murasoli thalayangam
“‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிக்கையை வைத்து பழிவாங்க துடிக்கும் பா.ஜ.க அரசு” - சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !
‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிக்கையை வைத்து ஒரு தேசிய அளவிலான பழிவாங்கலை பா.ஜ.க. அரசு நிகழ்த்துகிறது. ‘நேஷனல் ஹெரால்டு ஊழல்’ என்ற வார்த்தையை பிரபலப்படுத்துவதன் மூலமாக காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தும் நோக்கம் மட்டும் தான் இருக்கிறதே தவிர வேறு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
இதுகுறித்து ஒன்றியத்தின் முன்னாள் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். “நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கு சிரிக்கும்படியாக இருக்கிறது. வருமான வரிப் புகாருக்குக் கீழ் இந்த வழக்கை பதிவு செய்யவே முடியாது. சி.பி.ஐ., தில்லி போலீஸ் யாராவது இதில் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளார்களா? இந்த வழக்கில் தவறான பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். அதற்கு என்ன ஆதாரம்? எல்லாப் பரிவர்த்தனையும் வெளிப்படையாக நடந்துள்ளது.
இதில் எங்கே முறைகேடு நடந்துள்ளது என்று அவர்களால் காட்ட முடியுமா? நேஷனல் ஹெரால்டு வழக்கில் யார் மீது யார் எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது? எப்.ஐ.ஆர். நகலையே இன்னும் தரவில்லையே ஏன்? எப்.ஐ.ஆரில் யார் மீது தவறு, என்ன தவறு என்று எங்காவது கூறப்பட்டு இருக்கிறதா? திட்டமிடப்பட்ட குற்றம் (Scheduled Offence) என்று கூறப்படும் இந்த வழக்கில் எங்கும் எப்.ஐ.ஆரே பதிவு செய்யப்படவில்லை.
எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட பின்னர்தான் பி.எம்.எல்.ஏ. (கறுப்புப்பணத்தை வெள்ளை ஆக்குவது) குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். திட்டமிடப்பட்ட குற்றத்தின் (Scheduled Offence) கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாத நிலையில் கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்குவது பற்றி விசாரணை செய்யவே முடியாது.
ஒன்றிய ஆளும் பா.ஜ.க. அரசு, சட்டத்தையோ ஜனநாயகத்தையோ மதிப்பது இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதித்து நடந்தால் எங்களுக்கு சிக்கல் எதுவும் இல்லை. அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதிப்பது இல்லை என்பது தான் பிரச்சினை. ஒன்றிய அரசு சட்டத்தை துச்சமாக மதிப்பதாலேயே நாங்கள் போராடுகிறோம். கடந்த 4, 5 ஆண்டுகளில் எந்த ஒரு பா.ஜ.க. தலைவருக்கு எதிராகவும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறதா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை ப.சிதம்பரம் எழுப்பி இருக்கிறார்.
இப்படி எப்.ஐ.ஆரே பதிவு செய்யாத வழக்கை வைத்துத்தான் கடந்த பல ஆண்டுகளாகப் பயம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். சில நாட்களாக மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ‘நேஷனல் ஹெரால்டு’ என்ற வார்த்தையை காங்கிரஸுக்கு எதிரான அஸ்திரமாக மாற்றிவிட்டால் அவர்கள் அதற்குப் பதில் சொல்வதிலேயே தங்களது வாழ்வைச் செலவழித்து விடுவார்கள் என்று பா.ஜ.க. நினைக்கிறது.
காங்கிரஸுக்கு எதிராக எத்தகைய பலவீனமான அஸ்திரத்தை பா.ஜ.க. ஏவுகிறது என்பதை இந்த வழக்கைப் பார்த்தாலே தெரியும். 1938ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அவர்களால் பிரிட்டிஷ் இந்தியாவில் தொடங்கப்பட்ட பத்திரிக்கை இந்த நேஷனல் ஹெரால்டு. அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏ.ஜே.எல்.) என்ற நிறுவனத்தின் சார்பில் இந்த பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் மிகச் செல்வாக்கான பத்திரிக்கைகளில் இதுவும் ஒன்று.
நேரு அவர்களின் மிகக்கடுமையான அரசியல் தலையங்கங்கள் காரணமாக 1942ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியால் இப்பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் ஆன நேரு, அந்தப்பத்திரிக்கையின் இயக்குநர் குழுவில் இருந்து தனது பொறுப்பை விட்டு விலகினார். ஆனாலும் காங்கிரசு கட்சியின் நிதியின் மூலமாகத்தான் அது செயல்பட்டது. 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 2016 முதல் இணையப் பதிப்பாக வெளிவந்தது.
2012 ஆம் ஆண்டு சோனியா, ராகுலுக்கு எதிராக இந்தப் பத்திரிக்கையின் பெயரை சுப்பிரமணியம் சுவாமி பயன்படுத்தினார். இருவரும் காங்கிரஸ் கட்சி நிதியைப் பயன்படுத்தி, ஏ.ஜே.எல். நிறுவனத்தை கைப்பற்றி அதன் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை அடையும் நோக்கில் செயல்பட்டதாக, சுப்பிரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
“நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் வெளியீட்டு நிறுவனமான ஏ.ஜே.எல். நிதி நெருக்கடிகளில் சிக்கியபோதும், அதன் வரலாற்றுப் பாரம்பரியம் மீது நம்பிக்கை வைத்திருந்ததால், காங்கிரஸ் அதனை கை விடாமல் இருந்ததாக அக்கட்சி கூறியுள்ளது. பல்வேறு சமயங்களில் மொத்தமாக காங்கிரஸ் கட்சி ஏ.ஜே.எல். நிறுவனத்திற்கு 90 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. 2010 ஆம் ஆண்டில் ஏ.ஜே.எல். நிறுவனம் கடனில் இருந்து விடுபட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பங்குகளை ஒதுக்கினோம்” என்கிறது காங்கிரஸ் கட்சி.
இதில் லாப நோக்கம் ஏதுமில்லை என்றும் அக்கட்சி சொல்கிறது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் உரிமையாளர், அச்சு நிறுவனம், வெளியீட்டாளராக ஏ.ஜே.எல். நிறுவனம் தொடர்ந்து இருக்கிறது. அதன் சொத்துக்களில் எவ்வித மாற்றமோ பரிமாற்றமோ இல்லை” என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் ஜூன் 2014-ம் ஆண்டு ராகுல், சோனியா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
2015- ஆம் ஆண்டு இவ்வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவருக்கும் முன் பிணை வழங்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டுக்குச் சொந்தமான சுமார் 16 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை பறிமுதல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. 2014 முதல் 7 ஆண்டுகளாக இவ்வழக்கில் பெரிதும் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில், ராகுலிடம் விசாரணை நடத்துவதாகச் சொல்வது, இதனை வைத்து மிரட்டும் தந்திரமே தவிர வேறல்ல!
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!