murasoli thalayangam
‘தமிழ்நாடு நாள்’ விழா : அண்ணா - கலைஞரின் மறு உருவமாக இருக்கின்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - ‘முரசொலி’!
தாய்த்தமிழ் நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய திருநாளாம் ஜூலை 18 ஆம் நாளை ‘தமிழ்நாடு நாள்' என்று அறிவித்தார், பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் மறு உருவமாக இருக்கின்ற இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
‘தமிழ்நாடு' என்பது தொல்காப்பியத்தில் இருக்கிறது, சிலப்பதிகாரத்தில் இருக்கிறது, பரிபாடலில் இருக்கிறது, பாரதியார் பாட்டில் இருக்கிறது - என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் ‘தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயர் இருக்கிறதா?' என்றால் இல்லை.
“அவன் நல்லவன், பேர்தான் நொள்ளவன்'' என்பது போல - அது தமிழ்நாடுதான் - ஆனால் மெட்றாஸ் மாகாணம் என்றுதான் சொல்வோம் - என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். அதற்கு எதிராக பல்லாண்டு காலமாகப் போராட வேண்டி இருந்தது. ‘தமிழ்நாடு தமிழருக்கே' - என்ற முழக்கத்தை 1938 ஆம் ஆண்டு முன் னெடுத்தார் தந்தை பெரியார். அப்போதுதான் ‘தமிழ்நாடு' என்ற சொல் அரசியல் களத்தில் அரசியல் முழக்கமாக வெடித்தது. வீட்டு வாசலில் எழுதி வைக்கச் சொன்னார். பச்சை குத்திக்கச் சொன்னார்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் போது அதனைச் சொல்லச் சொன்னார். இலக்கியங்களாக இருந்த தமிழ்ப் பெருமைகளை, அரசியல் முழக்கங்களாக மாற்றினார் பெரியார். ‘பல்லாயிரம் ஆண்டுக்கு முன் பெருமையாக வாழ்ந்த நம்மினம் தாழ்ந்தது ஏன்? யாரால்?' என்று கேள்வி எழுப்பி இன உணர்ச்சியைத் தூண்டினார். அதுதான் 1938 முதல் தமிழ் - தமிழின எழுச்சிக்கு வடிவம் கொடுத்தது.
“தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர் கூட இந்நாட்டுக்கு, சமுதாயத் திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டு விடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத்தோன்றவில்லை? இந்தக் காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என்பதோடு மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன்.
நம் நாடு எது ? நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால் பிறகு தமிழன் எதற்காக உயிர்வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர் களையும் உண்மையிலேயே வணங்கி கேட்டுக் கொள்கிறேன்'' என்று 1955 ஆம் ஆண்டு முழங்கியவர் தந்தை பெரியார் அவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் 1957 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் குதித்தது. அது முதல் சட்டமன்ற - நாடாளுமன்றங்களில் ‘தமிழ்நாடு பெயர் சூட்டுதல்' முழக்கங்களை வைத்து வந்தது. “உங்களுக்கு ஒரு எழுத்துக்கு ஒரு பிணம் வீதம் வேண்டுமென்று சொன்னால் தயாராக இருக்கிறோம். ஐந்து பிணங்கள் தருவதற்கு தயாராக இருக்கிறோம். எழுத்துக்கு எத்தனை பிணங்கள் வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு என்று இந்த நாட்டுக்கு பெயரிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்....” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1960 ஆம் ஆண்டு முழங்கினார் அன்றைய குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
இந்த நேரத்தில் நம்மால் நினைவுகூர வேண்டியவர் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் - மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பூபேஷ் குப்தா அவர்கள். அவர்தான் மாநிலங்களவையில் அதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். “நான் இந்தியக் குடிமகன். எனது வங்காள மக்களை எவ்வளவு நேசிக்கிறேனோ அவ்வளவு தமிழ்நாட்டு மக்களையும் நேசிக்கிறேன். ஒரு எளிய மக்கள் சேவகன் என்ற முறையில் நான் யாருக்காக நிற்கிறேனோ அந்த வங்காள மக்களுக்குப் பேசும் உரிமையை விட தமிழ்ப் பெருமக்களுக்காகப் பேசும் உரிமை குறைந்ததல்ல என்று எண்ணுகிறேன். ஒரு மொழிக்குழுவினர்க்கும் மற்றொரு மொழிக்குழுவினருக்கும் இடையே இத்தகைய கூட்டுறவை வளர்க்கவே நான் விரும்புகிறேன்” என்று அவர் பேசினார். தேசிய இனங்களின் குரலை அவர் எதிரொலித்தார்.
அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார் பேரறிஞர் அண்ணா அவர்கள். “தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் நாங்கள் என்ன லாபம் அடைகிறோம் என்று கேட்கிறீர்கள். தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் உணர்வுப்பூர்வமாக திருப்தி அடைகிறோம். எங்களின் பூர்வீக மண்ணுக்கான தகுதியைப் பெறுகிறோம். மெட்ராஸ் என்பது தலைநகரத்தின் பெயர். தமிழ்நாடு என்ற பெயர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார் பேரறிஞர். இப்படி கோரிக்கை வைத்த அதே அண்ணா, ‘முதலமைச்சர் அண்ணா'வாக வந்த பிறகுதான் ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது.
ஜூலை 18 - ‘தமிழ்நாடு நாள் அல்ல' என்று சிலர் சொல்லி வருகிறார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காக தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களின் வரலாறு தெரியவில்லை. அல்லது தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. 1956 ஆம் ஆண்டோடு எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். 1967 ஆம் ஆண்டு தான் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. 1970 வரைக்கும் எல்லைகளைப் பிரிக்கும் பணி, ஒப்படைக்கும் பணி நடந்து கொண்டு இருந்தது. எனவே, 1956ஆம் ஆண்டோடு எல்லாம் கிடைத்துவிட்டது என்பதே வரலாறு அறியாதவர் கூற்றாகும்.
“திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் - பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக ஆகாமல் போயிருந்தால் இன்று வரை தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்திருக்காது'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதுதான் முழுமுதல் உண்மையாகும்.
கழகம் ஆட்சிக்கு வந்ததால் தான் ‘தமிழ்நாடு' கிடைத்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சர் ஆனதால் தான் ‘தமிழ்நாடு' என்ற பெயர் கிடைத்தது. முதலமைச்சராக - தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்ததால் தான் ‘தமிழ்நாடு நாள்' என்ற உணர்ச்சி மிகு நாள் கிடைத்தது. இது வெறும் நாளல்ல, வாழ்விலோர் திருநாளாக - உணர்ச்சி மிகு விழாவாக கொண்டாடப்பட்டது.
தலைநகரில் விழா, மாவட்டங்கள் தோறும் விழா, கல்லூரிகள் தோறும் போட்டிகள், கண் காட்சிகள் என தமிழ்வளர்ச்சித் துறையும் செய்தித்துறையும் இணைந்து முன்னெடுத்து ஜூலை 18 என்பது தமிழர் இல்லம் தோறும் கொண்டாட வேண்டிய திருநாளாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு வாழ்க! வாழ்க வாழ்கவே!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!