murasoli thalayangam
நிர்மலா சீதாராமன் கட்டவிழ்த்துச் சென்ற பொய்கள்.. பட்டியலிட்டு தலையங்கம் வெளியிட்ட முரசொலி நாளேடு!
நிர்மலா சீதாராமன் கவனத்துக்கு!
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பல்வேறு பொய்களை கட்டவிழ்த்துச் சென்றுள்ளார்கள்.
* ஒன்றிய அரசு தமிழகத்துக்கு போதிய நிதி உதவி வழங்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இது எதுவும் உண்மையல்ல.
* சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை தொடர்பாக தமிழக அரசு சொல்லும் தகவல்கள் அனைத்தும் தவறானவை.
* மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் சுமூக உறவு இல்லை என்றும் பாகுபாடு பார்க்கிறார்கள் என்றும் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
* ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வர தமிழக நிதி அமைச்சர் ஒப்புக் கொண்டால் அதனை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் கொண்டு வந்து விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்.
* தங்களை ஓரவஞ்சனை செய்வதாக தமிழக அரசு சொல்வதும், தங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கூறுவதும் பிரிவினை வாதம் ஆகும். - என்றெல்லாம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் முதல்நாள் டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்தார்கள். கோரிக்கை மனுவைக் கொடுத்தார்கள். அந்த மனுவை மீண்டும் ஒருமுறை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வாசித்துப் பார்த்தால் உண்மை புலப்படும்.
"2015-2020 காலகட்டத்திற்கு, 14வது நிதிக்குழு, தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7,899.69 கோடி ரூபாய் பரிந்துரைத்தது. ஆனால், மொத்தமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால், 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை ஒன்றிய அரசு விடுவிக்க வில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததால், இந்த 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் அப்போது நடத்த இயலவில்லை. இந்த அரசு பொறுப்பேற்றப் பின்னர், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதைப்போன்று 14வது நிதிக்குழு 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியமாக தமிழகத்திற்கு 2,524.20 கோடி ரூபாய் பரிந்துரை செய்துள்ளது. அந்த மானியத்தொகையில் பரிந்துரைக் காலத்தில் ஒன்றிய அரசு 2016-17 ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியமாக 494.09 கோடி ரூபாயை விடுவித் துள்ளது. இந்நிலையில் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு, 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியத்தினை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது. மானியங்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளை நிறைவேற்றியபோதும், பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பிய நிலையிலும், 2017-18ம் ஆண்டுக் கான செயல்பாட்டு மானியம் தமிழகத்திற்கு விடுவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கான மானியமும் விடுவிக்கப்படவில்லை. இருப்பினும், 2017-18 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு மானியத்தினை பெரும்பாலான மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. எனவே, அடிப்படை மானிய நிலுவைத் தொகையான 548.76 கோடி ரூபாயையும், செயல்பாட்டு மானியம் 2,029.22 கோடி ரூபாயையும் தமிழகத்திற்கு விரைந்து விடுவிக்க வலியுறுத்தப்படுகிறது"" என்று அந்த அறிக்கையில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
நிதி விவகாரம் தொடர்பாக தனியார் நிகழ்ச்சியில் ( கோடிக்கணக்கான மக்களால் விரும்பி வாசிக்கப்படும் ஒரு பத்திரிக்கை நிகழ்ச்சியில்!!!) பேசுகிறோம் என்றால் - அமைச்சர் பதவியில் இருப்பவர் பொத்தாம் பொதுவாகப் பேசக் கூடாது. அதற்கான புள்ளிவிபரங்களைச் சொல்லி இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் - அண்ணாமலை மாதிரி வாய்க்கு வந்ததை அமைச்சராக இருப்பவர் பேசக் கூடாது.
நிதி அமைச்சரைச் சந்தித்த முதலமைச்சர் அவர்கள், "சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர, இந்த நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்"" என்று கோரிக்கை வைத் தார்கள். ஜி.எஸ்.டி. குறித்து பேசியிருக்கும் நிதி அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டுக்கு தரப்பட்ட தொகையைச் சொல்லாமல் இந்தியா முழுமைக்கும் விடுவிக்கப்பட்ட நிதியைச் சொன்னதன் மர்மம் என்ன?
தமிழ்நாடு அரசு தவறான தகவல் சொல்கிறது என்றால், ஒன்றிய அரசு விடுவித்தது என்ன? தமிழ்நாடு அரசு சொல்வது என்ன? என்பதை பொதுவெளியில் சொல்லி இருக்கலாமே?
தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்றால் அது ஏதோ பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படுவது அல்ல. நிதி முறையாக ஒன்றிய அரசால் தரப்படுவது இல்லை. நிலக்கரி போதுமான அளவுக்கு வழங்காத காரணத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. ‘நீட்’ விவகாரத்தில் ஒன்றிய அரசு போக்குக் காட்டிக் கொண்டே வருகிறது. இந்தித் திணிப்பு என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆளுநரை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பதே இல்லாமல் போய்விட்டது. ஒன்றிய அரசுப் பணியிடங்களில் - தமிழக மாநிலப் பணியிடங்களில் திட்டமிட்டு வடமாநிலத்தவர்கள் புகுத்தப்படுகிறார்கள். - இப்படி பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றுக்கெல்லாம் முறையாக, முழுமையாகப் பதில் சொல்ல வேண்டுமே தவிர - அரைகுறை அரசியல் பதில்களை நிதி போன்ற பொறுப்புமிக்க துறைகளை கவனிக்கும் அமைச்சர் சொல்லக் கூடாது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!