murasoli thalayangam
“நிதி வசூலிக்கும் கலெக்ஷன் ஏஜெண்டுகளாக மாநில அரசுகள் இனி இருக்க முடியாது” : மோடி அரசை சாடிய ‘முரசொலி’ !
பேரறிவாளன் விடுதலையில் மாநில உரிமைகளை நிலைநாட்டும் தீர்ப்பினை அளித்த உச்சநீதிமன்றம் - அடுத்ததாக சரக்கு மற்றும் சேவை வரி விவகாரத்திலும் மாநிலங்களின் உரிமையை நிலைநாட்டி உள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை முன்வைத்தது. அரசியலமைப்புச் சட்டம் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வரிவிதிப்பில் சம உரிமை வழங்கியுள்ளதாகவும், ஆனால், ஜி.எஸ்.டி. அதன் அடிப்படையில் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனவே, ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை மாநில அரசின் சட்டங்களைக் கட்டுப்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை கூட்டாட்சி நடைமுறையை பாதிப்பதாக உள்ளதாகவும், கூட்டாட்சித் தத்துவ நாடான இந்தியாவில் ஜி.எஸ்.டி. குழுவின் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றையொன்று சார்ந்துள்ளதாகவும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரம் உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. “மாநிலங்களின் உரிமைகளைக் குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட முடியாது என்பதை, உச்சநீதி மன்றத்தின் அடுத்தடுத்த இரண்டு தீர்ப்புகள் நிலைநாட்டி உள்ளது” என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களின் உரிமை, கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி முதலமைச்சர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வலுச்சேர்க்கும் விதமாக அமைந்துள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்தத் தீர்ப்புகள் மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
இன்றைக்கு உச்சநீதிமன்றம் சொல்வதை திராவிட முன்னேற்றக் கழகம் தொடக்கத்தில் இருந்து சொல்லி வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரக்கு மற்றும் சேவை வரியை வைத்து ஒன்றிய அரசு மொத்தமாக அபகரித்துச் செல்வதைக் கண்டித்து வந்திருக்கிறோம்.
ஆட்சிக்கு வந்தபிறகும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்து வந்துள்ளோம். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் இந்த முறையைக் கடுமையாகக் கண்டித்தார். “ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் மாநில நிதி நிர்வாகம் இருக்கும் வரை மாநிலங்கள் நிச்சயம் தனித்து முன்னேற முடியாது. எங்கள் நிதி நிர்வாகத்தை ஒன்றியக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவியுங்கள். கம்யூனிஸ்ட் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் சீனாவிலிருந்து, முதலாளித்துவத்தை வலியுறுத்தும் அமெரிக்கா வரை அனைத்து நாடுகளில், மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள் அல்லது மாநகரங்களுக்கு, நிதி அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பதில், இந்தியா கிட்டத்தட்ட எல்லா வற்றையும் விட பின்தங்கியிருப்பதை நாங்கள் கவனிக்கிறோம்.
நம் வரலாற்றைச் சார்ந்த காரணங்களால், ஒன்றிய அரசாங்கத்துடன் நேரடி வரிவிதிப்புக்கான அனைத்து அதிகாரங்களும் குவியும் படியும், ஒன்றிய அரசு மற்றும் மாநிலங்களுக்கு இடையே மறைமுக வரிவிதிப்பு அதிகாரங்களைப் பிரித்து வழங்கிடவும் நம் மதிப்புமிக்க அரசியலமைப்பு வழிவகுத்தது. இது இந்தியாவுக்கு மிகவும் தனித்துவமானது. ஏனென்றால், பெரும்பாலான நாடுகள் நேரடி வரிவிதிப்பில் சில அதிகாரங்களையும் மறைமுக வரிவிதிப்பின் பெரும்பாலான அதிகாரங்களையும் மாநிலங்களுக்கு ஒப்படைத்துள்ளது. அத்தகைய சூழலை உருவாக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார் தமிழக நிதி அமைச்சர்.
ஆனால் ஒன்றிய அரசு அதனைக் கேட்கவில்லை. சமீபத்தில் சென்னை வந்திருந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்கூட, சரக்கு சேவை வரியை ஏதோ புனிதமான தத்துவம் போல பேசிச் சென்றார். சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின், நிதி உரிமைகள் அனைத்தும் ஒன்றிய அரசிடம் போய்விட்டது. மாநிலங்கள் கையேந்தும் நிலைமையில் ஆக்கிவிட்டார்கள். இன்றைய பிரதமர் அவர்கள், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நீண்டகாலம் இருந்த பொழுது, மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் கூட்டாட்சிக்காகவும் குரல் கொடுத்தார். ஆனால், இன்று அனைத்தையும் மறந்துவிட்டார். ஆனால் உச்சநீதிமன்றம் அனைத்தையும் உடைத்து விட்டது.
ஜி.எஸ்.டி. கவுன்சில், பரிந்துரைகளை வழங்கலாம், ஆனால் ஒன்றிய, மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது, ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு, இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என மாநில அரசுகளை நிர்ப்பந்திக்க முடியாது, ஜி.எஸ்.டி. விவகாரத்தில் சட்டங்களை இயற்ற ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு, ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும் - என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருப்பதை ஏற்று ஒன்றிய அரசு செயல்படவேண்டும்.
ஒன்றிய அரசுக்கு நிதி வசூலித்துக் கொடுக்கும் கலெக்ஷன் ஏஜெண்டுகளாக மாநில அரசுகள் இனியும் இருக்க முடியாது. மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் செய்பவை மாநிலங்கள். அப்படியானால், அதற்கான நிதி உரிமை மாநிலங்களுக்கு வேண்டும்.
அனைத்து வரிகளையும் போட்டு பிரிட்டிஷ் அரசு எடுத்துச் சென்றதைப் போன்ற நிலைமையை இனியும் அனுமதிக்கக்கூடாது என்ற அடிப்படையில் மாநிலங்களுக்கு ஒரு மாபெரும் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பதை மனப்பூர்வமாக வரவேற்போம். இந்தத் தீர்ப்புக்கு ஒன்றிய அரசைப் பணிய வைப்போம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!