murasoli thalayangam
“பழங்குடியினர்களுக்கு துரோகம் செய்த பா.ஜ.க. பழங்குடியினர்களின் பாதுகாவலர்களாம்” : முரசொலி தாக்கு!
குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு அவர்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறது பா.ஜ.க. கூட்டணி. உடனே, சமூகநீதி உணர்வு அவர்களது வட்டாரத்தில் பொங்கி வழிகிறது. ‘பார்த்தீர்களா! பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை நாங்கள் வேட்பாளராக அறிவித்துவிட்டோம். நாங்கள்தான் உண்மையான சமூகநீதியைக் காப்பாற்றுபவர்கள்” என்று அவர்கள் சொல்வதைப் பார்த்தால் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.
இசுலாமியர் ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்கியதன் மூலமாக பா.ஜ.க. ஆட்சியில் இசுலாமியர்கள் அனைவரும் முன்னேறிவிட்டதைப் போலவும் - பட்டியலின சமூகத்தைச் சார்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்கியதன் மூலமாக பா.ஜ.க. ஆட்சியில் பட்டியலின சமூகத்தவர் அனைவரும் முன்னேறிவிட்டதைப் போலவுமான ‘உண்மை நிலவரம்' தான் - இப்போது பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருப்பதன் மூலமும் அடையும் பயனாகும்.
காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஒன்றியத்தின் முன்னாள் அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா அவர்கள். அவர் அளித்த பேட்டியில் இதனை மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார்.
"ஒட்டுமொத்த சமூகத்தின் உயர்வு என்பது அரசாங்கம் பின்பற்றும் அதன் கொள்கைகளைப் பொறுத்தது. தவிர, ஒரு சமூகத்தில் தனிமனிதனின் உயர்வு, அந்தச் சமூகத்தை ஒரு அங்குலம் கூட உயர்த்த உதவவில்லை என்பதற்கு நமது வரலாற்றில் பல்வேறு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. எனவே இது வெறும் அரசியல் குறியீடுதானே தவிர இதில் வேறொன்றுமில்லை.
நம் நாட்டின் அரசியல், இன்று பல்வேறு பலவீனங்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மக்கள் வீதிக்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். எனவே இந்தத் தேர்தல் வெறும் இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதைவிடவும் மேலானது. மேலும் அரசின் யதேச்சதிகாரக் கொள்கைகளை எதிர்ப்பதற்கான ஒருபடிதான் இந்தத் தேர்தல்” எனத் தெரிவித்துள்ளார்.
சந்திரசேகரராவ் கட்சி இதனை மிக எளிமையாக - அனைவர்க்கும் புரியும் படியாக விமர்சித்துள்ளது. “22 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கை, 2 முறை எம்.எல்.ஏ., 1 முறை அமைச்சர், 1 முறை ஆளுநர், இன்னும்...! ஆனால், இவ்வளவு காலம் பதவியில் இருந்தும் சொந்த கிராமத்துக்கு மின்சாரத்தைக் கொடுக்க முடியவில்லை. இதில் இவர்கள் பழங்குடி சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறார்கள்?” எனக் காட்டமாக டி.ஆர்.எஸ். கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் விமர்சனம் செய்துள்ளார்.
அவரால் சொந்தக் கிராமத்துக்கு ஆன பயன் ஏதுமில்லை. பழங்குடியின மக்கள் அடையும் பயன் என்னவாக இருக்க முடியும்? திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டதன் பின்னணியை அனைத்து ஊடகங்களும் அம்பலப்படுத்தி உள்ளன.
மயூர்பஞ்ச் மாவட்ட எல்லை ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ளது. அப்பகுதிகளில் முர்முவின் சந்தால் பிரிவு மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அம்மக்களிடம் ஓட்டு வேட்டையாட முயல்கிறது பா.ஜ.க. என்று விமர்சனம் எழுந்துள்ளது.
வரவிருக்கும் 5 மாநில தேர்தலில் குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநிலங்களில் கணிசமாக வசிக்கும் பழங்குடியின மக்களின் ஓட்டுக்களை அள்ளவும் திட்டமிட்டிருக்கிறது என்றும் விமர்சிக்கப்படுகிறது.
பா.ஜ.க.வுக்கு உண்மையிலேயே பழங்குடியினர் மீது அக்கறை இருந்தால் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் ஜார்க்கண்டில் கடந்த பா.ஜ.க. ஆட்சியின்போது பழங்குடியினர் அல்லாத ரகுபார் தாஸை ஏன் முதல்வராக்கியது என்ற கேள்விகள் தொடுக்கப்படுகிறது.
இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன. 14 கோடி மக்கள் வாழ்கிறார்கள். தங்கள் நிலங்களைக் காக்கும் போராட்டத்தில் அவர்கள் தொடர்ச்சியாக இறங்கியிருக்கிறார்கள். அவர்களை அவர்கள் வாழும் இடங்களில் இருந்து அகற்றும் நிலை தொடர்கிறது. அதற்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள்.
2006 ஆம் ஆண்டு வனச்சட்டத்தை திருத்துவதற்கு பா.ஜ.க. அரசு 2019 ஆம் ஆண்டு முயற்சித்தது. வனத்தில் இருக்கும் மரங்களை பழங்குடியினர் தொடக்கூடாது என்பதுதான் இந்த சட்டம். மரங்கள், இயற்கை வளங்கள், கனிமங்கள் ஆகியவை அரசின் சொத்துகளாக அறிவிக்கப்பட்டது. மரங்களை வெட்டினால் பிணையில் வரமுடியாத வழக்கு போடுவதாகச் சொன்னது இந்தச் சட்டம்.
வனத்தை அந்த பழங்குடியினர் ஆக்கிரமித்துள்ளார்கள் என்றே சொல்லி கைது செய்யலாம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக காடுகளையும், மலைகளையும் நம்பி வாழ்ந்த மக்களை வெளியேற்ற சட்டம் இயற்றிய கட்சிதான் பா.ஜ.க. காடுகளை ‘உற்பத்திக் காடுகள்' ஆக்கிய சட்டம் இது. காடுகளை, மனை நிலங்களைப் போல குத்தகைக்கு எடுக்க வழி வகை செய்யும் சட்டம் அது.
ஆங்கிலேய அரசால் 1927 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வனச்சட்டத்தை விடக் கொடுமையானது பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்டது ஆகும். பழங்குடியினரைப் பாதுகாக்கும் பழைய சட்டங்களின் அனைத்துக் கூறுகளையும் நீர்த்துப் போகச் செய்யும் சட்டம் இது.
பழங்குடியினரின் பல்வேறு போராட்டங்களின் காரணமாகத்தான் 2006 ஆம் ஆண்டு சட்டத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. அவை அனைத்தையும் அழித்துக் கட்டுகிறது இந்த சட்டம். பழங்குடியினரின் கிராம சபைகள் அதிகாரம் பொருந்திய அமைப்புகளாக இருந்தன. அவை அனைத்தையும் செல்லாது ஆக்கியது 2019ஆம் ஆண்டைய சட்டம். 144 தடையுத்தரவு போட்டு வனங்களுக்குள் யாரும் நடமாட முடியாமல் வழிவகை செய்த அடக்குமுறை சட்டம் இது.
இதற்கு பல்வேறு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பா.ஜ.க. அமுக்கி வைத்திருக்கிறதே தவிர, திரும்பப் பெறவில்லை. இவர்கள்தான் பழங்குடியினர்களின் பாதுகாவலர்களாம். இந்த லட்சணத்தில் சமூகநீதி வேறுபேசுகிறார்கள்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!