழ்ச் சதுரங்கத்தின் உச்சிக்கு தமிழ்நாடு போய்க்கொண்டு இருக்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!