murasoli thalayangam

ஒற்றைக் கோரிக்கையால் பாஜகவின் நாடகத்தை முதல்வர் காலி செய்துவிட்டார் என்ற கலக்கமா? -முரசொலி சரமாரி கேள்வி

'பிரதமருக்கு முன்னால் பிரகடனம்' என்ற தலைப்பில் முரசொலி நாளேடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவின் போது பிரதமர் மோடியிடம் மாநில உரிமைகளை நிலைநாட்டியது தொடர்பாக தலையங்கம் தீட்டியுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

”பிரதமருக்கு முன்னால் மாபெரும் பிரகடனத்தைச் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய வகையிலும் - கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்திய வகையிலும் - சுயாட்சி உரிமைகளை நினைவூட்டிய வகையிலும் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையாக முதலமைச்சரின் உரையானது அமைந்து விட்டது. பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த விழா - மாநில உரிமைகளை நிலைநாட்டும் விழாவாக அரங்கேறி விட்டது.

தமிழ்நாடு ஒரு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அளித்து வருகிறது என்றும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது என்றும் முதலமைச்சர் அவர்கள் விளக்கினார்கள். நமது நாட்டின் வளர்ச்சியிலும், ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு மிக முக்கியப் பங்களிப்பைத் தருகிறது என்பதைச் சொல்லி அதனை ஆதாரங்களுடன் முதலமைச்சர் புள்ளி விபரமாகச் சொன்னார்கள்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில், தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு என்று சொன்ன முதலமைச்சர் வரிவருவாயில், ஏற்றுமதியில், ஜவுளித் துறையில், கார்கள் ஏற்றுமதியில், தோல் ஏற்றுமதியில் எந்த அளவுக்கு தமிழ்நாடு பங்களித்து வருகிறது என்பதைப் பட்டியலிட்டார்கள். ஆனால் ஒன்றிய அரசின் வரி வருவாயில் தமிழ்நாட்டுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவது 1.21 விழுக்காடு மட்டுமே என்ற நியாயமான கேள்வியை முதலமைச்சர் எழுப்பினார்கள்.

எனவே, தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப, ஒன்றிய அரசும் - திட்டங்களிலும் நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று சொன்னார்கள். அதுதான் உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியாக அமையும் என்பதைப் பிரகடனப்படுத்தினார் முதலமைச்சர்.

ஒன்றிய அரசும் - மாநில அரசும் இணைந்து திட்டங்களைத் தொடங்கும் போது முதலில் நிதிப் பங்களிப்பை அதிகமாக அளிக்கிறீர்கள், ஆனால் காலப் போக்கில் குறைத்து விடுகிறீர்கள் என்ற முதலமைச்சரின் கவலை நியாயமானது. ஆனால் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘பிரதமரின் கூட்டத்தில் முதலமைச்சர் இப்படி பேசி இருக்கக் கூடாது" என்று சொல்லி இருக்கிறார். முதல்வர் பேச்சில் அண்ணாமலை என்ன குறையைக் கண்டுபிடித்தார்?

"தமிழ்நாட்டில் மக்களின் பேராதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு - மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்கும் முதல் அரசு விழா இந்த விழா. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக வருகை தந்தமைக்காக தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் - தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற அடிப்படையிலும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நான் முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று தொடங்கிய முதல்வர் - "ஒன்றிய அரசின் சார்பில், தமிழகத்தில் செயல்படுத்த முன்வந்த திட்டங்களுக்கும், வரும் காலத்தில் நிறைவேற்றக் கூடிய திட்டங்களுக்கும், நம்முடைய பிரதமர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘எல்லார்க்கும் எல்லாம்' என்ற இலக்கை எய்திட அனைவரும் இணைந்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவோம்" என்று இணைந்து செயல்படுவதை வலியுறுத்திப் பேசியதைத் தவறு என்கிறாரா அண்ணாமலை?

கச்சத்தீவை மீட்டெடுக்க கோரிக்கை வைத்தார் முதலமைச்சர். பிரதமர் அவர்கள் பேசும் போது இலங்கைத் தமிழர் நலன் குறித்து அதிகமாகப் பேசினார். அத்தோடு மட்டுமல்ல, இந்திய மீனவர்களும் தொடர்புடையதுதானே கச்சத்தீவு விவகாரம்? இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் வைத்தது தவறா?

15-5-2022 அன்று வரை தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய GST இழப்பீடு நிலுவைத் தொகையானது 14 ஆயிரத்து 6 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். ‘அனைவரும் இணைந்து பலமான வளமான இந்தியாவை உருவாக்குவோம்' என்று பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்கள். வளமான இந்தியாவை ஒன்றிய அரசு மட்டுமே உருவாக்கிவிட முடியாது அல்லவா? மக்களுக்கு நெருக்கமான மாநில அரசுகளும் இணைந்தால்தானே அது சாத்தியம்? எனவே இந்தக் கோரிக்கையை முதலமைச்சர் அவர்கள் முன் வைத்தது எப்படித் தவறாக இருக்க முடியும்?

தமிழை - இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என்றார் முதலமைச்சர் அவர்கள். தமிழைப் புகழ்ந்தும், பாரதியார் பாடலை மேற்கோள் காட்டியும் பேசினாரே பிரதமர். அந்தத் தமிழுக்குத்தானே உரிய மரியாதையை முதல்வர் அவர்கள் கேட்கிறார்கள்!

Also Read: “அடிப்படை நாகரிகம் இல்லாமல்.. அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” : ‘CMPC’ கடும் எச்சரிக்கை !

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கேட்பது என்பது தமிழகச் சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும். ஆளுநரே, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள தீர்மானம் ஆகும். இதனை பிரதமருக்கு நினைவூட்டுவது முதலமைச்சரின் கடமையாகும். பலரையும் தற்கொலைக்குத் தூண்டும் தேர்வு அது. அதில் நடந்த முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரித்துக் கொண்டு இருக்கிறது. பலரும் கைது செய்யப்பட்டார்கள். தனியார் பயிற்சி நிறுவனங்களின் பகல் கொள்ளைக்குக் காரணமான தேர்வு அது. ஏதோ இந்திய ஆட்சிப் பணித் தேர்வைப் போல அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்த தேர்வு முறை அல்ல. அதனைச் சுட்டிக் காட்டுவது முதலமைச்சரின் கடமை.

இலங்கைக்குச் சென்று, அதனை வைத்து தமிழ்நாட்டில் நாடகம் நடத்தலாம் என்று பா.ஜ.க. நினைத்ததை - கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள் - என்ற ஒற்றைக் கோரிக்கையில் காலி செய்துவிட்டாரே முதலமைச்சர் என்று கலங்கியபடி அண்ணாமலைகள் அலறுகிறார்கள். முதலமைச்சரின் உரை என்பது இவர்களது தமிழ் - இலங்கை - வளர்ச்சி ஆகிய கண்துடைப்பு நாடகங்களை அம்பலப்படுத்துவதாக அமைந்துவிட்டது.

பிரதமரும் - முதலமைச்சரும் அரசு விழாக்களில் கலந்து கொள்வது என்பது இயல்பானதுதான். உடனே கடந்த ஒருவாரமாக சமூக இணைய தளங்களில் சிலர் எழுதியதைப் பார்க்கும் போது இந்த நாட்டில் ஊடக தர்மம் எந்தளவுக்கு காற்றில் பறக்கிறது என்பதை அறிய முடிகிறது. ‘மோடியை விமர்சிக்க கூட்டணிக் கட்சிக்கு தடை' என்றெல்லாம் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள்.

அரசு விழாவுக்கும், அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைவிட அந்த விழாவில் மாநில உரிமைகளைக் காப்பாற்ற மிகப்பெரிய உரிமைக் குரலை முதலமைச்சரே எழுப்பி விட்டார். அந்த ஊடகங்கள் இதற்கு என்ன பதிலைச் சொல்வார்கள் என்பது தெரியவில்லை.

முதலமைச்சர் அவர்கள் தான் யார் என்பதை நிரூபிக்க பிரதமர் அவர்கள் கலந்து கொண்ட மேடை அமைந்திருக்கிறது!” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: ‘360 டிகிரி எதிரி : இதுகூட எப்படி IPS ஆனார்?’ - அண்ணாமலை பேச்சால் அப்செட் ஆன பா.ஜ.க தொண்டர்கள்!