murasoli thalayangam
இந்தி திணிப்பு : "இல்லாத கருப்புப் பூனைகள் அல்ல, இருக்கும் காவிப் பூனைகள்.." -தமிழிசைக்கு முரசொலி பதிலடி!
ஆளுநர் தமிழிசை எந்த லோகத்தில் இருக்கிறார்?
"இல்லாத இந்தித் திணிப்பைக் கூறி எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள்?" என்று கேட்டிருக்கிறார் ஆளுநர் தமிழிசை. அவர் எந்தலோகத்தில் இருக்கிறார் என்பது தான் சந்தேகமாக இருக்கிறது. வேறு ஏதாவது மாற்றுப் பதவியைக் குறிவைத்து இப்படி எல்லாம் பேசி இந்திய பா.ஜ.க. தலைமையை தன் வசப்படுத்தப் பார்க்கிறாரா தமிழிசை?
"அமாவாசை இரவில் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு, இல்லாத கருப்புப் பூனையைத் தேடுவதைப் போல இல்லாத இந்தித் திணிப்பை இருப்பதுபோலக் கூறுகின்றனர்” என்று பௌணர்மி பகலில், இருக்கும் அரசியல் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆளுநர் தமிழிசை.
இவரது அரியகருத்து வெளியான அதே ‘தமிழ் இந்து' நாளிதழில் (26.7.2022) பக்கம் 6 இல் ஒருவாசகர் கடிதம் வெளியாகி இருக்கிறது. அதனைக் கருப்புக் கண்ணாடி போடாமலேயே தமிழிசை படிக்கலாம். நன்றாகத் தெரியும். எழுத்து தான் கருப்பாக இருக்குமே தவிர, வார்த்தைகள் அனைத்தும் உண்மை.
ஓசூரைச் சேர்ந்த மு.வா.பாலாஜி என்பவர் எழுதிய வாசகர் கடிதத்தை 'தமிழ் இந்து' வெளியிட்டுள்ளது. இது ‘முரசொலி'யில் வெளியான கடிதம் அல்ல. 'தினமலர்' வெளியிடும் “டைனிங் டேபிள்” கடிதமும் அல்ல.
"வங்கிப் படிவங்களில் தமிழ்; நம்பிக்கை அளிக்கும் பதில்' என்ற தலையங்கம் வாசித்தேன். வங்கிப் படிவங்களில் மட்டுமல்லாமல், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் இம்முறையைக் கடைப்பிடித்தால் பெருமளவில் நன்மை பயப்பதாக அமையும்.
அண்மையில் எல்.ஐ.சி.யில் பாலிசி பத்திரத்தைப் பார்த்த நான் அதிர்ந்து போனேன்...
முழுக்க முழுக்க ஆங்கில மொழியும், இந்தி மொழியும் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. அந்தந்த மாநில மொழிகளுடன் ஆங்கிலமும் இடம் பெற்றிருந்தால், புரிதலில் மேம்பாடு இருக்கும். வாழ்வியல் காப்பீட்டுக்காகச் செய்யப்படும் சேமிப்பானது எல்லாத் தரப்பினரும் படிக்கும் படியும் புரியும் படியும் இருந்தால் தானே நல்லது” - என்று ஓசூர் மு.வா.பாலாஜி எழுதி இருக்கிறார்.
அவர் கருப்புக் கண்ணாடி போட்டிருப்பாரா எனத் தெரியாது. கருப்பா சிவப்பா எனவும் தெரியாது. ஆனால் அவருக்கு இந்தியைத் திணிக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கிறது. அதனை நாட்டு மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற தமிழ்மொழிப்பற்று இருந்துள்ளது. பாலாஜிக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. அதனால் தான் உண்மையை ஊருக்கு பயப்படாமல் சொல்லி இருக்கிறார். தமிழிசைக்கு உண்மையைச் சொல்ல முடியவில்லை. போலி வேஷங்களைப் போடவேண்டி இருக்கிறது.
இந்தி, வேதம், வியாக்கியானம், சனாதனம், ஆஹா, ஓஹோ என்று பேசினால் தான் ஆளுநராக ஒப்புக்கொள்வார்கள். இல்லாவிட்டால் 'தமிழிசை' யாகப் பார்த்து ஓரமாக ஒதுக்கி விடுவார்கள் என்ற பயத்தில் இப்படிப் பேசி வருகிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தி.மு.க. யாருக்கு வாக்களித்தால் இவருக்குஎன்ன? வேறு மாநிலத்தின் ஆளுநராக இருந்து கொண்டு இன்னொரு மாநிலத்துக்கு அரசியல் வகுப்பு எடுப்பது என்ன நியாயம்? இது தான் இந்திக்' கலாச்சாரமா?
வாரிசு, குடும்ப ஆட்சி என்ற குதர்க்கவாதங்கள் எதற்காக அவர் குடும்பத்தில் அவர் முதல் தலைமுறையா? வாரிசு பற்றி யார் பேசுவது? என்ன ஆகிவிட்டது அவருக்கு? ஹெச்.ராஜா சைலண்கிட் ஆகிவிட்டார் என்பதற்காக அவர் இடத்தை பிடிக்க நினைக்கிறாரா?
இந்தி இந்தியாவின் ஆட்சிமொழி அல்ல - இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல - இந்தி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே. அது மட்டுமே அலுவல் மொழி அல்ல, ஆங்கிலத்தோடு சேர்ந்து அதுவும் இந்தியாவின் அலுவல்மொழி. இதனை தமிழிசையாக இருந்தாலும் யாராக இருந்தாலும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில் இந்தியை ஆட்சிமொழி போல, தேசிய மொழியைப் போல நினைத்துக் கொண்டு பேசுவதே தவறானது. திணிப்பது அதனை விடத் தவறானது.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் (ஏப்ரல் 7) பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை, நாட்டு ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று சொல்லி இருந்தார். இதனைச் சொல்வதற்கு இவர்யார்? அரசியலமைப்புச் சட்டத்தின் இடத்தை இவரே வகிக்கிறாரா? அல்லது இவரே நாடாளுமன்றத்தின் இடத்தை நிரப்பும் தகுதி படைத்தவரா?
ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது எந்த அடிப்படையில்? ஆங்கிலமும் இந்தியும் அலுவல் மொழி என்பது தான் சட்டம். அதில் ஆங்கிலத்தை அகற்ற வேண்டும் என்பதை தனிப்பட்டு முடிவெடுப்பதற்கான அதிகாரம் அவருக்கு எப்போது வந்தது?
நாட்டின் ஒருமைப்பாட்டு அங்கமாக இந்தியை ஆக்குவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதைப் போன்ற அபத்தமான கூற்று இருக்க முடியுமா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் பேசும் மொழியாக இந்தி ஆகிவிட்டதா? இந்தியே அனைவரது பேச்சு மொழியாக ஆகிவிட்டதா? இந்தி படிக்க எல்லா மொழிக்காரர்களும் தவிக்கிறார்களா? தலைகீழ் தவம் இருக்கிறார்களா? பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் இடத்தில் ஒரு மொழி எப்படி ஒருமைப்பாட்டை வளர்க்கும்?
எல்.ஐ.சி. படிவத்தில் இந்தி இருப்பது ஓசூரில் இருக்கும் பாலாஜிக்குப் புரியவில்லை. இதுதான் திணிப்பு என்பது.
பத்ம ஸ்ரீபட்டம் வாங்கிய ஒரு எழுத்தாளர் சொன்னார்,
“நான் பத்மஸ்ரீ விருதை வாங்கும் போதே ஏண்டா இப்படி ஆகிப் போச்சே நமக்கு எனத் தோன்றியது. ஏனென்றால் என்ன கொடுத்திருக்கிறார்கள் என்றே தெரியாமல் வாங்கி வந்திருக்கிறேன். இந்தியில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இப்போது அது எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறது. விளங்காத ஒருமொழியில் நமக்கு ஒரு விருது கொடுத்திருக்கிறார்கள். யாருக்கு அது பயன்படும்? இது திணிப்புதான்" என்று தெரிவித்துள்ளார். இதுதான் திணிப்பு என்பது.
வங்கிகளில், ரயில் நிலையங்களில், தபால் நிலையங்களில், விமான நிலையங்களில் புகுத்தப்படுகிறது இந்தி. இதற்கான பணியாளர்களை பெரும்பாலுல் இந்தி பேசுபவர்களாகத் திணித்துவருகிறார்கள். இந்திக்காரர்கள் இப்போது தமிழ்மொழித் தேர்வுகளில் 25 க்கு 24 எடுக்கும் அளவுக்கு பன் மொழிப் புலவர்களாக மாறிவருகிறார்கள். எந்தலோகத்தில் இருக்கிறார் ஆளுநர் தமிழிசை?
சமீபத்தில் தென்னிந்திய மொழிப்படங்கள், இந்தியிலும் 'டப்' ஆகி பரபரப்பாக ஓடியது. இதனை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கான் பேச்சில் தெரியவில்லையா இந்தி? ஏ.ஆர்.ரஹ்மான் இந்திப் பாடல்களை அதிகம் பாடவில்லை என்பதால் கோபம்கொண்டார்களே பெங்களூரில். இவை, இல்லாத கருப்புப் பூனைகள் அல்ல. இருக்கும் காவிப் பூனைகள்.
ஆளுநர் தமிழிசை எந்த லோகத்தில் இருக்கிறார்?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!