murasoli thalayangam

இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல்.. எதை குறிப்பிடுகிறது முரசொலி தலையங்கம்?

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூன் 30, 2022) தலையங்கம் வருமாறு:

கடந்த மார்ச் மாதம் டெல்லியில் பிரதமர் அவர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். அதில் மிக முக்கியமானது; சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பானது ஆகும்.

கடந்த பிப்ரவரி மாதம் வரை நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீடான 13,504.74 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சொன்ன முதலமைச்சர் அவர்கள், ஜூன் 2022-க்குப் பின்பும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள். அந்தக் கோரிக்கையை இப்போது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் வழிமொழியத் தொடங்கி இருக்கின்றன.

ஜி.எஸ்.டி. இழப்பீடு அளிப்பை ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ள செய்தியைப் பார்க்கும் போது, தமிழ்நாடு முதலமைச்சரின் குரலை பெரும்பாலான மாநிலங்கள் வழிமொழியத் தொடங்கி இருக்கின்றன என்றே சொல்ல வேண்டி உள்ளது.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையிலான அகில இந்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டமானது சண்டிகரில் தொடங்கி உள்ளது. இது இரண்டு நாள் மாநாடு ஆகும். இம்மாநாட்டில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளார்கள். இதில் பேசிய பல்வேறு மாநிலப் பிரதிநிதிகள் ஜி.எஸ்.டி. குறித்த தங்களது அழுத்தமான விமர்சனங்களை வைத்துள்ளார்கள்.

சத்தீஸ்கர் நிதிஅமைச்சர் டி.எஸ்.சிங் தேவ் சார்பில் ஒரு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ஜி.எஸ்.டி. வருவாய் என்பது மாநிலத்துக்கும் ஒன்றியத்துக்கும் சரிசமமாக பிரித்தளிக்கப்படும் முறையை மாற்றி, மாநிலங்களுக்கு 70 முதல் 80 சதவிகிதம் வரை வழங்க வேண்டும். ஜி.எஸ்.டி.யால் சத்தீஸ்கர் மாநிலம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சுரங்கம் மற்றும் தொழில் துறையை நம்பியுள்ள மாநிலங்கள் இந்த வரிவிதிப்பு முறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் ரூ.4127 கோடியும், அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.3620 கோடியும் சத்தீஸ்கர் மாநிலம் இழந்ததாக அவர் கூறி இருக்கிறார். இப்படி ஒவ்வொரு மாநிலமும் சொல்ல முடியும்.

பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

‘மாநிலங்கள் எதிர்கொள்ளும் வருவாய் இழப்பை எதிர்கொள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்’ என்று கேரள மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் வலியுறுத்திப் பேசினார். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது.

“இந்தியப் பொருளாதார அமைப்பின் மைல்கல் ஜி.எஸ்.டி.” என்றும், அதுதான் இந்தியாவையே காப்பாற்றப் போகிறது என்றும் அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில், மாநிலங்களின் வளர்ச்சியைத் தனித் தனியாகத் தடுத்து ஒட்டுமொத்தமாக இந்திய வளர்ச்சிக்கு தடைக்கல் போடுவதுதான் இந்த வரி விதிப்பு முறையாகும்.

வரிகள் அதிகமாகும் போது சொல்லப்படும் சமாதானம் என்பது மக்களுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்வதற்குத்தான் வரிகள் போடப்படுகிறது என்பார்கள். அந்த வகைகளில் மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான அனைத்து அடிப்படை நன்மைகளையும் செய்பவை மாநிலங்கள்தான். அவற்றிடம் இருந்து நிதி உரிமையைப் பறிப்பதே இந்த ஜி.எஸ்.டி.யின் நோக்கமாக இருக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்ட விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய கே.சந்தானம், “இந்தியாவின் அனைத்து அதிகாரங்களும் மத்தியில் குவிக்கப்பட்டால் அந்த அரசின் வாசலில் நின்று பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்களாக மாநிலங்கள் ஆகிவிடும்” என்று சொன்னார். அதுதான் இப்போது நடக்கிறது. “நார்த் ப்ளாக்கில் நிற்கும் அநாதைக் குழந்தையைப் போல மாநிலங்கள் ஆகிவிடும்” என்று அரசியலமைப்புச் சட்ட உறுப்பினர் விசுவநாத்தாஸ் குறிப்பிட்டார். அதுதான் இப்போது நடக்கிறது.

“ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் ஒரு கணக்கில் நிதி திரட்டுவது மற்றும் திரட்டப்பட்ட நிதியில் மாநிலங்களின் பங்கினை வழங்கு வதில் ஏற்படும் தாமதத்தின் காரணத்தால், மாநில அரசுகளுக்கு விரக்தியும் கோபமும் ஏற்படுகிறது. இதனால், மாநில அரசுகள், சட்டப்படியாக தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதிப் பங்கினைப் பெறுவதற்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன” என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஒரு முறை குறிப்பிட்டார். அதுதான் இப்போது நடக்கிறது.

1948ஆம் ஆண்டு சந்தானமும், விசுவநாத்தாஸும் குறிப்பிட்டதுதான் இன்று நடக்கிறது.

பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில் அவரிடம் நேரடியாக நிதிக்கோரிக் கைகள் வைத்த பிறகுதான், தமிழகத்துக்கான நிலுவைத் தொகையான 9,602 கோடி ரூபாயை ஒன்றிய அரசு விடுவித்தது. பிரதமர் முன்னால் இப்படி கேட்கலாமா என்றும், தமிழகத்துக்கு நிலுவைத் தொகையே இல்லை என்றும் சிலர் உளறிக் கொண்டு இருந்தார்கள். எல்லாவற்றையும் கொடுத்து விட்டார்கள் என்றால் பிறகு எப்படி ஒன்றிய அரசு விடுவித்தது என்ற அடிப்படை அறிவு கூட அவர்களுக்கு இல்லை. இப்படி ஒவ்வொரு முறையும் கெஞ்சிக் கூத்தாடித்தான் வாங்க வேண்டிய நிலைமை இருக்கிறது.

‘நாங்கள் அதிகம் வரி கட்டுகிறோம், ஆனால் குறைவாகக் கொடுக்கிறீர்கள்’ என்று முதலமைச்சர் அவர்கள் கேட்பதில் என்ன தவறு? அதிகம் பேர் வரி செலுத்துகிறார்கள் என்பதை பெருமையாகச் சொல் கிறார்கள். அந்த வரியானது அதிகம் பேருக்குப் பயன்பட்டதா என்பதைப் பார்க்க வேண்டாமா? மாநிலங்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலமாகத்தான் அதிகம் பேருக்குப் பயன்படும். அதனை ஒன்றிய அரசு உணர்ந்தாக வேண்டும். பகிர்ந்தளிப்பதால் ஒன்றிய அரசுக்குத்தான் பெருமையே தவிர, சிறுமை அல்ல!

Also Read: “பழங்குடியினர்களுக்கு துரோகம் செய்த பா.ஜ.க. பழங்குடியினர்களின் பாதுகாவலர்களாம்” : முரசொலி தாக்கு!