murasoli thalayangam
”LIC விற்பனை.. விதை நெல்லை விற்றுச் சாப்பிடுவதற்குச் சமம்”: மோடி அரசுக்கு முரசொலி கடும் கண்டனம்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (பிப்.17 2022) தலையங்கம் வருமாறு:
ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி.யின் ஆயுளைப் பறிக்கும் காரியங்கள்தான் இப்போது நடக்கத் தொடங்கியது. எதையும் உருவாக்கத் தெரியாதவர்களுக்கு உருக்குலைக்கத்தான் தெரியும் என்பதன் எடுத்துக் காட்டாக மாறிவிட்டது ஆயுள் காப்பீட்டுக் கழகம்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதன் மூலமாக ஆட்சி நிர்வாகமே தனியார் மயமாக ஆகி வருகிறது. அரசு மயம் என்பது தனியார் மயமாக மாறி வருகிறது. பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலமாக 2.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப் போவதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். கண்களை விற்றுச் சித்திரம் வாங்க நினைக்கிறார் நிதி அமைச்சர்.
அரசுக்கு இருக்கும் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை பல ஆண்டுகளாகவே வழக்கமாக வைத்துள்ளார்கள். இது இப்போது அதிக மாகவும், துணிச்சலாகவும் நடக்கத் தொடங்கி இருக்கிறது. முன்பெல்லாம் கஷ்டகாலம் என்று சொல்லி விற்றவர்கள், இப்போது லாபம் பார்ப்பதற்காக விற்கிறோம் என்று மாற்றிச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.செருப்புக்குத் தகுந்த மாதிரி காலை வெட்டிக் கொள்ள நினைக்கிறார்கள்.
2021 பிப்ரவரி 1 ஆம் நாள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசிடம் உள்ள எல்.ஐ.சி.யின் 100 சதவிகிதப் பங்குகளின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்கப் போவதாகச் சொன்னார். இதற்கான பொதுக்காப்பீட்டுத் திட்ட மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டார்கள். கடந்த ஆண்டு டிசம்பருக்குள் விற்பனை செய்து விடுவதாகச் சொன்னார்கள். ஆனாலும் கணக்கீடு முடியாததால் இந்த ஆண்டு மார்ச் வரைக்கும் என்று தேதியை தள்ளிப் போட்டுள்ளார்கள். இப்படி விற்பதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி கொடுத்துவிட்டது.
தற்போது 632 கோடியே 49 லட்சத்து 97 ஆயிரத்து 701 பங்குகள் ஒன்றிய அரசிடம் உள்ளன. இதில் 4.99 சதவிகிதத்தை அதாவது 31 கோடியே 62 லட்சத்து 49 ஆயிரத்து 885 பங்குகள் தனியாருக்கு விற்கப்பட இருக்கின்றன. இதன் மூலமாக 62 ஆயிரம் கோடி ரூபாய் பணம் திரட்டலாம் என்று கணக்கிட்டுள்ளார்கள். இப்படி கிடைக்கும் பணம், எல்.ஐ.சி.க்கு வராது. ஒன்றிய அரசுக்குத்தான் போகும். இதன் மூலமாக எல்.ஐ.சி.யின் கட்டுமானம் மெல்ல இறுக்கம் குறையப் போகிறது.
19.01.1956 இரவு 8.30 மணிக்கு அப்போதைய நிதியமைச்சர் தேஷ்முக் அவர்கள் வானொலி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டார். ‘மறுநாள் காலையிலேயே அனைத்து தனியார் காப்பீடு நிறுவனங்களும் அரசுடைமை ஆக்கப்படும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. அதைத் தொடர்ந்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. தனியார் நிறுவனங்களை ஆயுள் காப்பீட்டில் அனுமதிப்பதில்லை என்று அரசு முடிவெடுத்தது.
1956-ல் ரூ.5 கோடி மூலதனத்தில் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி. கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் மட்டும் மொத்த வருமானமாக ரூ.6,82,205 கோடியை ஈட்டியுள்ளது. இதில் பிரிமியம் வருவாயாக ரூ.4,02,844.81 கோடியைப் பெற்றுள்ளது. எல்.ஐ.சி.யின் இன்றைய மொத்த சொத்து ரூ.38,04,610 கோடி. இதன் காரணமாகத்தான் இந்திய நிதிச் சந்தையில் எல்.ஐ.சி. விசுவரூபம் எடுத்திருக்கிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் புள்ளிவிபரங்களைப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. இன்று எல்.ஐ.சி.யில் தனிநபர் காப்பீடு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை 28.62 கோடி. குழுக் காப்பீடு பெற்றிருப்பவர்கள் 12 கோடி என மொத்தம் 40.62 கோடி பாலிசிகளை விற்பனை செய்து, உலகிலேயே மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி.அபாரமான வளர்ச்சியில் உள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
32 கோடிக் குடும்பங்கள் உடைய நாட்டில் 40 கோடி பாலிசிகளைக் கொண்ட நிறுவனமாக அது இருக்கிறது.எல்.ஐ.சி.க்கு நாடு முழுவதும் 8 மண்டல அலுவலகங்கள், 113 கோட்ட அலுவலகங்கள், 2,048 கிளை அலுவலகங்கள், 1,546 துணை அலுவலகங்கள், 1,08,987 ஊழியர்கள், 13,53,808 முகவர்கள் என விரிந்த, பரந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் நம்பகத் தன்மை குறித்து ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. 2020-21-ம் நிதியாண்டில் கொரோனா காலத்தில்கூட இறப்பு உரிமம் 98.62 சதவிகிதமும், முதிர்வுத் தொகை 89.78 சதவீதமும் வழங்கி இருக்கிறது. எத்தனையோ தனியார் நிறுவனங்கள் வந்தாலும் ஆயுள் காப்பீட்டுச் சந்தையில் இதன் மதிப்பு குறையாமல் உள்ளது. போட்டிக் கதவுகள் திறந்து விடப்பட்டாலும் தனது சந்தை மதிப்பை தக்க வைத்துள்ளது. அதுதான் சிலரது கண்ணை உறுத்துகிறது.
ஒன்றிய அரசுக்கு எப்போதெல்லாம் பணம் வேண்டுமோ அப்போதெல்லாம் எல்.ஐ.சி. கை கொடுக்கும். ஐ.டி.பி.ஐ. வங்கிக் கடனில் மூழ்கஇருந்தபோது கூட எல்.ஐ.சி.யே அதைக் காப்பாற்றியது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு என்று வந்தால் எல்.ஐ.சி. அதில் அதிக முதலீடு செய்யும். சராசரியாக அரசு பத்திரங்களிலும், பங்குச் சந்தைகளிலும் எல்.ஐ.சி. வருடத்திற்கு 55 முதல் 65 ஆயிரம் கோடி முதலீடுகளைச் செய்கிறது. 2009ஆம் ஆண்டிலிருந்து வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்றபோதெல்லாம் எல்.ஐ.சி.தான் அதை வாங்க முன்வரும் முதல் நிறுவனமாக இருந்தது.
ஆனால் இன்று எல்.ஐ.சி.க்கே அந்த நிலைமை வந்துவிட்டது. இவைஅனைத்தும் நல்லதுக்கு அல்ல. நல்லதன் அடையாளம் அல்ல! இதன் மூலமாக எல்.ஐ.சி.யின் கட்டுமானம் கேள்விக் குறியாக்கப்படுகிறதுஎன்பதை விட ஒன்றிய அரசு எத்தகைய நிதிநிலைமையில் இருக்கிறதுஎன்றே தெரிகிறது. விதை நெல்லை விற்றுச் சாப்பிடுவதற்குச் சமம் இது!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!