murasoli thalayangam
தாய் மொழிக்கு முக்கியத்துவம் என கூறிவிட்டு அரசுப்பணியில் இந்திக்காரர்களை நியமிப்பது ஏன்? - முரசொலி கேள்வி
'நிமிர்ந்த நெஞ்சினாய் வா வா வா' என்பது பாரதியின் வாக்கு.
அவர் பெயரால் அமைந்துள்ள கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நடந்த காட்சிகள் நெஞ்சத்தை நிமிர வைப்பதாக உள்ளது. தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி அளித்த விளக்கமும், அதற்கு ஆளுநர் அளித்த பதிலும் எந்நாளும் தமிழகம் மக்களாட்சிப் பண்புகளை விடாத மாநிலம் என்பதை நிரூபித்து இருக்கிறது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி தெளிவுபடுத்தி இருப்பது காலத்தின் கட்டளையாகும். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில்தான் இந்தக் காட்சிகள் அரங்கேறி உள்ளது. "தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கையே பின்பற்றப்படும்" என்று கூறிய அமைச்சர் பொன்முடி, "சர்வதேச மொழியாக ஆங்கிலமும், தாய் மொழியாக தமிழும் இருக்கும்போது, மூன்றாவது மொழியாக இந்தி எதற்கு?’' என்றும் வினவினார்.
"ஆளுநர் அவர்களே! நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. யார் இந்தியை விரும்புகிறார்களோ அவர்கள் இந்தியைப் படித்துக் கொள்ளலாம். அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அது கட்டாயப் பாடமாக இருக்கக்கூடாது என்றுதான் கூறுகிறோம். எனவே ஆளுநர் அவர்கள் தயவுசெய்து இதனைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஆரம்பத்திலிருந்தே இருமொழிக் கொள்கைதான் இருந்து வருகிறது. ஒன்று தமிழ் மற்றொன்று ஆங்கிலம். ஆங்கிலம் சர்வதேச மொழி. தமிழ் உள்ளூர் மொழி" என்று அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.
இதனை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு இருந்தார் ஆளுநர். இதைத்தொடர்ந்து, விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்மொழி சிறப்பானது" என்று கூறினார். "நாம் பல நல்ல விஷயங்களை செய்துள்ளோம். தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் நாம் தமிழ் இருக்கையை அமைத்துள்ளோம். ஐரோப்பா, வட அமெரிக்காவில் பல்கலைக் கழகங்களில்கூட தமிழ் இருக்கையை அமைத்துள்ளோம். டெல்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஏன் தமிழ் இருக்கையை அமைக்க முன்வரக்கூடாது? நிச்சயம் நாம் அதனைச்செய்ய வேண்டும்" என்று சொல்லிவிட்டு இந்தி பிரச்சினைக்கும் விளக்கம் அளித்துள்ளார். "இந்தியோ பிற மொழிகளோ அதற்கு மட்டுமே இடம் எனக் கூறி அதனை உயர்த்திப் பிடிக்க எந்த உரிமையும் இல்லை. நாம் அனைத்து மொழிகளையும் ஊக்கப்படுத்துவோம், வளர்ப்போம். அந்தந்த மொழிகள் உலக அளவில் ஏற்படுத்திய உயர்வை அதிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். அதிலும் குறிப்பாக தமிழ்மொழி மிகப் பழமையானது. இதிலிருந்து ஏராளமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டியதுள்ளது" என்று கூறி இருக்கிறார் ஆளுநர்.
Also Read: "ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம்": தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
அனைத்து மொழிகளையும் ஊக்கப்படுத்துவோம் என்று விளக்கம் அளித்துள்ளார் ஆளுநர். நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. மொழியைக் கற்றுக்கொள்வது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆனால் ஒன்றிய அரசுகளால் இந்தி மொழி என்பது படிப்பு என்பதாக மட்டுமில்லாமல் திணிப்பாக அமைந்து வருகிறது. இந்திதான் ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக, அனைத்து மாநிலங்களின் தொடர்பு மொழியாக ஆக்குவதன் மூலமாக இந்திதான் இனி என்ற சூழலை உருவாக்கப் பார்க்கிறார்கள். இந்தி தான் அனைத்து இடங்களிலும் - அனைத்துத் துறைகளிலும் என்று சொல்வதன் மூலமாக இந்தி பேசாத மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக தரம் இறக்கப் பார்க்கிறார்கள். அனைத்து வேலைகளிலும் இந்தி பேசுபவர்கள் மட்டுமே உள்ளே நுழைய முடியும் தன்மையை உருவாக்குகிறார்கள். இன்றைக்கு ரயில்வே, தபால், வங்கிப் பணிகளில் அதனைத்தான் பார்க்கிறோம். தாய்மொழிக் கல்விக்கு புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் தருகிறது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே, இன்னொரு பக்கம் இத்தகைய பணிகளுக்கு தாய்மொழி அவசியமில்லை என்றும் சொல்கிறார்கள்.
இவை அனைத்தும் எதிர்க்கப்பட வேண்டியதாக உள்ளது. இதனைத்தான் அமைச்சர் பொன்முடி அவர்களது பேச்சு விளக்கம் அளிப்பதாக உள்ளது. இந்த விளக்கத்தை உள்வாங்கிக் கொண்டவராக ஆளுநர் அவர்களும் பதில் அளித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய கல்விப் புரட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடித்தளம் அமைத்துள்ளார்கள். பள்ளிக்கல்வியாக இருந்தாலும், உயர் கல்வியாக இருந்தாலும் அதற்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் முக்கியமானது. தமிழ்நாட்டு இளைஞர்களை கல்வியில், வேலைவாய்ப்பில், அறிவாற்றலில் திறன் படைத்தவர்களாக ஆக்க முதலமைச்சர் முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள். முதலமைச்சர் அவர்கள் இந்த ஆட்சியின் கல்வியியல் நோக்கை சில மாதங்களுக்கு முன்னால் தெளிவுபடுத்தினார்கள். "பள்ளிக் கல்வித்துறையாக இருந்தாலும் -உயர் கல்வித் துறையாக இருந்தாலும் - இதன் மூலமாக தமிழ்ச் சமுதாயம் முழுமையான முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும், உயர்கல்வித் துறை அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுச் சொன்னார்கள்... "பெருந்தலைவர் காமராசர் காலம் என்பது பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலமாகச் சொல்லப்படுகிறது. நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களது ஆட்சி காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாகப் போற்றப்படுகிறது. இந்த ஆட்சி காலம் உயர் கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று சொன்னார்கள்.
அந்த இலக்கை நோக்கி தமிழ்நாடு கல்வித் துறை வளர்ந்து வருகிறது. அதனைக் கொண்டு செலுத்தும் நோக்கத்துக்கு பாரதியார் பல்கலைக்கழக விழா மேடையானது பயன்பட்டுள்ளது. அமைச்சர் அளித்த விளக்கமும்- அதனை உள்வாங்கி ஆளுநர் அளித்த பதிலும் தமிழகக் கல்வித் துறையை மேன்மைப்படுத்தப் பயன்படட்டும்!
Also Read
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!