murasoli thalayangam

“நடுநிலையாவது மண்ணாங்கட்டியாவது..” - வன்ம வார்த்தைகளை உதிர்த்த ‘Times of India’வுக்கு ‘முரசொலி’ பதிலடி!

சிலருக்குத் தங்களை நடுநிலையாளர்களாகக் காட்டிக் கொள்வதற்காக - தி.மு.க.வை தங்களது நகத்தால் கீறிக் கொண்டே இருப்பார்கள். அதில் ஒரு அலாதியான சுகம் சிலருக்கு.

தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் - பொறுப்பில் இருப்பவர்கள் - அமைச்சர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊத்திப் பார்த்து கவனித்துக் கொண்டு இருந்து - ஒரே ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு - அய்யோ குய்யோ முறையோ என்று கனைப்பார்கள். தி.மு.க.வினரின் சிறு துரும்பு கண்ணுக்குத் தெரிந்த அவர்களுக்கு - மற்ற சிலரின் கண்ணில் குத்தி நிற்கும் கடப்பாரையே தெரியாது. ஏனென்றால் இவர்கள் கண்ணை மறைப்பது தி.மு.க. மீதான வன்மம் தானே தவிர - நடு நிலையாவது மண்ணாங்கட்டியாவது!

அந்த வரிசையில் ‘டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் தன்னை உலகத்தின் நல்லபிள்ளையாகக் காட்டிக் கொள்வதற்காக - முதலமைச்சருக்கு அறிவுரை சொல்லி ஒரு கட்டுரையை வெளியிட்டு உள்ளது. அமைச்சர்கள் சிலர் தவறாகப் பேசுகிறார்களாம், அவர்களை முதலமைச்சர் கண்டிக்கவேண்டுமாம்.

‘அண்ணாமலையின் வாலை ஒட்ட வெட்டுவோம்' என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசிவிட்டாராம். அப்படிப் பேசலாமா? என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. வாலை வெட்டுவோம் என்பது குறியீடுதான். அதிகமாக ஆடிக் கொண்டு இருக்கிறீர்கள், உங்களது ஆட்டத்தை நிறுத்துவோம் என்பதை மேடை மொழியில் சொல்லி இருக்கிறார் அமைச்சர். இதில் என்ன தவறைக் கண்டார்கள்?

தொடர்ச்சியாக மேடைத் தமிழோடு பயணித்தவர்களுக்கு இது சாதாரணமான வார்த்தைகள்தான். தொடர்ச்சியாக அவதூறு பேசிக்கொண்டு வரும் அண்ணாமலை சிறைக்குச் செல்வது உறுதி என்று சொல்வதும் எப்படித் தவறாகும்?

‘இந்தி மொழி நம்மை இரண்டாம் தரக் குடி மக்களாக ஆக்கும், நம்மை அடிமைகள் ஆக்கும்' என்ற பொருளில் ‘நம்மைச் சூத்திரராக்கும்' என்று டி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார். ‘முதலில் இந்தியை ஆட்சி மொழி ஆக்குதல், அதன் பிறகு சமஸ்கிருதத்தை ஆட்சி மொழி ஆக்குதல்' என்பது ஜனசங்கத்தின் அடிப்படைக் கொள்கை ஆகும். இந்தி மயமாக்குதல் - சமஸ்கிருத மயமாக்குதல் ஆகிய இரண்டும் இரட்டைக் குழந்தைகள் ஆகும்.

தமிழை மட்டுமல்ல, இந்தி அல்லாத தாய் மொழி பேசும் மக்கள் ‘இந்திமயமான இந்தியாவில்' அடிமைகளாகத்தான் இருப்பார்கள். அடிமைகள் தான் சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள் என்கிறது மனுஸ்மிருதி. இதனைத்தான் டி.கே.எஸ்.சுருக்கமாகச் சொல்லி இருக்கிறார். இதில் என்ன தவறு?

‘இந்தி படித்தால் இந்தியா முழுவதும் வேலைக்குப்போகலாம்' என்பது தேசபக்த திலகங்களால் கட்டமைக்கப்படும் பொய் பிரச்சாரம். இந்திக்கு ஆதரவாக அவர்களால் சொல்ல முடிந்த ஒன்றே ஒன்று, ‘வேலை கிடைக்கும்' என்பதுதான். அதற்குப் பதில் சொல்வதற்காக, அமைச்சர் பொன்முடி இத்தகைய பானிபூரி உதாரணத்தைச் சொன்னார். இது ஏன் உங்களுக்கு சுருக்கென்கிறது?

ஹெச்.ராஜாவுக்கும், அண்ணாமலைக்கும், குருமூர்த்திக்கும் வலிக்க வேண்டியது ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வுக்கு ஏன் வலிக்கிறது?

பத்திரிக்கையாளர்கள் மொத்தப் பேரையும் கூட்டி வைத்துக் கொண்டு உனக்கு 200 ரூபாய் அறிவாலயம் தரும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சொல்கிறார். 300 தருகிறேன், 500 தருகிறேன், 1000 தருகிறேன், 2000 தருகிறேன், 3000 தருகிறேன்... என்று தமிழ்நாட்டுப் பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் ஏலம் போட்டு கமலாயத்தில் விற்றார் அண்ணாமலை. இந்த அண்ணாமலையின் நாவை அடக்கச் சொல்லி நட்டாவுக்கு கடிதம் அனுப்பியதா டைம்ஸ் ஆப் இந்தியா? அப்போது டைம்ஸ் ‘ஆப்' ஆனது ஏன்?

பட்டியலினச் சமூகத்தினரை அவமானப்படுத்தும் வகையில் கருத்துச் சொல்லிய அண்ணாமலை மீது தமிழ்நாட்டின் நாலா பக்கமும் உணர்ச்சி உள்ள மனிதர்களால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்பிறகும் தான் சொன்னதை நியாயப்படுத்தி மீண்டும் டுவிட் போடுகிறார். அண்ணாமலை மீது வன்கொடுமை வழக்கு பாயவேண்டும் என்று 1955,1976 சட்டங்களை மேற்கோள் காட்டி எழுதியதா டைம்ஸ்? குறிப்பிட்ட சாதிப் பெயரைச் சுட்டிக் காட்டிப் பேசுதல் தவறு என்பது தெரியுமா தெரியாதா? அப்போது டைம்ஸ் ‘ஆப்' ஆனது ஏன்?

வாய்க்கு வந்ததை - கண்ட கண்ட இடத்தில் வாந்தி எடுத்து வருகிறார் அண்ணாமலை. அவை மொத்தமும் அவதூறுகள். அரைவேக்காட்டுத் தனமான உளறல்கள். ‘தனது சொந்த சுய விருப்பத் தேவைக்காக' யாரோ சிலர் கொடுத்த தவறான தகவல்களை கக்கிக் கொண்டு இருக்கிறார் அண்ணாமலை. ஒரு தேசியக் கட்சி, அதுவும் நாட்டை ஆளும் கட்சியின் தலைவர் என்ற தரமே இல்லாமல் தரையில் புரண்டு கொண்டு செய்யும் புலம்பல்களை எல்லாம் கண்டிக்காமல் டைம்ஸ் ‘ஆப்' ஆனது ஏன்?

ஆளுநர் என்ற அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருக்கிறார் ஆர்.என்.ரவி அவர்கள். அவர் தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவராக தமிழ்நாட்டுக்கு வந்திருந்தால் அவர் பேச்சுகளை பொருட்படுத்தப் போவதில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை வளர்க்க வந்திருந்தாலும் வருத்தப்படப் போவதில்லை. ஆளுநராக வந்து உட்கார்ந்து கொண்டு தமிழ்நாடு அரசுக்கு எதிரான கருத்துக்களை மட்டுமல்ல, தமிழ் மக்களின் சிந்தனைக்கு எதிராகச் செயல்பட்டு வருவதையே வழக்கமாக வைத்துள்ளார். அவரது செயல்பாட்டை எத்தனை முறை டைம்ஸ் கண்டித்து எழுதி இருக்கிறது?

ஆளுநரின் சட்டமீறல் கருத்துகளை எடுத்துச் சொல்லி குடியரசுத் தலைவருக்கு கட்டுரை தீட்டி இருக்கிறதா டைம்ஸ்? அப்போது டைம்ஸ் ‘ஆப்' ஆனது ஏன்?

தினந்தோறும் புதிய புதிய திட்டங்களைத் தீட்டியதன் மூலம் - திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். வாரம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் சந்தித்து வருகிறார். கடந்த ஓராண்டு காலத்தில் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பயனடையும் வகையில் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். சட்டம் ஒழுங்கு காக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சி உலக நிறுவனங்களை ஈர்ப்பதாக உள்ளது.

தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியா முழுமைக்கும் ‘திராவிட மாடல்' ஆட்சியில் நம்பிக்கை ஒளியைப் பரப்பி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனை மறைத்து - களங்கம் விளைவிக்க இது போன்ற சில வன்ம வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள் தீட்டப்படுகின்றன. பொய்யும் புனைவும் கொண்ட வார்த்தைகளை உதிர்த்து மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வரும் சக்திகளுக்கு எதிராக டைம்ஸ் ‘ஆன்' ஆகட்டும்!

Also Read: “சனாதனம் பேசும் ஆளுநர் ரவிக்கு அது சொல்லும் அர்த்தம் தெரியுமா?” : பட்டியலிட்டு பாடம் எடுத்த முரசொலி !