murasoli thalayangam
“மண்ணைக் காக்கும் மகத்தான பிரகடனம்.. பெருமிதம் கொண்ட அறிக்கையாக அமைந்த ‘வேளாண்’ அறிக்கை” : ‘முரசொலி’ !
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார்கள். இது நிதிநிலை அறிக்கை என்ற எல்லையைத் தாண்டி இந்த மண்ணைக் காக்கும் மகத்தான பிரகடனமாக அமைந்துள்ளது.
வேளாண்மை நிதிநிலை அறிக்கையின் மூலமாக விவசாயிகளுக்கு சில சலுகைகளைத் தருவது, மானியங்களைத் தருவது என்று இல்லாமல் ஒட்டுமொத்தமாக வேளாண்மைத் தொழிலை எப்படி வருங்காலத்தில் கொண்டு செலுத்துவது என்பதற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இந்த அறிக்கையின் தொடக்கத்தில் சொல்லி இருக்கும் சிலவரிகளை வாசித்தாலே எந்த நோக்கத்துக்காக இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டது என்பதை உணரலாம்.
“வேளாண்மை என்பது தேடுதலாகத் தொடங்கி, நாகரீகமாக மருவி, வாழ்வாக மலர்ந்து, மக்களை வாழ்வித்த நிலை மாறி - நாளடைவில் பிழைப்பாகப் பிசகி, பிறழ்ந்த நிலையை மாற்றி - பணியாக மருவி, தொழிலாக உயர்ந்து - மீண்டும் தமிழ்நாடு எங்கும் பசுமை தழைத்தோங்க, பயிர்கள் செழித்தோங்க - ‘குடியானவன் வீட்டுக் கோழிமுட்டை அதிகாரி வீட்டு அம்மியாலும் உடையாத' அளவுக்கு அவர்கள் வாழ்வு சமூகத்தில் - பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்பதற்காக அறிமுகப்படுத்தப் பட்டதுதான் வேளாண்மை நிதிநிலை அறிக்கை” - என்று தொடங்குகிறது இந்த அறிக்கை.
கடந்த ஆண்டு முதன்முறையாக இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் போது இந்தியா முழுமைக்கும் விவசாயிகள் மிகக் கொந்தளிப்பான மனநிலையில் இருந்தார்கள். அதற்குக் காரணம், ஒன்றிய பா.ஜ.க. அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து ஒட்டுமொத்தமாக விவசாய நிலத்தில் இருந்து விவசாயிகளை விரட்டப் பார்த்தது. பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து திரண்ட விவசாயிகள் தலைநகர் டெல்லிக்கே வந்து முற்றுகையிட்டு, அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறாவிட்டால் வீடு திரும்ப மாட்டோம் என்று இருந்தார்கள். சுமார் ஒன்றரை ஆண்டு கால அமைதிச்சத்தியாகிரகத்துக்குப் பிறகுதான் மோடி அரசு அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது. மக்களின் இந்த கோபத்தின் அடையாளம் தான் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. மரண அடி வாங்கியது ஆகும்.
கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையை வாசிக்கத்தொடங்கிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளைப் பாராட்டியும், அவர்களது போராட்டம் வெல்ல வாழ்த்தியும் பேசினார். மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றியது. இந்தளவுக்கு உழவர்களோடு உணர்வில் கலந்த அரசாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதன் அடையாளமாக வேளாண் நிதிநிலை அறிக்கை கடந்த முறை தயாரிக்கப்பட்டது.
அப்போது அறிவிக்கப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று இந்த அறிக்கை சொல்கிறது. இதுதான் தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகளுக்கு சாட்சியம் ஆகும். அக்கறையான அறிவிப்புகளை வெளியிடுவதும், அந்த அறிவிப்புகளை உடனடியாக அமல்படுத்துவதும் தான் கழக ஆட்சி என்பதை இந்த வேளாண் அறிக்கையும் மெய்ப்பிக்கிறது.
கழக அரசு மலர்ந்ததும் ஒரு செயலை மிகச் சரியாகத் துல்லியமாகச் செய்தார்கள். அதுதான் குறுவைச் சாகுபடி தொகுப்புத் திட்டமாகும். இதன் மூலமாக விவசாயிகள் மகிழ்ந்தார்கள். விவசாயம் பெருகியது. கடந்த டிசம்பர் மாதம் முதலமைச்சர் அவர்கள் தஞ்சாவூர் சென்றபோது தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவரை அழைத்துப் பேசினார்.
தஞ்சை வந்ததும் - உங்கள் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசினேன். கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவு சாதனையாக நெல் சாகுபடி அதிகம் ஆகி இருக்கிறது என்று அப்போது மாவட்ட ஆட்சியர் சொன்னார். 2021 -22 சம்பா / தாளடி இலக்கு என்பது 3,12,599 ஏக்கருக்கு பதிலாக 3,42,973 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடந்துள்ளது. 48 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை அளவாக 1,66,135 ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் சொன்னார்.
குறுவை இலக்கு என்பது 1,06,250 ஏக்கர்தான். அதையும் மிக அதிகமாக தாண்டி நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ளது. இந்த சாதனைகளை அடைவதற்கு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகள் தான்காரணம்- சூன் 12 ஆம் தேதி மிகச்சரியான மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டோம். இப்படித் திறந்து விடுவதற்கு முன்னதாகவே தூர்வாரும் பணிகளை துரிதமாகச் செய்தோம். இதனால் கடைமடை பகுதி வரைக்கும் தண்ணீர் சென்றது. குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவித்தோம்.
இதன் மூலம் மானியத்தில் உரங்கள் வழங்கி னோம். நெல் விதைகளை 50 சதவிகித மானியத் தில் வழங்கினோம். இவை அனைத்தும் சேர்ந்து தான் நெல் சாகுபடியை அதிகப்படுத்தி இருக்கி றது. அதனைத்தான் இந்த நிதிநிலை அறிக்கை பெருமையுடன் பதிவு செய்துள்ளது. 3 லட்சத்து 16 ஆயிரம் டெல்டா மாவட்ட விவசாயிகள் வருமானமும் அதிகமானது, இது கடந்த 46 ஆண்டுகளாக இல்லாத சாதனையாகும். கடந்த பத்து மாதங்களில் செய்யப்பட்ட மகத்தான சாதனை என்பது இதுதான். இந்த பெருமிதம் கொண்ட அறிக்கையாக இது தொடங்குகிறது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!