கோப்புப் படம்
murasoli thalayangam
“காலநிலை மாற்றத்தை எந்த அணு ஆயுதத்தாலும் தடுக்க முடியாது” : உலக நாடுகளுக்கு ‘முரசொலி’ அட்வைஸ் !
அணு ஆயுதப் போர் கூடாது என்று ஐந்து நாடுகள் கூட்டறிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்துப் பெருமை கொள்வதைவிட, காலம் கடந்தாவது இந்த ஆசை நிறைவேறட்டும் என்பதே அமைதியை விரும்புபவர்களின் விருப்பமாக உள்ளது.
எந்தெந்த நாடுகள் எல்லாம் அணு ஆயுதங்கள் மீது மோகம் கொண்ட நாடுகளோ அவை அனைத்தும் இணைந்து இத்தகைய அறிக்கையை வெளியிட்டு இருப்பதுதான் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு இருக்கின்றன. “அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையிலும் - பிறநாடுகள் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது தலையாய கடமையாகக் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பரந்த அளவில் பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அந்த ஆயுதங்கள் இருக்கும் வரை அவற்றை தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த ஆயுதங்கள் மென்மேலும் உருவாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.
அணு ஆயுத அச்சுறுத்தலைக் கவனத்தில் கொள்வது, அணு ஆயுதப்பரவலைத் தடுப்பது, ஆயுதங்கள் இருப்பைக் குறைப்பது தொடர்பாக இருதரப்பு - முத்தரப்பு ஒப்பந்தங்களை 5 நாடுகளும் பின்பற்றும். அணு ஆயுதப் போரில் வெற்றி பெற முடியாது. அந்தப் போரில் ஒரு போதும் ஈடுபடக் கூடாது” - என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சொற்களை அந்த நாடுகள் கடைப்பிடித்தாலே உலகம் அமைதி பெறும். அணு ஆயுதங்கள் அதிகம் உள்ள நாடுகளின் முதல் 10 நாடுகளின் பட்டியலில் பெரும்பாலும் உள்ள நாடுகள் இவை ஆகும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள்தான் அணு ஆயுதங்கள் அதிகம் வைத்திருக்கும் நாடுகளாகச் சொல்லப்படுபவை.
சுவீடன் நாட்டில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அணு ஆயுதக் குவிப்பு குறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில் தான் இந்தப்பட்டியல் இடம் பெற்றுள்ளது.
உலகில் குவிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரம் என்றும், இதில் 90 சதவிகித ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யாவிடம் மட்டுமே உள்ளன என்றும் அந்த அறிக்கையில் உள்ளது. அமெரிக்காவைவிட ரஷ்யாவிடம் அதிகமாக உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் சீனாவிடம் நவீனமயமாக்கல் ஆயுதங்கள் இருப்பதாகக்கூறப்பட்டுள்ளது. எந்தெந்த நாடுகள் எல்லாம் அதிகளவு அணு ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளன என்றும் அதில் உள்ளது. இதுபோன்ற தகவல்கள் மூலமாக, தகவல்களை அறிந்து கொண்டு தங்கள் நாடுகளின் இருப்பை மற்ற நாடுகள் அதிகப்படுத்தி வருகிறதே தவிர குறைக்கவில்லை.
அனைத்து நாடுகளுமே அணு ஆயுதங்கள் ஆபத்தானவை என்றுதான் சொல்கின்றன. ஆனாலும் அதனை சேகரிப்பதை, உருவாக்குவதைக் குறைக்கவில்லை. பணத்தின் மீது ஆசை இல்லை என்று சொல்லிக்கொண்டே சேர்ப்பதைப் போலத்தான் இதுவும். பணம் என்பது கூட ஆசையைச் சார்ந்தது மட்டும் தான், அணு என்பது அழிவைச் சேர்ந்தது.
அடுத்து அடுத்தவரோடு சேர்ந்து தன்னையும் கெடுக்கிறது. வாழ்பவர்களை மட்டுமல்ல, பிறக்கப் போகிறவர்களையும் சேர்த்து அழிப்பதாக இருக்கிறது அணு ஆயுதங்கள். இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் தன்னைத் தாக்கிய ஜப்பான் மீது அமெரிக்கா இரண்டு அணுகுண்டு தாக்குதலைச் செய்தது. ஹிரோ சிமாவில் முதல் நாளும், நாகசாகியில் இரண்டாவது நாளும் போடப்பட்டது.
சின்னவன், கொழுத்தவன் என்று பெயர் சூட்டப்பட்டது. அந்த சின்னவனும் கொழுத்தவனும் சேர்ந்து கொன்று தீர்த்தவர் தொகை ஒரு லட்சத்தைத் தாண்டியது. கதிரியக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதும் மறக்க முடியாத கண்ணீர் வரலாறு.
அதன் பிறகு பல்வேறு நாடுகள் சோதனை முயற்சிகளாக பல தடவை இதனைச் செய்துள்ளன. இந்த முடிவுகளை நாடுகள் வெளியிடுவது இல்லை. சோதனை செய்வதாகக் காட்டிக் கொள்வதே ஒரு நாட்டின் பெருமையாகவும் ஆனது. பெரிய நாடுகளாக காட்டிக் கொள்ளவும், வல்லரசு ஆகிவிட்டதாகச் சொல்லிக் கொள்ளவும் எது அடையாளம் என்றால் அணு ஆயுதச் சோதனைகள் நடத்துவது தான் என்றும் ஆகிவிட்டது. அந்த வரிசையில் பல்வேறு நாடுகள் சோதனைகளைச் சாதனைகளாகச் சொல்லி வருகின்றன.
இந்த நிலையில்தான் ஐந்து நாடுகள் சேர்ந்து அறிக்கை கொடுத்துள்ளன. இந்த அறிக்கையில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையும். இந்த அறிக்கையை இந்த அளவுக்கு ஒற்றுமையுடன் கொடுத்து ஒரே ஒரு நாள் கடந்த நிலையில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமான அறிக்கைப் போர் தொடங்கிவிட்டது. சீனா அதிகமான அளவு அணு ஆயுதத்திட்டங்களை மேம்படுத்த திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. அதனை சீனா மறுத்துள்ளது.
“அமெரிக்கா கூறியது உண்மையல்ல. ஐந்து நாடுகளும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கைப்படி அனைத்து நாடுகளும் நடக்க வேண்டும்” என்று சீனா கூறி இருக்கிறது. அறிக்கை வெளியிட்டுள்ள நாடுகள் நேர்மறைச் சிந்தனைகளுடன் நடந்து கொள்ள வேண்டும்.
உலகை இன்று மிக முக்கியமாக அச்சுறுத்தி வருவது காலநிலை மாற்றம்தான். பருவநிலை மாற்றமானது மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. புவி வெப்பமயமாதலை விட மாபெரும் பேராபத்து வேறு இருக்க முடியாது. அதனை எத்தனை கோடி கோடி மதிப்பிலான அணு ஆயுதத்தாலும் தடுக்க முடியாது என்பதை இந்த நாடுகள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
“மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதே விஞ்ஞானிகளின் முழுமுதற் கடமை. அந்த வேலைதான் எல்லாவற்றையும் விட இப்போது தலையாயது” என்றார் ஐன்ஸ்டீன். இதுவே அனைத்து நாடுகளையும் வழிநடத்த வேண்டும்.
Also Read
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!