murasoli thalayangam
“பதவிக்கு வந்த மிகக் குறுகிய காலத்திலேயே முதலிடத்தைப் பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி புகழாரம்!
தமிழ்நாடு ஆளுநர் மேதகு ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆற்றிய உரையானது வரலாற்றில் இடம்பெறத்தக்க பேருரை ஆகும். அந்த உரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை போற்றியும் பாராட்டியும் உள்ளார். இவை ஏதோ சம்பிரதாயமான பாராட்டாக இல்லாமல் உள்ளார்ந்த பாராட்டாக உள்ளது. மக்கள் மத்தியில் முதலமைச்சருக்கு கிடைத்துவரும் பாராட்டுகளை, மக்கள் மன்றமான சட்டப்பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் பதிவு செய்து விட்டார்கள். முதலமைச்சர் மீதான ஆளுநரின் பாராட்டு என்பது வெறும் புகழுரையாக மட்டுமில்லாமல், அந்த புகழுக்கான காரணங்களை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்ததுதான் மிக முக்கியமானது ஆகும்.
“பதவியேற்ற முதல் நொடியிலிருந்தே, ஒட்டுமொத்த அரசு இயந்திரத் தையும் முடுக்கிவிட்டு, மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, ஆக்சிஜனும், அத்தியாவசிய மருந்துகளும் மாநிலமெங்கும் கிடைப்பதை உறுதிசெய்து, தடுப்பூசிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையை திறம்படக் கையாண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்” - என்ற ஆளுநரின் பாராட்டானது கடந்த ஏழு மாத காலமாக எடுத்து வந்த கொரோனா தடுப்புப் பணிகளுக்கான பாராட்டுப் பத்திரம் ஆகும்.
பதவியேற்ற முதல் நொடியில் இருந்தே என்று ஆளுநர் அவர்கள் சொன்னாலும் - திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுகிறது, அதுதான் ஆட்சி அமைக்கப் போகிறது என்பது தெரிந்ததும் அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்துக்கு வந்து சந்தித்தார்கள். வாழ்த்துச் சொல்ல வந்த அதிகாரிகளை - வாழ்த்தைப் பெற்று அனுப்பி விடாமல் மக்கள் பற்றிய அக்கறையோடு கேட்டு அன்றைய தினமே கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட்டார் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை - என்பது போன்ற செய்திகள் முதலமைச்சரை பதற்றம் அடைய வைத்தன. நித்தமும் துடித்தார். தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கினார். மற்ற மாநிலங்களிடமிருந்து ஆக்சிஜனைப் பெற்று வந்தார். இதற்காகவே நமது அதிகாரிகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்பினார். இந்த பற்றாக்குறையை இரண்டு வாரங்களுக்குள் நீக்கினார். அதனை மனதில் வைத்துத்தான் ஆளுநர் அவர்கள் இத்தகைய பாராட்டை வழங்கி இருக்கிறார்.
கொரோனாவை தடுக்க ஒரே தடுப்பரண் என்பது தடுப்பூசிதான். அதனைச் செலுத்துவதை ஒரு இயக்கமாகவே முதலமைச்சர் அவர்கள் மாற்றினார்கள். இதுவரை 8.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதனையும் ஆளுநர் அவர்கள் பாராட்டி உள்ளார்கள். இதுவரை 20 நாட்கள் தடுப்பூசி முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. ஒரே நாளில் 50 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடக்கிறது. அதிகபட்சமாக 30 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது போன்ற முயற்சிகளை முன்னெடுப்புகளை கடந்த அ.தி.மு.க. ஆட்சி செய்யவில்லை.
கடந்த ஆட்சியில் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டு இருந்தது என்பதையும் ஆளுநர் சுட்டிக் காட்டி இருக்கிறார். கொரோனாவைப் போலவே மழை - வெள்ளம் ஏற்படுத்திய பேரிடர் நேரத்தில் முதலமைச்சரின் செயல்பாட்டையும் ஆளுநர் பாராட்டி உள்ளார். நேரடிமேற்பார்வையில் முன்னெச்சரிக்கையை சரியாக எடுத்து அணைகளில் இருந்தும், ஏரிகளில் இருந்தும் உபரி நீர் விடுவிக்கப்பட்டதை ஆளுநர் சுட்டிக்காட்டியதைப் படிக்கும் போது கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறந்துவிடாமல் சென்னை மிதந்த காட்சிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது. அது போல இல்லாமல், துரிதமாக முதலமைச்சர் செயல்பட்டதை அவையில் பதிவு செய்துள்ளார் ஆளுநர்.
சில வாரங்களுக்கு முன்னால் ‘இந்தியா டுடே’ ஆங்கில வார இதழ்வெளியிட்ட கருத்துக் கணிப்பில் இந்தியாவின் சிறந்த முதலமைச்சர் என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் மகுடம் சூட்டப்பட்டார்கள். அதனை தனது உரையில் ஆளுநர் சுட்டிக் காட்டியது ஆளுநரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
“நமது முதலமைச்சர் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார். பதவிக்கு வந்த மிகக் குறுகிய காலத்திலேயே இத்தகைய சாதனை புரிந்துள்ளது மிகவும் பாராட்டிற்குரியது” என்று ஆளுநர் பாராட்டி இருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள், பத்து ஆண்டுகள் கழித்து பாராட்டும் போற்றுதலும் பெறுவது என்பது வேறு. ஆனால் ஆட்சிக்கு வந்து ஏழு மாதங்களில் இத்தகைய உயர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றிருப்பது தான் முக்கியமானது. ‘பதவிக்கு வந்த மிகக் குறுகிய காலத்தில் இத்தகைய சாதனை புரிந்துள்ளார்’ என்பதுதான் ஆளுநரின் பாராட்டில் மகுடம் ஆகும்.
அவரது உரையில் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது இந்து சமயஅறநிலையத் துறைக்கு அவர் அளித்த பாராட்டுதல்கள் ஆகும். இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளுக்கு களங்கம் கற்பிக்க ஒரு கூட்டம் நித்தமும் துடித்துக் கொண்டு இருக்கிறது. கோவில் நிலங்களை மீட்டு வருகிறது தி.மு.க. அரசு. ஒரு கால பூஜை திட்டத்தின் படி 12 ஆயிரம் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கோவில்கள் சார்பில் கல்விப் பணிகள் தொடங்கி உள்ளன. கோவில்களின் வரலாறுகளை வெளியிட பதிப்பகம் தொடங்கப்பட உள்ளது. மடங்களில் உள்ள சுவடிகள் பாதுகாக்கப்படுகிறது. கோவில்களில் ஆன்மிக புத்தகங்கள் கிடைக்க புத்தகக் கடைகள் திறக்கப்பட உள்ளது. பழமை வாய்ந்த கோவில்கள் புதுப்பிக்கப்பட உள்ளன. கோவில்களைப் பாதுகாக்க ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது சிலருக்கு பிடிக்கவில்லை.
அதனால் ஏதாவது அவதூறு கற்பித்து வருகிறார்கள். இந்த கும்பலுக்கு பதில் சொல்லும் வகையில் - இத்தகைய விமர்சனங்கள் அனைத்துக்கும் ஆளுநர் அவர்கள் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்கள். “திருக்கோவில் நிலங்களை மீட்டெடுப்பதிலும், திருக்கோவில் சொத்துகளை சிறப்பாக மேலாண்மை செய்வதிலும் இந்த அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை நான் மனமாரப் பாராட்டுகிறேன்” என்று கல்வெட்டைப் போலச் சொல்லி இருக்கிறார்.
இவை அனைத்தும் ஆளுநரின் மூலமாக வெளிப்பட்டுள்ளது. ஆளுமைத்திறன் கொண்ட ஒரு முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றிருப்பதை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தனது மூலமாகத் தெரிவித்துள்ள ஆளுநரை பாராட்டுகிறோம்! நன்றிதெரிவிக்கிறோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !