murasoli thalayangam
“இருண்ட வானத்தின் ஒளிவிளக்கு.. அம்பேத்கரின் புகழை பறைசாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி பாராட்டு !
இருண்ட வானத்தின் ஒளிவிளக்காம் அறிவுலக மாமேதை அண்ணல் அம்பேத்கரின் சிறப்பை பறைசாற்றும் வகையில் மகத்தான மூன்று அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்திருப்பது தமிழ்நாடு சட்டமன்றத்தால் அரங்கம் அதிர வரவேற்கப்பட்டது.
மக்கள் மன்றமும் அத்தகைய வரவேற்பைத் தருவதற்குக் காத்திருக்கிறது. நேற்று மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.
இந்தக் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும். அந்த நாளில் சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக் கொள்ளப்படும்.
அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணலுடைய முழு அளவு வெண்கலச் சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் முன்வைத்தார். இந்தக் கோரிக்கையையும் ஏற்று அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச்சிலை நிறுவப்படும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள், அண்ணல் அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை தமிழில் வாசிக்க வாய்ப்பாக மொழிபெயர்த்து புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளப்பட்டு தமிழக அரசால் அண்ணலுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம் பதிப்பாக தமிழில் வெளியிடப்படும். - இவை மூன்றும்தான் அண்ணலுக்கு தமிழ்நாடு முதலமைச்சரால் வைக்கப்பட்ட மாபெரும் மகுடங்கள் ஆகும்.
மாமேதை அம்பேத்கரைப் போற்றுவதில் திராவிட இயக்கம் எப்போதும் முன்னணியில் இருந்துள்ளது. இன்னும் சொன்னால் முதலிடத்தில் இருந்துள்ளது. ‘சாதியை ஒழிக்கும் வழி' என்ற அண்ணலின் நூலானது 1936 ஆம் ஆண்டு நடக்க இருந்த லாகூர் ஜாத் - பட் - தோடக் மண்டல் மாநாட்டுக்காக எழுதப்பட்ட உரை ஆகும். அந்த உரையின் கருத்துக்களோடு அந்த மண்டல் அமைப்பினர் முரண்பட்டார்கள். அதனால் அந்த உரையை புத்தகமாக அம்பேத்கர் அவர்கள் வெளியிட்டார்கள். அந்த ஆண்டே அந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்து வெளியிட்டவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்.
‘குடி அரசு’ இதழில் இதனை மொழிபெயர்த்து தொடராக வெளியிட்ட பெரியார், அதனை, ‘சாதியை ஒழிக்கும் வழி’ என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளியிட்டார். 1936 முதல் இன்று வரை மறுபதிப்பு கண்டு வரும் நூலாக அது இருக்கிறது. இத்தகைய பெருமை கொண்ட இயக்கம் தான் திராவிட இயக்கம். அந்த இயக்கத்தின் தத்துவ வாரிசாக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் வழித் தடத்தில் பயணிப்பதன் அடையாளம்தான் இந்த அறிவிப்பு ஆகும்.
கழக ஆட்சி மாமேதை அம்பேத்கருக்கு எத்தகைய சிறப்புகளைச் செய்துள்ளது என்பதை ‘விடுதலைச் சிறுத்தைகள்’ சார்பில் வழங்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சுடர் விருதை பெற்றுக் கொண்டு பேசும் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விவரித்துள்ளார்கள்.
அண்ணல் அம்பேத்கரின் பெயரை மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு வைக்க முயற்சிகள் மேற்கொண்ட போது மகாராஷ்டிரா மாநில அரசு அதனை கிடப்பில் போட்டது. சிலர் எதிர்த்தார்கள். வன்முறைகள் ஏற்பட்டன. அம்பேத்கர் அவர்கள் பிறந்த மராட்டிய மாநிலத்தில் இந்த நிலைமை இருந்தது. மரத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து தந்தி அனுப்ப வேண்டும் என்று கட்டளையிட்டார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். பல்லாயிரக்கணக்கான தந்திகள் போனது. அந்த மாநில ஆளுநராக இருந்த அலெக்சாண்டர் அவர்களும் முதலமைச்சர் சரத்பவார் அவர்களும் கலைஞருக்கு பதில் அனுப்பினார்கள். அம்பேத்கர் பெயரைச் சூட்டுவோம் என்று அறிவித்தார்கள்.
1989ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக் கல்லூரிக்கு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று பெயர் சூட்டியவர்தான் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள்.
1997ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியவரும் கலைஞர் தான். அந்த வரிசையில்தான் இந்த மூன்று அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளன.
டாக்டர் அம்பேத்கருக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது.எங்கள் இருவர் கருத்தும் பல விஷயங்களில் ஒன்று போலத்தான் இருக்கும்.தமிழ்நாட்டின் சிவராஜ், வீரையன் போன்றவர்களையும், அகில இந்திய அளவில் அம்பேத்கரையும் நம்புங்கள். அம்பேத்கர் உள்ளபடியே ஒரு பெரிய தலைவர். அவருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. - இப்படிச் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். அய்யா அவர்கள் இந்தளவுக்கு எந்தத் தலைவரையும் உயர்த்திச் சொன்னது இல்லை.
“நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து எங்களுக்கு தலைமை வகிக்க வேண்டும்” என்று சிலர் அம்பேத்கரை அழைத்த போது, “உங்களுக்குத் தான் பெரியார் ராமசாமி இருக்கிறாரே? அவரை வைத்து இயக்கம் நடத்துங்கள்’’ என்றவர் அம்பேத்கர் அவர்கள். மாமேதை அம்பேத்கரைப் போற்றுவதில் தந்தை பெரியாராக, தமிழினத் தலைவர் கலைஞராகச் செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!