murasoli thalayangam
“ராஜேந்திரபாலாஜியை ஒப்படைக்க வேண்டிய முதல் கடமை அ.தி.மு.க தலைமைக்குத்தான் உண்டு” : முரசொலி சாடல்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொண்டு அமைச்சராக இருந்த இராஜேந்திர பாலாஜி என்பவர் சில வாரங்களாக தலைமறைவாக இருக்கிறார். இதைவிடக் கேவலம் எதுவும் இருக்க முடியாது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கின்ற அ.தி.மு.க.வுக்கும் - அக்கட்சித் தலைமைக்கும் இதைவிடத் தலைகுனிவு வேறு இருக்க முடியாது.
இராஜேந்திர பாலாஜியை அழைத்து வந்து தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டிய முதல் கடமை அ.தி.மு.க. தலைமைக்குத்தான் உண்டு!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அகில உலக அரசியலைத் தீர்மானித்து ஐ.நா. அவைக்கே கருத்துச் சொல்லும் பொறுப்பு இராஜேந்திரபாலாஜிக்குத் தான் தரப்பட்டு இருந்தது. அதேபோல் ‘குத்துவெட்டுத்துறை’ அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார் இரா.பா. வாயைத் திறந்தால், “வெட்டிவிடுவேன், குத்திவிடுவேன், நாக்கை அறுப்பேன்” என்பதுதான் அவரது பாணியாக இருந்தது.
தி.மு.க. கட்சித் தொண்டர்கள் வீட்டுக் கதவை உடைப்போம். சட்டையைக் கிழிப்போம்.
கட்டபொம்மனைத் தூக்கில் போட்டது போல கமலஹாசனைத் தூக்கில் போட வேண்டும். கமலஹாசன் நாக்கை அறுப்பேன்.
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சாத்தூர்தொகுதிக்கு உள்ளே நுழைந்தால் பன்றியைச் சுடும் ரப்பர் குண்டால் சுடவேண்டும்.
சித்து வேலைகளைச் செய்து உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெற வைப்பேன்!
இசுலாமியர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டாம், பாகிஸ்தானுக்குப் போகலாம்!
கொரோனா நோய் என்பது மக்களுக்குத் தரப்பட்ட தண்டனை.
இந்து தீவிரவாதம் தவிர்க்க முடியாதது
மோடிதான் எங்கள் டாடி!
என்ன பெரிய ம.... நாத்திகம்! - இப்படி அவர் புண்மொழிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதைவைத்து வழக்குப் போட்டாலே அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருக்க வேண்டும். ஆனால் ரா.பா.இன்று சிக்கி இருப்பது ஊழல் வழக்குகளில்!
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. சேனல் மைக்குகளைப் பார்த்தால் எதையும், யாரையும் தராதரம் இல்லாமல் பேசும் மஞ்சள் சட்டை மாஃபியா ராஜேந்திரபாலாஜி, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பதுங்கத் தொடங்கினார். மோசடிப் புகார்கள் குவியத் தொடங்கியதுதான் இதற்குக் காரணம்.
இராஜேந்திரபாலாஜி, அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேர் மீது 5 பிரிவுகளில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் தன்னைக் கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடியானது. இந்தத் தகவலறிந்து அன்றைய தினமே இராஜேந்திர பாலாஜி தலைமறைவானார்.
ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வருகிறது. கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்க கடந்த 23 ஆம் தேதி விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இப்படி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நபரை விமான நிலைய அதிகாரிகள்உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். மேலும், ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகளை விருதுநகர் மாவட்டப் போலீசார் முடக்கி உள்ளனர்.
ராஜேந்திர பாலாஜி மீது ஏற்கனவே 2 மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகாசி சித்துராஜபுரத்தைச் சேர்ந்த தூயமணியின் மனைவி குணா தூயமணி ஒரு புகார் தந்துள்ளார். தனது மகனுக்கு ராஜேந்திர பாலாஜி மூலம் ஏ.பி.ஆர்.ஓ. வேலை வாங்கித் தர வேண்டி நல்லதம்பி என்ற விஜயநல்லதம்பி, அவரது மனைவி மாலதி ஆகியோரிடம் 17 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளேன், ஆனால் வேலை வாங்கித் தராமல் பணத்தை மோசடி செய் துள்ளனர் என்று புகார் கூறியுள்ளார்.
மதுரை வில்லாபுரம் காமராஜர்புரம் 3வது தெருவைச் சேர்ந்த நாதன் மகன் மீனாட்சிசுந்தரம், தனக்கு மதுரை மாநகராட்சியில் அலுவலக உதவியாளர் வாங்கித் தரக் கோரி சிவகாசி ஒன்றியச் செயலாளர் கணேசன், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் 7 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி அலங்கரைச்சாமி மகன் ஜோசப்ராஜ் என்பவர், அவரது நண்பர் தரணிதரன் என்பவருக்கு அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக விஜயநல்லதம்பியிடம் ஏழரை லட்சம் ரூபாய் கொடுத்தும் வேலை வாங்கித் தரவில்லை என்று புகார் கூறியுள்ளார்.
இவர்கள் மூவரும் இணைய தளம் மூலமும், நேரில் சந்தித்தும் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், மதுரை கோமதிபுரம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ், திருவில்லிபுத்தூர் அங்கு ராஜ் நகரைச் சேர்ந்த வெங்கடாச்சலம், சாத்தூர் ஹரிபாலு, மம்சாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் ஆகியோரும் இராஜேந்திர பாலாஜி மீது இதேபோல் மோசடிப் புகார் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இவை மொத்தமாக 78 லட்சம் மதிப்பிலான மோசடிக் குற்றச்சாட்டுகள் ஆகும். புகார் அளித்துள்ளவர்களுக்கு சம்மன் தரப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இராஜேந்திர பாலாஜியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய திருப்பத்தூரை அடுத்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி விக்னேஸ்வரன், ஜோலார்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை ஆகியோரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவை அனைத்தும் ராஜேந்திர பாலாஜியின் தனிப்பட்ட விவகாரங்கள் அல்ல. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். பழனிசாமியின் அமைச்சரவையில் அமைச்சராகத் தொடர்ந்தவர். இன்று அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக இருப்பவர். அத்தகைய நபர் தலைமறைவாக இருப்பதை அ.தி.மு.க. தனக்கு ஏற்பட்ட தலைகுனிவாக எடுத்துக் கொண்டு அவரை அழைத்து வந்து காவல் துறையிடம் ஒப்படைக்க எடுத்துக் கொண்டு அவரை அழைத்து வந்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!