murasoli thalayangam
‘அக்னிபாத்’ நாட்டைப் பாதுகாக்கவா?; பா.ஜ.க.வுக்கு ஆள் எடுக்கவா? : அரசியல் சாயம் பூசியது யார்? - முரசொலி!
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘அக்னிபாத்’ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முன்னாள் ராணுவ அதிகாரிகளின் கடுமையான எதிர்ப்புக்கும் ஆளாகி இருக்கிறது அந்தத் திட்டம்.
இத்தகைய சூழலில் வந்துள்ள விமர்சனங்களை மனதில் வைத்து அந்தத் திட்டத்தை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். மாறாக ராணுவத் தளபதிகளை வைத்து பேட்டி தர வைத்திருப்பதுதான் பா.ஜ.க.வின் கடைந்தெடுத்த ‘அரசியல்’. மாறாக, ‘அரசியல் சாயம் பூசுவதா?’ என்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
"நமது நாட்டில் நல்ல நோக்கங்களுடன் கொண்டு வரப்படுகிற பல நல்ல திட்டங்கள் அரசியல் சாயங்களில் சிக்கிக் கொள்வது நமது நாட்டின் துரதிஷ்டம் ஆகும். டி.ஆர்.பி. நிர்பந்தங்களில் காட்சி ஊடகங்களும் இதில் இழுக்கப்படுகின்றன’’ என்று பிரதமர் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.
அரசியல் சாயம் பூசுகிறார்கள் என்று சொல்லும் பிரதமர் அவர்கள், அக்னிபத் திட்டத்தில் இருக்கும் நல்ல நோக்கம் எவை எவை என்று சொல்லி இருந்தால் அது குறித்து நாட்டுக்குத் தெரிந்திருக்கும். அவரால் ஏன் பட்டியல் போட முடியவில்லை. அந்தத் திட்டத்தில் இருக்கும் எதிர்மறையான அடிப்படைகளை அரசியல்வாதிகள் அல்ல, முன்னாள் ராணுவ அதிகாரிகளே விளக்கம் அளித்து வருகிறார்கள்.
இந்திய ராணுவத்தில் சேர்ந்து - நாட்டுக்காகப் பணியாற்றத் துடிக்கும் இளைஞர்கள்தான் இந்த திட்டத்துக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்தார்கள். இரண்டு ஆண்டுகளாக ராணுவத்துக்கு ஆள் எடுக்கவில்லை. கொரோனா என்று காரணம் சொல்லப்பட்டது. இனியாவது எடுப்பார்கள் என்று லட்சக்கணக்கான இளைஞர்கள் நம்பினார்கள்.
அதற்கான பயிற்சிகளில் மும்முரமாக இறங்கி வந்தார்கள். ஆனால் அதில் மண் அள்ளிப் போடும் வகையில் - இனி நான்கு ஆண்டுகள் மட்டும்தான் ராணுவப் பணி’ - என்று சொல்லியது லட்சக்கணக்கான இளைஞர்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தியது. அந்தக் கோபத்தை வன்முறைப் பாதை மூலமாகத் தெரிவித்துவிட்டார்கள்.
இப்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்த பிறகுதான் ‘அக்னிபத்’ திட்டமே பலருக்கும் அறிமுகம் ஆனது. முன்னாள் ராணுவ அதிகாரிகள், இந்த திட்டத்தின் ஆபத்தை உணர்ந்து கருத்துச் சொன்னார்கள். அதன்பிறகு தான் அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கருத்துச் சொன்னார்கள். எனவே, அரசியல் தலைவர்களால் இந்தப் போராட்டம் தொடங்கப்படவில்லை.
இளைஞர்கள் போராட்டத்துக்கு அரசியல் இயக்கங்கள் துணை நிற்கின்றன என்பது மட்டுமே உண்மை. இது தெரியாமல் அரசியல் சாயம் பூசுவதாகச் சொல்வது உண்மையை உணராத, உணர மறுக்கும் தன்மை ஆகும். அரசியல் சாயம் பூசியது யார்?
பா.ஜ.க.தான் அரசியல் சாயம் பூசியது என்று பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியே சொல்லிவிட்டது. பா.ஜ.க.வும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து ஆளும் மாநிலம் பீகார். அங்குதான் போராட்டம் அதிகமாக நடக்கிறது. இந்த வன்முறையை ஐக்கிய ஜனதா தளம் முறையாகக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்று பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
அதற்கு பதில் அளித்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவர் ராஜீவ்ரஞ்சன், "மத்திய அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது. பிறமாநிலங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன. இளைஞர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்கள். எனவே அவர்கள் போராடு கிறார்கள்.
ஆனால் நிச்சயமாக வன்முறை அதற்கான தீர்வாக இருக்க முடியாது. ஆனால் இளைஞர்களைக் கவலைப்பட வைத்திருப்பது எது என்பதையும் அவர்களது கருத்தையும் பா.ஜ.க. காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதற்குப் பதிலாக பீகார் அரசை பா.ஜ.க. குறை சொல்கிறது. இந்த திட்டத்துக்கு எதிராக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் போராட்டங்கள் நடக்கின்றன. அங்கும் பாதுகாப்புப் படைகள் செயலற்றுப் போனது பற்றி பா.ஜ.க. ஏன் பேசவில்லை?"" என்று கேட்டுள்ளார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் போராட்டம் அதிகமாக நடக்கிறது என்றால் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு பலமாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா? அரசியல் சாயம் பூசுவது யார்? ஒரு திட்டத்துக்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள் என்றால் அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அமைச்சரின் கடமை.
ஆனால் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார் என்றால்... ‘இந்தத் திட்டம் பிடிக்கவில்லை என்றால் பாதுகாப்புப்படையில் சேராதீர்கள். அந்தத் திட்டத்தில் சேர வேண்டும் என்று உங்களை யார் வற்புறுத்துகிறார்கள்? ராணுவம் என்பது வேலைவாய்ப்பு அலுவலகமோ, நிறுவனமோ, கடையோ அல்ல’ என்று சொல்லி இருக்கிறார். இதுதான் ஒரு அமைச்சர் பேசும் அழகா? அரசியல் சாயம் பூசுவது யார்? "
அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெறும் அக்னி வீரர்களுக்கு பா.ஜ.க. அலுவலகத்தில் பாதுகாவலர் பணியில் முன்னுரிமை தரப்படும்" என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா சொல்லி இருக்கிறார். இவர்கள் ராணுவ வீரர்களை தயாரிப்பது நாட்டைப் பாதுகாக்கவா? பா.ஜ.க.வுக்கு ஆள் எடுக்கவா? இதில் அரசியல் சாயம் பூசிக் கொண்டிருப்பது யார்?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!