murasoli thalayangam

”உக்ரைன் உக்கிரம் தேவையில்லை; சோவியத் இதனை தவிர்ப்பதே நல்லது” - முரசொலி தலையங்கம் கூறுவது என்ன?

ரஷியாவுக்கும் உக்ரைனுக்குமான பிரச்சினை போராக வெடிக்கலாம் என்பதே இன்றைய நிலைமை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கேட்டுக் கொண்டார்.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதனை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் மோடி அறிவுறுத்தி இருக்கிறார். ஒன்றுபட்ட சோவியத் நாட்டின் ஒரு நாடாக இருந்ததுதான் உக்ரைன். அது பிரிந்தது. அதனை மீண்டும் கைப்பற்ற சோவியத் முயற்சிகள் செய்கிறது என்று ஒரு தரப்பும்; உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யாவை ஒட்டியுள்ள டான்பாஸ் பகுதியில் இருக்கும் ரஷ்யர்களை உக்ரைன் ராணுவம் துன்புறுத்துவதாகவும், அவர்களை மீட்பதற்காக சோவியத் ராணுவம் நடவடிக்கை எடுக்கிறது என்று இன்னொரு தரப்பும் சொல்கிறது.

"உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப் பகுதி மக்களைப் பாதுகாக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவெடுத்து இருக்கிறேன்"" என்று புதின் வெளிப்படையாகவே அறிவித்தார். 2014ம் ஆண்டு உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள தீவிரவாதக் குழுக்களை ரஷ்யா ஆதரித்து வருவதாகவும் பலத்த குற்றச்சாட்டு இருக்கிறது. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்டக் பகுதிகளில் உள்ள பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் சண்டை மூட்டி விடுகிறது என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இத்தகைய பதற்றமான சூழலில் ரஷ்ய அதிபர் புதின், இரண்டு நாட்களுக்கு முன் ஒரு அறிவிப்பைச் செய்தார். உக்ரைனில் உள்ள லுகான்ஸ்க் மற்றும் டன்ஸ்ட்க் ஆகிய பகுதிகளைதனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாகச் சொன்னார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானமும் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது, ‘உக்ரைன் நாடே ரஷ்யாவைச் சேர்ந்ததுதான்’ என்று புதின் சொல்லி இருக்கிறார். "உக்ரைன் என்பது எங்களது அண்டை நாடு மட்டுமல்ல, எங்களது வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். குறிப்பாக டோனஸ்க்கும் லூகான்ஸ்க்கும் எங்களது குடும்பத்தினர்" என்றும் சொல்லி இருக்கிறார்.

சோவியத்தின் பகுதியாக உக்ரைன் எப்படி இருந்தது என்பதையும், இப்போது அது வலதுசாரி நாடாக மாறிவிட்டது என்பதையும் அவர் சொல்லி இருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் சரமாரி குண்டுவீச்சுகளை ரஷ்யா நடத்தி வருகிறது. ஏவுகணைகள் வீசப்பட்டு வருகின்றன. இந்தத் தாக்குதலை உடனே நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இவற்றில் நல்ல நோக்கம் கொண்ட நாடுகளும் உண்டு. நல்லவர்களைப் போல நடிக்கும் நாடுகளும் உண்டு. ரஷ்யாவை மையம் கொண்டு விமர்சிப்பதன் மூலமாக கம்யூனிச நாடுகளையும் தத்துவத்தையும் விமர்சிக்கும் தந்திரத்தையும் சிலர் செய்யத்தான் செய்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்காத வகையில் ரஷ்யாவும் நடந்து கொள்ள வேண்டும்.

அதேபோல், ரஷ்யாவை விமர்சிப்பதும் கம்யூனிசத் தத்துவத்தை விமர்சிப்பதாகவும் ஆகாது. ‘டான்பாஸ் மக்கள் குடியரசு உதவி கோரி ரஷ்யாவை நாடியதால் அதுதொடர்பாக நான் தலையிட்டேன்’ என்று புதின் சொல்லி இருக்கிறார். உக்ரைன் நாட்டில் இனப்படுகொலை நடப்பதாகவும், அந்த மக்களைக் காக்கப் போவதாகவும் அவர் சொல்லி இருக்கிறார். இது அந்த நாட்டின் உள் விவகாரம். அதில் ரஷ்யா தலையிடுவதை உலக நாடுகள் கண்டிக்கின்றன. இதற்கு ரஷ்யா சொல்லும் சமாதானங்கள் சரியானதாக இல்லை. பிரிவினை சக்திகள், எதிரி நாடுகளின் தயவை எதிர்பார்ப்பதும், அவர்கள் உதவியை நாடுவதும் எல்லா நாட்டுப் பிரச்சினைகளிலுமே உண்டு. அந்த ஆக்கிரமிப்பை, ‘உதவி’யாகப் பார்க்க முடியாது. அர்த்தப்படுத்த முடியாது.

பெரும் நாடுகள் தங்களது அடங்காத ஆசைகளை இதுபோன்ற சிறிய நாடுகளில் தீர்த்துக் கொள்ளுதல் பல்வேறு இடங்களில் நடக்கிறது. "வெளியில் இருந்து எந்த நாடாவது தலையிட நினைத்தால் அந்த நாடு வரலாற்றில் சந்தித்ததை விட பெரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்றும் புதின் சொல்லி இருக்கிறார். வெளியில் இருந்து தலையீடு இல்லாமல் எந்த நாடும் இன்றைய சூழலில் போரை நடத்த முடியாது. போர்களுக்கு நியாயங்கள் இருக்கலாம். ஆனால் போரை நியாயவாதிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்வது இல்லை. அது அநியாயவாதிகளுக்குத்தான் அதிகம் பயன்படும். இதனை புத்தின் போன்றவர்கள் உணராமல் இருப்பது சரியல்ல. இந்தப் பிரச்சினையை சில நாடுகள் தங்களது உள்நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பதால் இந்தப் பிரச்சினையை சோவியத் தவிர்ப்பதே பொதுவாக நல்லது.

Also Read: கைவிரித்த அமெரிக்கா - உக்ரைனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய Hackers : ரஷ்யாவின் இணையதளங்களை முடக்க முயற்சி!