murasoli thalayangam
”இளைஞர்கள் கனவில் மண்ணைப் போடும் திட்டம் அக்னிபாத்” .. முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூன் 20, 2022) தலையங்கம் வருமாறு:
‘அக்னிபத்' என்று எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ, வடமாநிலங்கள் அக்னியாய் எரிந்து கொண்டு இருக்கிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடங்கும் எந்தத் திட்டமாக இருந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் - ஏதாவது ஒரு வகை மக்களுக்குப் பாதகமாகத்தான் இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் ‘அக்னிபத்' என்ற திட்டமானது ராணுவ வீரர்கள் என்ற கனவுகளோடு இருப்பவர்களின் கனவில் மண்ணைப் போடும் திட்டமாக அமைந்துள்ளது.
மாநிலங்களுக்கு எதிரான ‘ஜி.எஸ்.டி. யை' போல - சிறுபான்மையினருக்கு எதிரான ‘குடியுரிமைச் சட்டம்' போல - விவசாயத் தொழிலாளர்க்கு எதிரான ‘மூன்று வேளாண் சட்டங்களைப்' போல - மருத்துவம் படிக்க நினைக்கும் பிள்ளைகளின் கனவைச் சிதைப்பது ‘நீட்' என்பதைப் போல - கல்விச் சாலைக்குள் உள்ளே நுழைய விடாமல் - நுழைந்தவர்களையும் விரைவில் வெளியேற்றும் ‘புதிய கல்விக் கொள்கையைப்' போல - ராணுவ வீரர்களாக ஆகும் கனவில் இருப்பவர்களைச் சிதைப்பதே ‘அக்னிபத்' ஆகும்!
தமிழ்நாட்டில் ‘நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுவாக இருந்தது. ஏனென்றால் இங்கு மருத்துவம் படிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகம். வடமாநிலங்களில் அவர்கள் குறைவு. அதனால் நீட்டுக்கு எதிரான போராட்டம் அங்கே அதிகம் எழவில்லை.
வடமாநிலங்களில் இப்போது ‘அக்னிபத்'க்கு எதிரான போராட்டம் அதிகமாக எழுகிறது. ராணுவத்துக்குச் செல்லும் மக்கள் அதிகம். இங்கே அதற்கு எதிரான போராட்டம் இல்லை. இந்த வேறுபாட்டை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
‘நீட்'க்கு எதிராக அவர்கள் போராடவில்லை என்பதற்காக ‘நீட்' தேர்வை ஆதரிக்கிறார்கள் என்று பொருள் அல்ல. இங்கே ‘அக்னிபத்' போராட்டம் எழவில்லை என்பதற்காக அதனை ஆதரிக்கிறார்கள் என்றும் பொருள் அல்ல. பா.ஜ.க. கொண்டு வரும் எதையும் எந்த மக்களும் ஆதரிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் மக்களுக்காகச் சிந்திப்பவர்கள் அல்ல. வெகுஜன விரோதத் திட்டங்களாகத்தான் அவை எப்போதும், எப்படியும் அமையும்.
மேலோட்டமாகப் பார்த்ததும் ‘அக்னி பத்' திட்டம் புல்லரிக்க வைக்கும் திட்ட மாகும். ஆஹா! இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் நான்கு ஆண்டு கால ராணுவப் பயிற்சி திட்டம். இதன் மூலமாக இந்தியாவின் அனைத்து இளைஞர்களும் ராணுவப் பயிற்சி பெற்று தேச பக்த திலகங்களாக மாறுவார்கள் என்று நினைக்கலாம். உண்மை அது அல்ல, ராணுவ வீரர்களையும் ‘தற்காலிகப் பணியாளர்களாக' தரம் குறைக்கிறார்கள் என்பதுதான் இதன் உள்ளே மறைந்திருக்கும் உண்மை ஆகும்.
இராணுவ வீரர்கள் இருபது, இருபத்து ஐந்து ஆண்டுகள் பணியாற்றி உயர்வு களை அடைவதைத் தடுத்து - அவர்களது பணிப் பாதுகாப்பைச் சிதைத்து - அவர்களது ஊதியச் சலுகை களை மறுத்து - மொத்தத்தில் நான்காண்டு ‘குத்தகைப் பணியாளர்களாக' அவர்களையும் சிதைக்கும் திட்டம் தான் இந்த அக்னிபத். புரியாத ‘பாஷை'யில் பெயர் வைத்து விட்டால் அதை நிறைவேற்றி விடலாம் என்ற தந்திரம்தான் இதனுள் இருக்கிறது.
தொழில் துறையில் ஒப்பந்தப் பணியாளர் எடுப்பதைப் போல - ராணுவத்தில் எடுத்து - நான்கு ஆண்டுகள் கழித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பப் போகிறார்கள். தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். அதிலும் ஒருதொகையைப் பிடித்து வைத்துக் கொண்டு நான்காண்டுகள் கழித்து அவர்களுக்கே கொடுப்பார்கள். இதை புரட்சிகரமான திட்டம் என்கிறார் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்.இது பேரழிவுத் திட்டமே தவிர, புரட்சி எதுவும் இல்லை.
இராணுவப் பயிற்சி பெற்றவர்களாக பல லட்சம் பேர் வேலை இல்லாமல் நாட்டுக்குள் அலைந்தால் - அதனால் ஏற்படும் எதிர்நிலைப் பாதிப்புகளை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. அல்லது அவர்களது நோக்கமும் அதுதானா என்பதும் புரியவில்லை. இந்த ‘அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக முன்னாள் ராணுவ அதிகாரிகள்தான் அதிகமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.
ஓய்வு பெற்ற லெப்டினெண்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா, “ஒன்றரை ஆண்டுகள் பயிற்சியில் போய்விடும், ஒன்றரை ஆண்டுகள்தான் அவர்கள் ராணுவ வீரர்களாக இருப்பார்கள். இது ஒரு படைப்பிரிவின் நெறிமுறை ஒழுக்கங்களைப் போதிப்பதற்கு போதாது'' என்று சொல்லி இருக்கிறார்.
‘இந்த முடிவு நாட்டுக்கே ஆபத்தான முடிவாகும். இது ராணுவக் கட்டமைப்பைக் குலைப்பதுடன் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் ராணுவ மயமாக்கும் ஆபத்தும் உள்ளது” என்று லெப்டினெண்ட் ஜெனரல் வினோத் பாட்டியா சொல்லி இருக்கிறார்.
ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் ஜி.டி. பக்ஷி சொல்லி இருக்கிறார். “கடவுளுக்கு உண்மையாக, தயவுசெய்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி விட வேண்டாம். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் மூலமாக மிகப்பெரிய அச்சுறுத்தல் நிலவும் இந்தச் சூழலில் பணத்தைச் சேமிப்பதற்காக தயவு செய்து நமது ராணுவக் கட்டமைப்புகளை அழித்து விடாதீர்கள். அக்னி வீரர்கள் தேர்வில் அவர்கள் சம்பளத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளீர்கள். ராணுவ வீரர்களின் நலன், ஒழுக்கம், நாட்டின் நலன் எதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை” என்று சொல்லி இருக்கும் அவர், இன்னொரு ஆபத்தான விளைவையும் சொல்லி இருக்கிறார்.
“பயிற்சி பெற்ற மற்றும் இளம் ராணுவ மனித சக்தியை நாம் நிரந்தரமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அது பயங்கரவாதிகள் அல்லது கிளர்ச்சியாளர்களுக்குச் சாதகமாகி விடலாம்” என்பது, ராணுவ மேஜர் ஜெனரலின் பயம் கலந்த கருத்து ஆகும். ‘அக்னிபத்' என்பது இந்திய நாட்டின் எதிர்காலத்துக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடியதாக இருக்கிறது என்று ராணுவ அதிகாரிகளே சொல்கிறார்கள். எனவே, இந்த விஷப்பரிட்சை வேண்டாம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!