murasoli thalayangam
’கண்ணீரில் மிதக்கும் இலங்கை; உதவிக்கரம் நீட்டிய முதல்வர்.. கருணையின் வடிவம் இதுதான்’ - முரசொலி தலையங்கம்
இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து ’தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும்’ என்ற தலைப்பில் முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
கண்ணீரில் மிதக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உணவு, மருந்துப் பொருட்களை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்த தனித் தீர்மானம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையைப் பற்றிப் பேசும் போது, ‘தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும்' என்ற உதாரணத்தை மிகமிகப் பொருத்தமாக முதலமைச்சர் அவர்கள் பயன்படுத்தினார்கள். அந்தளவுக்கு இலங்கைப் பிரச்சினை என்பது தமிழ்நாட்டோடு -அதனினும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தோடு ஒன்றிய ஒரு பிரச்சினையாகும். இன்று நேற்றல்ல - அங்கே தமிழர்கள் மீது எப்போது தாக்குதல் தொடங்கப்பட்டதோ அப்போதே தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டது திராவிட இயக்கம்.
1948 ஆம் ஆண்டு இலங்கை நாடு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டது. அப்போதே சிங்கள இனவாதம் என்பது தலைதூக்கி தமிழைப் புறக்கணிக்கத் தொடங்கியது. அதை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், ‘இந்தியாவைப் போலவே இலங்கையிலும் ஆரியம் தனது வேலைகளைக் காட்டத் தொடங்கிவிட்டது' என்று எழுதி இருக்கிறார்கள். தி.மு.க.வின் முதல் மாநில மாநாட்டில் பேசும் போது பேரறிஞர் அண்ணா அவர்கள், "இலங்கை வாழ் திராவிட மக்களுக்காக வோட்டு உரிமையைக் கொடுத்து நீதியை நிலைநிறுத்துங்கள். ஜனநாயகத்தைக் கேலி செய்யாதீர். வீண்போக்கு வெற்றியைத் தராது. அதிருப்தி அனல் விரைவில் எழும்பும். அதுநல்லதல்ல"" என்று ( 27.4.1952, திராவிட நாடு) பேசினார்.
தி.மு.க.வின் இரண்டாவது மாநில மாநாட்டில் தனிச்சிங்கள மசோதாவை எதிர்த்தும் தமிழ் மொழிக்கு உரிமை கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 5.6.1956 அன்று அமைதியான வழியில் அறப்போரில் ஈடுபட்ட தொண்டர்களை சிங்கள மொழி வெறியர்கள் தாக்கிப் படுகாயங்களுக்கு உள்ளாக்கியதைத் தி.மு.க. வன்மையாகக் கண்டிப்பதுடன், கண்ணியம் தவறா அறப்போர் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 29.1.1956 அன்று சிதம்பரத்தில் நடந்த கழகப் பொதுக்குழுவில் சிங்கள ஆதிக்கத்துக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தை கலைஞரும், அ.பொன்னம்பலனாரும் கொண்டு வந்தார்கள். "இலங்கையில் சிங்கள மொழி ஆதிக்க ஆட்சியாளர்கள் அங்குள்ள தமிழர்களின் உரிமைகளைப் பறிப்பதோடு, சிங்கள மொழி ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்த முயலும் போக்கினை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. அங்குள்ள தமிழர்களின் விருப்பங்களும் முயற்சிகளும் வெற்றி பெற இப்பொதுக் குழு மனதார விரும்புகிறது. தாய்த் தமிழகத்திலுள்ள தமிழர்கள் அனைவரும் தங்களாலான எல்லா ஆதரவையும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறது" என்பதுதான் அந்த தீர்மானம்.
இக்காலக் கட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் இலங்கை செல்வதற்கு இலங்கை அரசு தடை விதித்திருந்தது. அந்தளவுக்கு அப்பிரச்சினையில் தொடக்க காலம் முதல் நெருக்கம் காட்டிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். 13.5.1985 அன்று தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு என்ற டெசோ அமைப்பை தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். இதில் பேராசிரியர், ஆசிரியர் கி.வீரமணி, பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோர் இடம்பெற்று இருந்தார்கள். "உரிமை பறிக்கப்பட்டு இனப்படுகொலைக்கு இலங்கைத் தமிழர் ஆளாக்கப்பட்டு வரும் பிரச்சினை தீருவதற்கு தமிழ் ஈழத் தனிநாடு அமைப்பது தவிர வேறு தகுந்த வழியில்லை என்ற உண்மையை இந்தியாவின் பிறமாநிலங்களிலும் உலக நாடுகளிலும் உணரச் செய்வதற்கும் தக்க ஆதரவு திரட்டுவதற்கும் ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்" இந்த அமைப்பின் இலக்காக அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் ஈழத்தமிழர் ஆதரவு ஊர்வலங்கள் நடத்தப்பட்டது. தனித் தனியாகச் செயல்படும் போராளிக் குழுக்களை ஒன்றிணைந்து போராட தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தினார்கள். 1989ஆம் ஆண்டு கழக அரசு அமைந்ததும், இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய அரசு - இலங்கை அரசு - போராளிக் குழுக்கள் ஆகிய முத்தரப்புடனும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினார் முதல்வர் கலைஞர் அவர்கள். தீர்வு காணப்படாத நிலையில், கழக அரசு கலைக்கப்பட்டது. அதற்குக் காரணமாக இலங்கை விவகாரமே காட்டப்பட்டது. அந்த வகையில் அந்த விவகாரத்துக்காக ஆட்சியையே பறிகொடுத்த கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம். 2008 ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது - 23.4.2008 அன்று முதல்வர் கலைஞர் தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
"இலங்கையில் அமைதி ஏற்படுத்த முறையானதொரு அரசியல் தீர்வு எட்டப்பட பயனுள்ள பேச்சு வார்த்தைகளை செய்ய இந்திய அரசு முன்வர வேண்டும்" என்று அந்த தீர்மானம் வலியுறுத்தியது. ஆனால் இலங்கை அரசு யார் பேச்சையும் கேட்கும் நிலைமையில் இல்லை. தான் நினைத்ததை சாதித்து முடித்து அழியாப்பழியைத் தேடிக் கொண்டது. மனித உரிமை மீறல், போர்க்குற்றம் ஆகியவற்றின் குற்றவாளியாக மகிந்த ராஜபக்ஷேவின் அரசு இருக்கிறது. 2012ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள், அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கலாமா என்று அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை எழுந்தபோது, இலங்கையை ஆதரிக்கக்கூடாது என்று கலைஞர் அவர்கள்தான் உறுதியாக இந்திய அரசுக்கு எடுத்துச் சொன்னார்கள். அதனால் இலங்கையை எதிர்த்து இந்தியா அன்றைய தினம் வாக்களித்தது.
ஆனால் பா.ஜ.க. அரசு மாறியதும், நிலைமை மாறியது. 22.3.2021 இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்தது பா.ஜ.க. அரசு. ஈழத்தமிழர்க்கு விரோதமான பா.ஜ.க. அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு கடுமையான கண்டனத்தை அப்போது தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்கள். இப்படி 1952 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கைத் தமிழர் உரிமை வாழ்வுக்கு குரல் கொடுத்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.
இப்போது கழக ஆட்சி அமைந்ததும் இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய உறவுகளுக்காக ரூ.317 கோடி மதிப்பீட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் உருவாக்கினார்கள். அகதி முகாம்கள் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் சூட்டினார்கள். 13 உறுப்பினர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அமைத்தார்கள். கடந்தாண்டு நவம்பர் 2 ஆம் நாள் வேலூர் முகாமுக்கு முதலமைச்சரே நேரில் சென்று பார்வையிட்டார்கள். இங்கு வந்த மக்களுக்கு மட்டுமல்ல, அங்கு வாழும் மக்களுக்கும் உதவிகள் செய்ய முதலமைச்சர் அவர்கள் முன்வந்து அறிவிப்பைச் செய்துள்ளார்கள். இதற்கு முன் செய்தது எல்லாம் உரிமைகளைக் காக்க. இப்போது உயிரைக் காக்கும் முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பது மட்டுமல்ல, தன்னோடு சேர்த்து தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இலங்கை மக்கள் மீது கருணை கொள்ள வைத்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். கருணையின் வடிவம் என்பது இதுதான்!
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !