murasoli thalayangam
”முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொற்களை வழிமொழியும் வட மாநிலங்கள்”: முரசொலி தலையங்கம் புகழாரம்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (பிப்.16 2022) தலையங்கம் வருமாறு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொற்களை இந்தியாவே இன்று வழிமொழியத் தொடங்கி இருக்கிறது. வடமாநிலங்களில் இருந்து ஒலித்துள்ள மூன்று குரல்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரலைஎதிரொலிப்பதாக அமைந்துள்ளன.
முதலாவது குரல் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் குரலாகும். “அதிபர் ஆட்சி முறையை நோக்கி நாடு சென்று கொண்டு இருக்கிறது. இந்தியாவின் கூட்டாட்சி முறையைப் பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்'' என்று மம்தா பானர்ஜி அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
“மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒரே குடையின் கீழ் வருவது என்பது அனைவரது கடமையும் ஆகும். வெறுப்பு, அராஜகம் ஆகியவற்றில் இருந்து நாட்டை விடுவிக்க இதுவே நேரம். அதிபர் ஆட்சி முறையை நோக்கி நாடு சென்று கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோருடன் நான் பேசினேன். நாட்டின் கூட்டாட்சி முறை அழிக்கப்படாமல் பாதுகாக்க நாங்கள் முயன்று வருகிறோம்” என்று மம்தா பானர்ஜி சொல்லி இருக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சேலத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை வைத்துக் கொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதுதான் இது. “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நாங்கள் மகத்தான வெற்றியைப் பெற்றோம். அதற்குக் காரணம் தமிழகத்தில் இருந்த கட்சியின் ஒற்றுமை ஆகும். அத்தகைய ஒற்றுமையை அகில இந்திய ரீதியில் உருவாக்க நினைப்பதன் மூலமாகத்தான் வெற்றியைப் பெறமுடியும்'' என்று தலைவர் ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள்.
கூட்டாட்சித் தத்துவம் நிலைப்பதற்காக, மதச்சார்பின்மை நீடிப்பதற்காக, மாநில சுயாட்சி மலர்வதற்காக இது அவசியம் என்று குறிப்பிட்டார்கள். அதனைத்தான் இன்றைய தினம் மம்தா பானர்ஜி சொல்லத் தொடங்கி இருக்கிறார்.
இரண்டாவது குரல் - பல்கலைக் கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் சுகாதேவ் தோரெட் சொல்லி இருப்பதாகும். ‘நீட்’ தேர்வை நாம் ஏதோ அரசியலுக்காக எதிர்க்கிறோம் என்று சில அரைவேக்காடுகள் சொல்லி வருகிறார்கள். கல்வியாளர் போர்வையில் நடமாடும் காவியாளர்களான பாலகுருமூர்த்திசாமிகளும் உளறிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பல்கலைக் கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் மிகச் சரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கூற்றை வழிமொழிந்துள்ளார்.
“நீட் தேர்வு தொடர்பாக வலுவான நடவடிக்கை எதையும் எடுக்கா விட்டால் ஒன்றிய அரசு விரைவில் அனைத்துக் கல்வி முறையிலும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்துவிடும். அவர்கள் கொண்டு வரத் திட்டமிட்டு இருக்கும் தேசியக்கல்விக் கொள்கை என்பதே, அனைத்து கல்வியிலும் நுழைவுத் தேர்வைப் புகுத்துவதற்காகத்தான். இதுபோன்ற நுழைவுத் தேர்வு முறை கல்வியை யாரிடமும் நெருங்க விடாது. பணம் படைத்தவர்கள், வசதி வாய்ப்புள்ளவர்கள் தான் ‘நீட்’ பயிற்சி வகுப்பில் சேர வாய்ப்பைப் பெற்று, ‘நீட்’ தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள முடியும். மற்றவர்களால் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற முடியாது. எனவே ‘நீட்’ தேர்வை எதிர்க்க முயற்சிக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார் சுகாதேவ் தோரெட்.
இதுதான் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்லி வருவது ஆகும். இந்த நூற்றாண்டில் படிக்கத் தொடங்கிய மக்களுக்கு மீண்டும் படிப்புக்கு தடை போடுவதுதான் இந்த நுழைவுத் தேர்வு என்றும், படிப்புதான் தகுதியே தவிர - படிக்கவே தகுதி தேவையா என்றும் கேட்டு வருகிறார் முதலமைச்சர். புதிய கல்விக் கொள்கை மூலமாக அனைத்துக் கல்வி நிலையங்களிலும் நுழைவுத் தேர்வு வரப்போகிறது என்றும், பணக்காரர்களுக்கு பாதை காட்டுவதாக இந்த தேர்வு முறை இருப்பதாகவும் முதல்வர் சொல்லி வந்தார். இதனைத்தான் சுகாதேவ் தோரெட் சொல்லி இருக்கிறார்.
மூன்றாவது குரல் - இந்தியாவின் புகழ்பெற்ற மிக மூத்த பத்திரிக்கையாளரான பிரபு சாவ்லா குரலாகும். முதலமைச்சரின் முழக்கங்களைமுழுமையாக அடையாளம் கண்டு வழிமொழிந்துள்ளார் பிரபு சாவ்லா. “திராவிடநாகரீகத்தின் வழித்தோன்றலான மு.க.ஸ்டாலின் இன்று தேசிய நிகழ்ச்சிநிரலை வடிவமைக்கிறார். அவர் ஒன்றிய அரசுடன் தனியாக இல்லாமல்,கூட்டாகச் சேர்ந்து போராடுகிறார். ஒன்றிய அரசுக்கு எதிராக ஒரு மாற்றைஉருவாக்குகிறார். அவர் மாநிலப் பிரச்சினைகளையும், தேசியப் பிரச்சினைகளையும் முழுவீச்சில் கையாள்கிறார். ஸ்டாலினை ஒரு மாநில சிமிழுக்குள் அடைத்துவிட முடியாது. வேற்றுமையில் ஒற்றுமை கோட்பாட்டைவலியுறுத்துகிறார். ‘நீட்’ பிரச்சினையை மாநில உரிமைப் பிரச்சினையாகஅவர் பார்க்கிறார். கூட்டாட்சித் தத்துவத்தின் மனச்சாட்சியாகஇருக்கிறார். திராவிடப் பால்வெளியில் ஒரு புதிய சூரியன் மேலெழும்பி வருகிறது. தமிழகத்தை தேசிய அளவில் வளர்த்தெடுக்க விரும்புகிறார். ஸ்டாலின் இன்று என்ன நினைக்கிறார் என்பதை இந்தியா நாளை செய்யும்” என்று பிரபு சாவ்லாவின் ஒவ்வொரு வார்த்தையும் கல்வெட்டைப் போல இருக்கிறது.
இந்தியாவின் இதழியல் முகங்களில் மிக முக்கியமானவர் பிரபு சாவ்லா. இந்தியா டுடேயில் அவர் இருந்த போதுதான் சர்ச்சைக்குரிய ஜெயின் கமிஷன் அறிக்கையை வெளியில் விட்டார். ‘இந்தியா டுடே' இதழ் மூலமாக தான் எழுப்பும் பிரச்சினையை இந்தியா முழுமைக்குமானதாக மாற்றும் எழுத்து வல்லமை கொண்டவர். ‘ஆஜ் தக்' இல் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இன்று ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழ் குழும தலையங்க இயக்குநராக இருக்கிறார். இதழியல் துறையில் அவர் வாங்காத விருதே இல்லை என்ற அளவுக்கு புகழ் பெற்றவர். அவர் சொல்கிறார்: ‘ஸ்டாலின் இன்று என்ன நினைக்கிறார் என்பதை இந்தியா நாளை செய்யும்' என்று!
தெற்கு என்பது திசைகளைத் தீர்மானிக்கிறது. தீர்மானிப்பவராகமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார். அதனை வடக்கு வழிமொழியத் தொடங்கி இருப்பதன் அடையாளம் தான் மம்தா பானர்ஜி, சுகாதேவ் தோரெட், பிரபு சாவ்லா ஆகியோரின் குரல்கள்!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?