murasoli thalayangam
"பா.ஜ.க ஆதரவு சாமியார்களுக்கு மதச்சார்பின்மை பாடம் எடுத்த வெங்கய்யா நாயுடு": முரசொலி தலையங்கம்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜன.5, 2022) தலையங்கம் வருமாறு:
ஆக்கபூர்வமான ஒரு கருத்தை கோட்டயத்தில் வைத்து உரைத்துள்ளார் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள். இன்றைய காலத்துக்குத் தேவையான அரிய, உண்மையான கருத்து ஆகும். அதுவும் உயரிய பதவியில் இருந்து கொண்டு அவர் சொல்லி இருக்கும் அந்தக் கருத்து அனைவராலும் வரவேற்க வேண்டியது. அனைவராலும் கடைப்பிடிக்க வேண்டியது. குறிப்பாக பா.ஜ.க. ஆதரவு சக்திகள், அமைப்புகள் துணைக் குடியரசுத் தலைவரின் பேச்சைக் கடைப்பிடிக்க வேண்டும்.
“பிற மதங்கள் குறித்த வெறுப்புப் பேச்சுக்களும் பதிவுகளும் நமது கலாச்சாரம், பாரம்பர்யம், அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரானவை. மதச்சார்பின்மை ஒவ்வோர் இந்தியனின் ரத்தத்திலும் உள்ளது” என்று சொல்லி இருக்கிறார் துணைக் குடியரசுத் தலைவர் அவர்கள்.
“நாட்டில் ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தை அல்லது நம்பிக்கையை பின்பற்றும் உரிமை உள்ளது. அதே நேரம் மற்ற மதங்கள் குறித்த வெறுப்புப் பேச்சுகள், பதிவுகளை வெளியிடக் கூடாது. இவை நமது இந்திய நெறிமுறைகளுக்கு எதிரானது. அந்த வகையில் இந்தியாவின் மதிப்பீடுகளை வலுப்படுத்த நாம் முன்வர வேண்டும்’’ என்றும் பேசி இருக்கிறார் துணைக் குடியரசுத் தலைவர்.
இதனை வாசிக்கும் போது கடந்த சில நாட்களுக்கு முன்னால் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்த தர்மசன்சத் மாநாட்டுப் பேச்சுகள்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றன. இந்தியாவின் அமைதியை எந்த அளவுக்கு குலைக்க முடியுமோ அந்தளவுக்கு அச்சுறுத்தும் பேச்சுகள் அந்த மாநாட்டில் பேசப்பட்டன. இசுலாமியர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான பேச்சுக்கள் அதில் அதிகமாக இருந்தன. அவர்களை இனப் படுகொலை செய்ய வெளிப்படையான அழைப்பு விடுக்கப் பட்டது. ‘ஆயுதங்கள் வெல்லட்டும், நாங்கள் எங்கள் தர்மத்திற்காக உயிரையும் கொடுப்போம், தேவைப்பட்டால் அதற்காக கொலையும் செய்வோம்’ என்று இந்த மாநாட்டில் பேசப்பட்டுள்ளது. இந்த கொடூரத்திற்கு இராணுவமும், காவல்துறையும் சேர்ந்து வர வேண்டும் என்று ஒருவர் அழைப்பு விடுத்தார் இந்த மாநாட்டில். இதில் டெல்லி பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய், வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இப்படி பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்து வருகிறார்கள். ஆயுதப் படைகளில் முன்னாள் தலைமை தளபதிகள் ஐந்து பேரும், நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்கள். இந்திய எல்லையின் தற்போதைய நிலைமையைச் சுட்டிக் காட்டி உள்ள இவர்கள், இத்தகைய வன்முறை அழைப்புகள் உள்நாட்டில் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்றும் வெளிப்புற சக்திகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்கள்.
“நாட்டின் அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்பாடு எதுவாக இருந்தாலும் அது அந்நிய சக்திகளை ஊக்குவிக்கும். நமது இந்திய சமூகம் பன்முகத் தன்மை கொண்டது.
இந்த சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கு எதிராக விதைக்கப்படும் வன்முறை சீருடை தாங்கிய வீரர்கள், மத்திய ஆயுதப்படையினர், காவல் துறையினர் என அனைவரின் மத்தியிலும் நிலவும் ஒற்றுமையை சீர்குலைக்கும்”என்று முன்னாள் இராணுவத் தளபதிகள் சொல்லி இருப்பதுதான் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது ஆகும்.
இத்தகைய வெறுப்புப் பேச்சுகளைக் கண்டித்து உச்சநீதிமன்றத்தின் 76 வழக்கறிஞர்கள், இந்தியத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம்எழுதி இருந்தார்கள். “இந்த மாநாட்டில் பேசியவர்களது பேச்சுக்கள் வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது. நாட்டின் அமைதி, ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இசுலாமிய மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதி மன்றம் தலையிட வேண்டும். தானாக முன் வந்து விசாரணை நடத்த வேண்டும்’’என்று அந்த வழக்கறிஞர்கள் தங்களது கடிதத்தில் கூறியிருக் கிறார்கள்.
“இவை வெறும் துவேஷப் பேச்சு மட்டும் அல்ல. மாறாக ஒட்டுமொத்த சமுதாயத்தைக் கொலை செய்ய விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பாகும். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் விடுக்கப்பட்டுள்ள மோசமான மிரட்டல் இது. பல கோடி முஸ்லீம்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கும் போக்கு இது’’என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இத்தகைய வன்முறை பேச்சுகள் சமூக ஊடகங்களில் பரவிய பிறகு ஒரு வாரம் கழித்துத்தான் அந்த மாநில அரசு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. ஒரே ஒருவர் பெயரை மட்டும் சேர்த்துள்ளது. ஹரித்துவார் மாநாடு வெறுப்பு பேச்சு தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது. இத்தகைய சூழலில் மத உணர்வைத் தூண்டி அரசியல் அறுவடையைத் தொடங்கி இருக்கிறார்கள். உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தலையிட்டுச் செயல்பட வேண்டிய நேரம் இது!
இத்தகைய சூழலில்தான் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்களின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. சொல்லவேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டிய கருத்தை சொல்ல வேண்டிய முறையில் சொல்ல வேண்டிய மனிதர் சொல்லி இருக்கிறார்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!