murasoli thalayangam
நாடு முழுவதும் நீட் தேர்வு விலக்கப்படும்.. முதல்வரின் வெற்றிகரமான முதல் நகர்வு: முரசொலி!
முரசொலி நாளேட்டின் இன்றைய (மார்ச்.17 2022) தலையங்கம் வருமாறு:
மிக நீண்ட கால நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் நகர்வு நகர்ந்துள்ளது. அதுவும் வெற்றிகரமான நகர்வாக அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசால் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டநீட் தேர்வுக்கு விலக்குக் கோரும் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்பி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் மேதகு ஆளுநர் ரவி அவர்கள் உறுதி அளித்துள்ளார். இதுதான் வெற்றிகரமான முதல் நகர்வு ஆகும்!
“நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்துவோம்” என்று சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க. தலைவர் அவர்கள் சொன்னார்கள். அந்த சட்டப்போராட்டத்தைத் தான் உறுதியாக கழக அரசு நடத்தி வருகிறது.
இந்த புதிய சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அரசியல் சட்டப்படி ஆளுநர் அவர்களுக்கு உள்ளஅதிகாரம் என்ன? என்பதை மத்திய -மாநில உறவுகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் பரிந்துரையில் சொல்லப்பட்டுள்ளதை இந்த அவையில் சுட்டிக்காட்டிப் பேசினார்கள்.
பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்துடன் முரண்படும் ஒரு சட்டத்தை மாநில சட்டமன்றம் நிறைவேற்றினால் - அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கக்கோரி ஆளுநருக்கு மாநில அமைச்சரவை அறிவுறுத்தலாம் என்றும், அதனை ஆளுநர் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும் சட்டத்தில் உள்ளதை முதலமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
நீட் தேர்வு என்பது சட்டவிரோதமானது ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் தார்மீக நெறிமுறைகளுக்கே எதிரான தேர்வு முறை ஆகும். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் சில புள்ளிவிபரங்களைக் கொடுத்திருந்தார். அதனை பார்த்தாலே இந்தத் தேர்வு எவ்வளவு அநீதியானது என்பதை அறியலாம்.
மருத்துவக் கல்லூரி மொத்த இடங்கள்: 6999 அரசு கல்லூரிகள்: 4349 இடங்கள், நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள்: 2650 இடங்கள், முதல் 10 ரேங்கில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 8. மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 2. முதல் 100 ரேங்கில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 81. மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 17. முதல் 1000 ரேங்கில், மாநில பாடத் திட்டத்தில் படித்த 394 மாணவர்கள் மட்டுமே தேர்வு.
‘நீட்’ தேர்விற்குமுன், சி.பி.எஸ்.இ. வாரியத்தில் இருந்து ஒரு சதவிகிதம் (1%)மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. இப்போது அது 39 சதவிகிதமாக (39%) ஆகிவிட்டது! ‘நீட்’ தேர்வுக்குமுன், மாநில பாடத் திட்டத்தில் படித்த 98.2 சதவிகித மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடிந்தது. தற்போது அது 59 சதவிகிதமாக குறைந்துள்ளது. ‘நீட்’ தேர்வுக்குமுன், கிட்டத்தட்ட14.8 சதவிகிதம் தமிழ் வழி மாணவர்கள், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர். ஆனால், தற்போது அது 2 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.
‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கும், வசதி படைத்த குடும்பத் தினருக்கும் மட்டுமே ஆதரவாக உள்ளது. பிளஸ் 2 இல் 1137 மதிப்பெண் பெற்ற நட்சத்திர ப்ரியா, 2017 இல் ‘நீட்’ எழுதத் தொடங்கி, மூன்று ஆண்டுகால முயற்சிக்குப் பின், 7.5 சதவிகித ஒதுக்கீட்டின் காரணமாக நெல்லை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத் திருக்கிறது. மூன்று ஆண்டுகாலம் வீண் அல்லவா? பிளஸ் 2 அடிப்படையிலேயே இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?
தகுதிப் பட்டியலில் 9976 பேர் மட்டுமே இவ்வாண்டு தேர்வெழுதியோர். 14,973 பேர் திரும்ப எழுதியவர்கள் (ரிப்பீட்டர்ஸ்). அதாவது, 2, 3, 4 ஆண்டுகள் கோச்சிங் சென்று விடாது படையெடுப்போர்.வசதி, வாய்ப்பு உள்ளவர்களால் மட்டுமே பல லட்சங்கள் செலவு செய்து, ஒரே தேர்வை ஈராண்டு, மூவாண்டு எழுத செலவிடவும் முடியும். குடும்பச் சூழலும் அதை அனுமதிக்கும். சேர்க்கை முடிவில் இன்னும் தெளிவு பிறக்கும். மறுமுறை தேர்வு எழுதுவோரும், நடப்பாண்டு படிப்பை முடித்துவரும் புதியவர்களும், ஒரே தேர்வை எழுதினால் யாருக்கு சாதகமாக அத்தேர்வு அமையும் என்பது வெளிப்படை. அதுதான் ‘நீட்’ தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘நீட்’ தேர்வு, சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், தேர்வை பலமுறை எழுதவும், கோச்சிங்மூலம் பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது. நடப்பு ஆண்டிலும் அதே நிலைதான். அதனால்தான் இந்தத் தேர்வு முறையே சட்டவிரோதமானது என்கிறோம்.
அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 13 - அடிப்படை உரிமைகளைச் சொல்கிறது. உறுப்பு14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது. உறுப்பு 15 - சமயம், இனம், பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் பேரால் வேற்றுமை கூடாது என்கிறது. உறுப்பு16 - அரசுப்பணிகளில் சம வாய்ப்பைப் பற்றிக் கூறுகிறது. உறுப்பு 19 - அனைத்து உரிமைகளையும் வலியுறுத்துகிறது.உறுப்பு 21 -வாழ்வுரிமை வழங்குகிறது.
இவை அனைத்துக்கும் எதிரானது நீட் தேர்வு. அதனால் தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம். நீட் தேர்வு என்பது சட்டவிரோத மானது ஆகும். நீட் தேர்வில் இருந்து விலக்குக் கேட்பது சட்டபூர்வமானது ஆகும்.
அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்தபோது எதையுமே கிழிக்காத பாலகுருசாமி வேண்டுமானால் நித்தியானந்தா போல தனித்தீவை வாங்கி அங்கு நீட் தேர்வு நடத்திக் கொள்ளட்டும். மற்றபடி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும். இந்தியா முழுவதில் இருந்துமே அத்தேர்வு முறை விலக்கப்பட வேண்டும்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!