murasoli thalayangam
"இந்தி படித்தால் வேலை கிடைக்கும்.. தமிழ்நாட்டில் உங்கள் பொய் சந்தி சிரிக்கிறது": முரசொலி தலையங்கம்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜன., 31 2022) தலையங்கம் வருமாறு:
மீண்டும் மீண்டும் மொழிப் பிரச்சினையைத் திணித்து நமது விழிகளைக்குத்துகிறார்கள்!
இந்தியைத் தமிழர்கள் மீது திணிப்பதற்காக விதவிதமாகக் கருத்துச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
“இந்தியாவின் பிற மாநில மாணவர்கள் தங்கள் தாய்மொழியைத் தவிர, பிறமாநில மொழிகளைக்கற்கிறார்கள். அதைப் போலத் தமிழக மாணவர்கள் இந்திஉள்பட பிற மாநில மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்”என்று தமிழக ஆளுநர் ரவி அவர்கள் கூறியுள்ளார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி, “தமிழ்நாட்டுமாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தோடு மூன்றாவது மொழி யாக இந்தியைக்கற்றுக்கொள்ள வேண்டும். அதன்மூலம் பிற மாநிலங்களில் அவர்களுக்குவேலை வாய்ப்புகள் பெருகும்” என்றும் கூறியுள்ளார்.
இதன் மூலமாக தமிழ்நாட்டின் மொழிக் கொள்கையானது மீண்டும்விவாதத்துக்கு வந்துள்ளது. தமிழகத்துக்கு என நீண்ட நெடிய மொழிப்போராட்ட வரலாறு உண்டு. ஏனென்றால் தமிழகத்துக்கென பல ஆயிரம்ஆண்டுப் பழமை வாய்ந்த மொழி இருக்கிறது. முன்னைப் பழமைக்குப்பழமையாய், பின்னைப் புதுமைக்குப் புதுமையாய் விளங்கும் மொழியானதமிழ் மொழி இருக்கும் போது மாற்று மொழி எதற்கு?
தமிழ்நாட்டுக்குள் தமிழ் - அகில இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத் தொடர்புக்கும் சேர்த்துஆங்கிலம் ஆகிய இரண்டையும் பிழையற - முழுமையாக
ஒருவர் கற்றிருந்தால் போதுமானது. ஒரு மொழியைப் பேச - எழுத படிக்கவுமான திறனும் - அதே மொழியியலை உள்வாங்கிச் சிந்திக்கும் திறனும் இருந்தால் போதுமானது. அந்த நெறியைப் பின்பற்றியே தமிழ்நாட்டின் மொழிக்கொள்கை வகுக்கப்பட்டது. அத்தகைய மொழிக் கொள்கையை
தமிழறிஞர்களுக்கு எல்லாம் பெரிய தமிழறிஞராகவும் - ஆங்கிலப் புலமையாளர் எவரையும் எந்த இடத்திலும் விஞ்சி நிற்கக் கூடிய பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்துத் தந்துள்ளார்கள்.
1965 மொழிப் போராட்டத்துக்கு பின்னர்- 1967 தேர்தலில் ஆட்சி அமைத்த திராவிட முன்னேற்றக் கழக அரசு மொழிப் போராட்டத்தின் வெப்பத்தால் உருவாக்கியது தான் தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை ஆகும்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே மொழிக் கொள்கையை வகுக்க அடித்தளம் அமைத்ததும் 1965 மொழிப்போராட்டம்தான்.இந்திதான் இனி ஆட்சி மொழி என்பதில் பிடிவாதமாக இருந்த இந்திய ஆட்சியாளர்கள், லேசாக இறங்கி வரத் தொடங்கினார்கள். 1967 நவம்பர் 27 இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சி
மொழிகள் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவரை இந்தி தான் ஆட்சி மொழி என்று சொல்லிக் கொண்டு இருந்தவர்கள், ‘ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கலாம்’ என்று சட்ட முன்வடிவு கொண்டு வந்தார்கள். இது அன்றைய இந்தி மொழி ஆதரவு உறுப்பினர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அன்று நாடாளுமன்றத்தில் கழகத்தின் சார்பில் பேராசிரியரும், நாஞ்சிலாரும் குரல் கொடுத்து முழங்கினார்கள்.
“சட்டத் திருத்தம்தான் எங்களுக்குத் தேவை, சட்டமுன்வடிவு அல்ல’’என்றார் நாஞ்சிலார். “பதினான்கு மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும்” என்று முழங்கினார் பேராசிரியர். “இது தமிழக மாணவர்களையும், தி.மு.க.வையும் திருப்திப்படுத்தாது” என்றார் முதல்வர் அண்ணா அவர்கள்.
இந்த சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை 1968 சனவரி 23 ஆம் நாள் கூட்டினார் முதல்வர் அண்ணா அவர்கள். வரலாற்றுப் பிரகடனமாக மொழிக் கொள்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் வகுத்தளித்தார் பேரறிஞர் பெருந்தகை அவர்கள்.
“பல்வேறு மொழிகள், பண்பாடு, நாகரிகம் உள்ள நாட்டில் ஒரு வட்டார மொழியை மட்டும் இந்தியாவின் ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்டிருப்பது, இந்தியாவின் ஒற்றுமை யையும் ஒருமைப் பாட்டையும் சீர்குலைக்கும் என்றும்; பிறமொழிகள் பேசும் வட்டாரங்கள் மீது, ஒரு மொழி பேசும் வட்டாரம் ஆதிக்கம் செலுத்தும் என்றும் கருதுவதால்;
தமிழும் மற்ற மொழிகளும் மைய அரசின் ஆட்சிமொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்; அதற்காக அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அந்தக் காலம் வரும் வரையில், ஆங்கிலம் மட்டுமே ஆட்சிமொழியாக நீடிக்க வேண்டும். அரசிய லமைப்புச் சட்டத்தில் ஆட்சிமொழிகள் பற்றிய இயல் அந்த வகையில் திருத்தப்பட வேண்டும் என்று இந்தப் பேரவை வலியுறுத்துகிறது” என்பதுதான் அகில இந்தியாவுக்குமான நமது மொழிக் கொள்கை!
“தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும், மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கி விட இப்பேரவைதீர்மானிக்கிறது” என்று அந்த தீர்மானத்தில் தெளிவாக வரையறுக் கப்பட்டது.
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் ஒரு கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு உருவாக்கி அறிமுகம் செய்து வருகிறது. அதில் தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை என்று சொல்லி இருக்கிறார்கள். அது உண்மையான இதயசுத்தியுடன் சொல்லப்பட்டதாக இருக்குமானால், இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களும் இந்தி படிக்க வேண்டும் என்று எதற்காகச் சொல்கிறார்கள்? சொல்கிறீர்கள்?
வட இந்திய மாநிலங்களில் இந்தி என்ற ஒரு மொழி கற்றால் போதும் -இங்கே உள்ள மாணவர்கள் மூன்று மொழிகளைக் கற்கவேண்டும் என்பதே பளு அல்லவா?
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற பொய்யே, சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறதே! பேச்சுத் தமிழைக் கற்றுக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைத்து அடிப்படை வேலைகளிலும் இருப்பதைப் பார்க்கிறோமே! அவர்களின் இந்தி, அவர்களுக்கு ஏன் சோறு போட வில்லை? அது யார் குற்றம்?
எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல நாம். மொழித் திணிப்புக்கு எதிரிகள். முதலில் இந்தி. அதன்பிறகு சமஸ்கிருதம் - இதுதான் அவர்களது சதித்திட்டத்தின் உள்ளடக்கம். ‘சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக ஆகும் வரைஇந்தியை வைத்துக் கொள்வோம்’ என்பது ஜனசங்க காலத்துக் கோட்பாடு.அந்தக் கோட்பாட்டைப் புறந்தள்ளுவதே நமது மொழிக் கொள்கை!
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!