murasoli thalayangam
பார்போற்றும் முதலமைச்சரின் இந்த பிறந்தநாள் முக்கியத்துவம் பெறுவது ஏன்? - முரசொலி ஏடு சிறப்பு தலையங்கம்!
மார்ச் 1 - தலைவர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள். இதுவரை வந்த பிறந்தநாள்களை விட இந்த ஆண்டு மிகமிகச் சிறப்பான பிறந்தநாள் என்பதைச் சொல்லவேண்டியது இல்லை! தாய்த்தமிழ்நாட்டின் தன்னிகரற்ற முதலமைச்சராக அவர் ஆனபிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதற்காக இது முக்கியத்துவம் பெறவில்லை. அத்தகைய முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து அவர் ஆற்றிவரும் சேவையும், செய்து தரும் செயல்திட்டங்களும் பார்போற்றும் முதல்வராக அவரைக் கொண்டு போய் உச்சியில் உட்கார வைத்துள்ளது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற அடைமொழியோடு அவரைச் சுருக்கிச்சொல்ல முடியாத அளவுக்குப் பேரும் புகழும்பெறத் தொடங்கிய பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மட்டுமல்ல - ஒரு இனத்தின் தலைவராக அவர் எழுந்து நின்றபிறகு வரும் முதல் பிறந்தநாள் இது. அதனால்தான் இந்த முதல் பிறந்தநாள் முக்கியத்துவம் பெறுகிறது. கழகத்தவர் - கழகத்தின் ஆதரவாளர்கள் - தோழமைக் கட்சியினர் மட்டுமா அவரைப் போற்றுகிறார்கள். கழக எதிரிகளும் அவரை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டார்கள். கழகத்துக்கு வாக்களிக்க இதுவரை விரும்பாதவர்களும், ‘பரவாயில்லையே!' என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ‘இவரை இதுவரை அறியாமல் போனோமே' என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். எதிர்க்கட்சிக் கூடாரங்களில் இவர் மீது என்ன விமர்சனம் வைப்பது என்று மாபெரும் குழப்பம் நித்தமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இப்படி அனைத்துத் தரப்பினராலும் ‘நம்மில் ஒருவர்' என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு வரும் முதல் பிறந்தநாள் இது! பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள்: "எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டாலும் - ஏளனத்துக்கு ஆளானாலும் - எடுத்த காரியத்தை முடித்தே தீருவது என்ற திடச்சித்தமும், விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி கிடைத்தே தீரும். தூற்றினோரே துதிபாடி நிற்பர். ஏளனம் பேசினோர் ஏந்தி ஏந்தி தொழுவர்" - என்றார் அண்ணா. அரசியலுக்கு மட்டுமல்ல, அறவியலுக்கும் இலக்கணம் சொன்ன காஞ்சி தந்த வள்ளுவன் சொன்னது இது. எவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்டார். எவ்வளவு ஏளனங்களுக்கு உள்ளானார். எத்தனை பழிச்சொற்கள். எத்தனை இழிச்சொற்கள். எத்தனை அவதூறுகள். ஆட்காட்டி வேலைகள். அத்தனையையும் அவர் எதிர்கொண்டார். எதிர்கொண்டார் என்பதைவிட - அமைதியாய் கவனித்திருக்கிறார். அத்தகைய அவதூறுக் கழிவுகளையே உரமாய்க் கொண்டு தன்னை உறுதிப்படுத்திக் கொண்டார்.
இத்தகைய எதிர்ப்புற சக்திகள் ‘எதுவுமே இல்லை' என்பதைப் போலவே பல்வேறு சூழலில் நடந்து கொண்டு அவர்களை அலட்சியப்படுத்தினார். அதே சூழலில் கழகக் களத்தில் உழைத்தார். மக்கள் மனதில் தன்னைப் பற்றிய நினைப்பை விதைத்தார். "ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு - என்று உழைப்பின் சிகரமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். இதைவிட பெரிய பட்டம் எனக்கு இருக்க முடியாது. ‘ஓயாமல் உழைத்தவன் இங்கே உறங்குகிறான்' என்று தனது கல்லறையில் எழுதச்சொன்ன காவியத் தலைவர்தான் கலைஞர். அவர் என்னைச் சொன்னார், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று. அரை நூற்றாண்டு காலம் இந்த சமுதாயத்துக்காக உழைத்தவன் நான். உழைக்க காத்திருப்பவன் நான். எனது உழைப்பின் மூலமாக இந்த இனம், நாடு, நாட்டு மக்கள், இளைஞர்கள், பெண்கள், அனைத்து சமூக மக்களும் பயனடைய எந்நாளும் உழைப்பேன் என்ற உறுதிமொழியை உங்களுக்கு நான் வழங்குகிறேன்" என்று கழகத் தலைவராய் இருந்து அவர் அளித்த வாக்குறுதிக்கு உண்மையாக உழைத்தார். உழைத்துக் கொண்டே இருந்தார். அவரது இத்தனையாண்டு கால அமைதி உழைப்பு வீண் போகவில்லை. அந்த உழைப்புக்குப் பின்னால் ஒரு அமைதி இருந்தது. ஒரு விதமான பொறுமை இருந்தது. அதற்குள் ஒரு அடக்கம் இருந்தது. அந்த உழைப்பு கடமையாக மட்டுமில்லாமல், உள்ளார்ந்த விருப்பமாகவும் இருந்தது. திரும்பத் திரும்ப - முத்தமிழறிஞர் கலைஞர் சொன்ன பதவி - பொறுப்பு என்பதைத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்.
பதவியாக இல்லாமல் பொறுப்பாக உணர்ந்து பொறுப்பாய் நடந்து காட்டியதன் மூலமாக ஏற்றுக் கொண்டவர்கள் மனதில் உயர்வும் - ஏற்றுக் கொள்ளத் தயங்கியவர் மனதில் இடமும் பெற்றிருக்கிறார். இந்தப் பிறந்தநாள் ஆண்டு, நமக்கு எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் அவருக்கும் மிகமிக முக்கியமானது. அவர் சொன்னதை, அவரே நிரூபிக்க வாய்ப்பு கிடைத்த பிறந்தநாள் ஆண்டு! 44 வயதில் 44 ஆவது சென்னை மாநகரத் தந்தையாக - மேயராகப் பொறுப் பேற்றார். அன்றைய தினமே சொன்னார். "எனக்கு வாக்களித்த மக்களுக்காக மட்டும் இல்லாமல், எனக்கு வாக்களிக்காத மக்களுக்காகவும் உழைத்து மதிப்பைப் பெறும் அளவுக்கு பாடுபடுவேன்" என்றார். அதில் சோதனை வைக்கவே தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். அந்தச் சோதனைகளைச் சாதனையாக்கி வென்றுவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அனைத்து மக்களின் அரசாக இதனை நடத்தி வருவதன் மூலமாக ஒரு அரசியல்வாதி என்ற நிலையில் இருந்து ஆளுமைத்திறன் கொண்ட அனைத்து மக்களின் தலைவராக அவர் மக்களால் அடையாளம் காணப்படுகிறார்.
"ஒரு விவசாயிக்கு மழையாகவும்-ஒரு ஏழைக்கு ஒரு கவளம் சோறாகவும்-ஒரு ஊழியருக்கு மாதத்தின் முதல் நாளாகவும்-ஒரு தொழில் அதிபருக்கு வளர்ச்சியின் குறியீடாகவும் - திராவிட முன்னேற்றக் கழக அரசு அமையும்" என்று சொன்னார். அப்படித் தான் தமிழக அரசை நடத்தி வருகிறார். தமிழகத்தில் திராவிட இயக்கம் உருவாக்கிய சமூகநீதித் தத்துவத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்க அகில இந்திய அளவில் அமைப்பைத் தொடங்கி இருக்கிறார். இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைக் காப்பாற்றவும் - மாநிலங்களின் சுயாட்சித் தன்மையை மேம்படுத்தவும் அவர் தமிழ்நாட்டில் இருந்து எழுப்பும் குரல் - இந்தியாவின் குரலாக மாறி வருகிறது. அதனால் தான் இந்தப் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்ல அகில இந்தியத் தலைவர்கள் வருகிறார்கள். தமிழினம் எழுச்சி பெறவும் -தமிழ்நாடு வளர்ச்சி பெறவும் -இந்தியா மலர்ச்சி பெறவும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்போற்ற பல்லாண்டு வாழ்க என முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் பிள்ளையான ‘முரசொலி' வாழ்த்துகிறது
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!