murasoli thalayangam
நாமக்கல் மாநாடு: கொள்கை தொடங்கி நடைமுறைச் சிக்கல்கள் வரை அனைத்துக்கும் தீர்வு சொன்ன முதல்வர் - முரசொலி !
கழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க வகையில் நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.
கரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை முடித்து விட்டு நாமக்கல்லில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகை தந்தார்கள். கரூரில் மக்கள் கடலலை என்றால் - நாமக்கல் எல்லையிலும் அதே அலை தொடர்ந்தது.
தொடர்ந்து 12 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் அணிவகுத்து தலைவரை வரவேற்றது. ‘இந்த எழுச்சியைப் பார்க்கும் போது மாநில மாநாட்டையே நடத்தி இருக்கலாமோ?’ என்று தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அந்தளவுக்கு மக்கள் பெருந்திரள் மாநாடாக அது அமைந்திருந்தது.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை என்பது உள்ளாட்சி அமைப்புகளுக்கானதாக மட்டுமல்லாமல், உலகத்துக்கே சொல்வதாக அமைந்திருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை கொள்கைகளில் தொடங்கி நடைமுறைச் சிக்கல்கள் வரை அனைத்துக்கும் தீர்வு சொல்வதாக அவரது உரை அமைந்திருந்தது.
* எவ்வளவு கவனத்தோடு உழைத்து - இந்தப் பொறுப்புகளுக்கு நீங்கள் வந்தீர்களோ - அதே கவனத்தோடு நீங்கள் இந்தப் பொறுப்பையும் கவனிக்க வேண்டும்.
* மக்கள் பணியில் முதல் படி என்பது உள்ளாட்சி அமைப்புகள் தான். இந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான் மக்களுக்கு நேரடியாகத் தொண்டாற்றுவதற்கான பயிற்சியைப் பெற முடியும்.
* அரசியலில் ஈடுபட்ட எனக்கு முதலில் கிடைத்தது பதவியல்ல, சிறை. அத்தகைய சிறைச்சாலையில் இருந்து வெளியில் வந்த பிறகு நான் சட்டமன்றத்துக்குள் நுழைய 12 ஆண்டுகள் ஆனது. இதனை நான் ஏன் சொல்கிறேன் என்றால் பொறுப்புகள் உடனடியாகக் கிடைத்துவிடாது.
* சில ஆயிரம் பேருக்குத்தான் பொறுப்பு கிடைக்கும். அதனை பொறுப்பாக - மக்களுக்காக மட்டும் பயன்படுத்துங்கள்.
*உங்கள் கையெழுத்தின் வலிமையை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கையெழுத்துக்கு மக்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் மாபெரும் சக்தி இருக்கிறது.
*என்னை மக்கள் பாராட்டுகிறார்கள் என்றால், மக்களுக்கு நன்மை செய்ததால் பாராட்டுகிறார்கள். நீங்களும் அத்தகைய நன்மையைச் செய்து பாராட்டுகளைப் பெறுங்கள்.
* சட்டப்படி - விதிமுறைப்படி - நியாயத்தின்படி - மக்களுக்காக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நான் எச்சரிக்கிறேன். கட்சி ரீதியான நடவடிக்கை மட்டுமல்ல - சட்டரீதியான நடவடிக்கையே எடுக்கப்படும்.
நான் அதிகப்படியான ஜனநாயகவாதியாக ஆகிவிட்டேன் என்று எனக்கு நெருக்கமான சில நண்பர்கள் சொல்கிறார்கள். அனைவர் கருத்தையும் கேட்டு - அவர் கருத்துக்கும் மதிப்பளித்துச் செயல் படுவதுதான் ஜனநாயகமே தவிர - யாரும் எதையும் செய்யலாம் என்பது ஜனநாயகமல்ல. அப்படி நான் மாறிவிடவுமில்லை.
ஒழுங்கீனமும் - முறைகேடும் தலைதூக்குமானால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என்பதை உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல அனைவர்க்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
* திராவிட இயக்கக் கொள்கைகளை முழுமையாக உள்வாங்கி நடந்து கொள்ளுங்கள்.
* சமத்துவப் பாதைகள் அமைப்பதும் உங்களது கடமை. சகோதரத்துவப் பாலங்கள் அமைப்பதும் உங்களது கடமை. சமூகத்தின் கழிவுகளைத் துடைக்க வேண்டியதும் உங்கள் கடமைகள்தான். அதனால்தான் இதனை திராவிட மாடல் ஆட்சி என்கிறோம்.
* அனைவருக்குமான வளர்ச்சி - அனைத்துத் துறை வளர்ச்சி - அனைத்து மாவட்டத்து வளர்ச்சி - என்ற வரிசையில் அனைத்து சமூகங்களின் வளர்ச்சி என்று நான் சொல்லி வருவது இதுதான். அனைத்துச் சமூகங்களையும் வளர்க்காமல் அனைவருக்குமான வளர்ச்சியை நீங்கள் உருவாக்கி விட முடியாது. - இதுதான் நாமக்கல் பிரகடனத்தின் உள்ளடக்கம் ஆகும்.
அனைத்து சமூகங்களையும் வளர்க்காமல் திருவள்ளுவர், கீழடி, பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் என்று பேச முடியாது. அதற்கான தகுதி இல்லை என்பதையும் முதலமைச்சர் அவர்கள் விளக்கி உள்ளார்கள். கொள்கையும் கோட்பாடுகளும்தான் நிரந்தரமானவை, அதனைச் செயல்படுத்தும் பயணத்தில் பதவிகள், பொறுப்புகள் வரும் என்பதையும் விளக்கி இருக்கிறார் முதலமைச்சர்.
திராவிட முன்னேற்றக் கழகம் இன்று அதிகாரத்தில் இருக்கிறது. ஆட்சியில் இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சிக்கு, தனது ஆட்சியில் இலக்கு என்ன, அதன் பாணி என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும். அதனை கட்சி - கொள்கை - ஆட்சி - நிர்வாகம் ஆகிவற்றுக்கு ஏற்ப வடிவமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். அந்த வடிவத்துக்கு செயல் வடிவம் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
கட்சி - ஆட்சி ஆகிய இரண்டையும் இணைக்கும் கோடு தேவை. கொள்கை - நிர்வாகம் ஆகிய இரண்டையும் இணைக்கும் கோடு தேவை. இந்தக் கோடு ஒன்றின் மீது ஒன்றாக உட்கார்ந்து விடவும் கூடாது. இரண்டும் சேரவே முடியாமல் பிரிந்து வேறுவேறு பாதையில் போய்விடவும் கூடாது. நேர் கோட்டில் குறிப்பிட்ட இடைவெளியுடன் ஒருசேர பயணித்தாக வேண்டும். இத்தகைய ‘காம்பஸ்’ முள்ளைப் போல முதலமைச்சர் அவர்கள் கோடு போட்டுப் பேசி இருக்கிறார்.
இவை அனைத்தும் சொல்ல வேண்டிய பாடங்கள் ஆகும். புதிதாகப் பொறுப்புக்கு வந்தவர்கள் பலர். அதிலும் பெண்கள் பலரும் இருக்கிறார்கள். நிர்வாகத்தையும் இவர்கள் படித்தாக வேண்டும், கொள்கைகளையும் புரிந்தாக வேண்டும். கொள்கைக்கு ஏற்ப நிர்வாகம், நிர்வாகத்துடன் பொருந்திய கொள்கை ஆகிய இரண்டுமே முக்கியமானது ஆகும்.
கொள்கைகள், நடைமுறைகளை வழி நடத்துகின்றன. அதே நேரத்தில் நடைமுறைப்படுத்த முடியாத கொள்கைகளாலும் பயனில்லை. கொள்கையை விட்டு விலகி நின்று ஒரு நிர்வாகத்தைத் தருவதாலும் பயனில்லை. இவை அனைத்தையும் உணர்ந்து மொழிந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!