murasoli thalayangam
“பென்னிகுயிக் சிலையை தமிழகத்தில் அமைத்தார் கலைஞர்..லண்டனில் நிறுவுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜனவரி 17, 2021) தலையங்கம் வருமாறு:
பெருமைக்குரிய பென்னிகுயிக் அவர்களின் சிலையை இலண்டனில் நிறுவுவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து இருக்கிறார். அந்தச் சிலை தமிழ்நாட்டு மக்களின் நன்றியும் அடையாளமாக அமையப்போகிறது.
முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய தன் மூலமாக கடந்த நூற்றாண்டில் மட்டுமல்ல, எதிர்வரும் காலத்தில் எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு வழிபடும் மனிதராக உயர்ந்து நிற்பவர்தான் பென்னிகுயிக். இந்த நூற்றாண்டு எத்தனையோ பொறியாளர்களை, ஆங்கில அரசின் அதிகாரிகளைப் பார்த்திருக்கிறது. ஆனால் பென்னிகுவிக் உயரத்தை யாரும் தொடவுமில்லை. அவரைப் போல அடையாளம் காணப்படவுமில்லை.
முல்லைப் பெரியாறு அணையை அதற்கான கட்டுமானத் திறத்துடன் கட்டினார் என்பதற்காக பென்னிகுயிக் பெயர் போற்றப்படவில்லை. ஒரு அரசாங்கம் உத்தரவிட்டதை, ஒரு அரசாங்க அதிகாரி உண்மையோடு செய்து முடித்தார் என்பதற்குக் கூட பல நல்ல உதாரணங்கள் அதிகம் உண்டு.
ஆங்கில அரசாங்கம் அதனைச் செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டியபோது - அந்தத் திட்டத்தையே கிடப்பில் போடலாம் என்று நினைத்தபோது - கிடப்பில் போட்டபோது தனது சொந்த வீட்டைக் கட்டுவதைப் போல முல்லைப்பெரியாறு அணையைக் கட்டியதால் தான் பென்னிகுயிக் இன்று தென் மாவட்டத்து மக்களால் போற்றப்படுகிறார். அவருக்கு இலண்டனில் தமிழ்நாடு அரசால் சிலை வைக்கப்பட இருக்கிறது.
இந்த முல்லைப் பெரியாறு அணை 1893- இல் 60 அடி உயரத்திற்கும், அதன்பின்பு 1894-இல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையைச் சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் திறந்து வைத்தார்.
“முல்லைப் பெரியாறு அணை, பொறியியல் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் உறுதியும், நவீன தொழில்நுட்பமும், பொறியியல் உலகில் ஆச்சர்யமாகப் பேசப்படும். அதிசயமாகப் பார்க்கப்படும். காட்டில் ஓடும் காட்டாற்றின் குறுக்கே அணை கட்டியிருப்பது பெரும் சாதனையே!” என்று அணை திறப்பு விழாவில் பேசினார் வென்லாக். அத்தகைய கம்பீரத்தோடு இன்றும் காட்சி அளிப்பது தான் முல்லைப் பெரியாறு அணை ஆகும்.
முல்லைப் பெரியாறு அணை, சுண்ணாம்பு சுர்க்கி கலவையில் கருங்கல்லில் கட்டப்பட்ட அணை ஆகும். பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என்று அழைக்கப்பட்டது. முல்லையாறு - பெரியாறு ஆகிய இரண்டும் சேருமிடத்தில் இருப்பதால் முல்லைப் பெரியாறு அணை என்று அழைக்கப்படுகிறது. 1882ஆம் ஆண்டு ஆங்கில அரசால் இந்தத் திட்டம் ஏற்கப்பட்டு, மேஜர் ஜான் பென்னிகுயிக்கிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவக்கப்பட்டது. பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. இந்த அணையின் கட்டுமானப் பணிக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது. சுண்ணக்கல், சுர்க்கி கலவையால் கட்டப்பட்டது.
முதலில் அணை கட்டியபோது பெய்த கனமழையால் அணையே அடித்துச் செல்லப்பட்டது. அடுத்து ஆங்கில அரசு பணம் ஒதுக்காத நிலையில் இலண்டன் சென்ற பென்னிகுயிக் தனது சொந்த முயற்சியால் பணம் திரட்டி வந்து இந்த அணையைக் கட்டினார். இன்றைய தினம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் இந்த முல்லைப் பெரியாறு அணையும், அதற்குக் காரணமான மனிதர் பென்னிக்குயிக் அவர்களும்தான்!
இலண்டனைச் சேர்ந்த பொறியாளர் ஜான் பென்னி குயிக். சென்னை அரசின் பொதுப்பணித் துறைப் பொறியாளராகவும் செயலாளராகவும் 1895ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள் நியமிக்கப்பட்டார்.அவர் வருகை தந்தகாலக்கட்டத்துக்கு முன் வைகையில் பல முறை மழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. இதனை ஆய்வு செய்தார் பென்னிகுயிக். தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதை அணை கட்டித் திருப்பிவிட்டால் வறண்ட நிலங்கள் பயன்பெறும் என்று நினைத்தார். இதற்கான திட்டம் தயாரித்தார். திட்டத்தின் மொத்த மதிப்பு 75 இலட்சம் ரூபாய்!
அன்றைய ஆளுநர் வென்லாக் ஒப்புதல் வழங்கினார். ஆனால் அணை கட்டுவது அவ்வளவு எளிமையானதாக இல்லை. மொத்தமும் காடு. அந்தக் காட்டுப்பகுதியில்தான் அணை கட்டியாக வேண்டும். பூச்சிகள் முதல் விலங்குகள் வரை அனைத்தையும் எதிர்கொண்டு கட்டும் ஊழியர்களைத் தேர்ந்தெடுத்தார். பாதி கட்டிய நிலையில் பெய்த கடும் மழையால் அணையேஅடித்துக் கொண்டு போய்விட்டது. பூச்சிகள் கடித்தும், காலரா காய்ச்சல்வந்தும் இந்த அணைக்கட்டும் காலத்தில் உயிர் விட்டவர்கள் மட்டும் 422 பேர். அப்படியானால் எத்தகைய சூழலில் இந்த அணை கட்டப்பட்டதுஎன்பதைப் பாருங்கள். ஆங்கில அரசிடம் கட்டுமானப் பணிக்கான தொகையை அதிகப்படுத்திக் கேட்டார். அவர்கள் தர மறுத்து விட்டார்கள். அதற்காக அணையைப் பாதியில் விட்டுவிட பென்னிகுயிக்குக்கு மனமில்லை. என்ன செய்தார்?
சொந்தமாக நிதி திரட்டுவதற்காக இலண்டன் சென்றார். தனது சொத்துக்கள் மொத்தத்தையும் விற்றார். கிடைத்த பணத்தை எடுத்து வந்து அணையைக் கட்டத் தொடங்கினார். கட்டி முடித்தார். அவரது சாதனையைப் பாராட்டிய சென்னை மாகாண அரசு, அவரை பொதுப்பணித் துறைச் செயலாளராக பதவி உயர்வு அளித்தது. இந்திய பொறியியல் கல்லூரித் தலைவராகவும் இருந்தார். சென்னை பல்கலைக்கழக ஆசிரியராகவும், சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும் சில ஆண்டுகள் இருந்தார்.
இறுதிக் காலத்தில் அரசாங்கம் அளித்த வீட்டில் இங்கிலாந்தில் வாழ்ந்தார். வறுமை சூழ் வாழ்க்கைதான் அவருக்கு வாய்த்தது. 1911ஆம் ஆண்டு அவர் காலமானார். அவருக்கு நான்கு மகள்கள். ஒரு மகன். வறுமையின் காரணமாக மூன்று மகள்களும் திருமணமே ஆகாமல் இறந்து போனார்கள். ஒரு மகள், ஜெர்மன் சென்று ஜெர்மனியர் ஒருவரை மணந்து அங்கு குடியேறினார். அவரது ஒரே மகன், இப்போது வழக்கறிஞராக இருக்கிறார். பென்னிகுயிக் நினைவைப் போற்ற தமிழகத்தில் சிலை வைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது புகழைப் போற்றும் வகையில் இலண்டனில் சிலை வைக்க இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தோன்றிப் புகழொடு தோன்றிய பென்னி குயிக் வாழ்க!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?