murasoli thalayangam
நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சிகளின் குரலைக் கேட்காமல் நாட்களைக் கடத்தும் பாஜக: முரசொலி சாடல்!
முரசொலி நாளேட்டின் இன்றைய (டிச.22, 2021) தலையங்கம் வருமாறு:
நாடாளுமன்றம் நடைபெறுவதற்கு வழிவகை காணவேண்டியது ஆளும் பா.ஜ.க.வின் பணியாக இருக்க வேண்டும். மாறாக தினமும் ஏதாவது ஒருபிரச்சினையைக் கிளப்பி எதிர்க்கட்சிகள் வெளி யேறிவிட்டால் - அல்லது அவையை ஒத்திவைத்து விட்டுப் போனால்கூட நல்லது என்று அவர்கள் நினைக்கிறார்கள்போல!
இப்படியே நாட்களைக் கடத்திவிட்டால் போதும் என்றும் நினைக்கிறார்கள்என்பதன் அடையாளம்தான் தினந்தோறும் நாடாளுமன்றம் குறித்து டெல்லியில்இருந்து வரும் தகவல்கள்!
நாடாளுமன்றத்தின் நடைமுறை என்பதே விவாதங்கள்தான். எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்பார்கள். ஆளும்கட்சியினர் விளக்கம் அளிப்பார்கள். சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்தால் சூடு அதிகமாகும். அது அப்படியே அமுங்கும். இதுதான் வழக்கமாக இருக்கும். ஆனால் இப்போது, எந்தக் கேள்வியையும் கேட்கவிடுவதும் இல்லை, எந்த விவாதத்தையும்
எழுப்பவிடுவதும் இல்லை, விவாதங்களே எழும்பாத வகையில் பார்த்துக் கொள்கிறார்கள், எதற்கும் விளக்கம் கிடைப்பது இல்லை, பிரதமர் அவைக்கு வருவதே இல்லை,முக்கியமான அமைச்சர்கள் கூட முக்கிய மான நேரங்களில் இருப்பது இல்லை - என்பதுதான் இன்றைய நாடாளு மன்றமாக இருக்கிறது.
‘பா.ஜ.க. உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்தாக வேண்டும்' என்று அவர் களுக்கான கூட்டத்தில் பிரதமரே சொன்னார். தங்கள் துறை தொடர்பான நேரங்களில் கூட அந்த துறை அமைச்சர்கள் அவைக்கு வரவில்லை என்று மாநிலங்களவையிலேயே அவைத் தலைவர் வெங்கய்யாநாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.
“தங்கள் துறை தொடர்பான தகவல்களை அவையில் தாக்கல் செய்ய அனுமதி கோரியிருந்தால் அமைச்சர்கள் அவைக்கு வர வேண்டும். அவர்கள் அவைக்கு வராமல் வேறு ஒருவரை வைத்து தகவல்களை தாக்கல் செய்ய வைக்கிறார்கள். தவிர்க்க முடியாமல் எப்போதாவது நடந்தால் பரவாயில்லை. அப்படிப்பட்ட நேரத்தில் அவைத்தலைவருக்கு
முன் கூட்டியே சொல்லி அனுமதி வாங்க வேண்டும். அவைக்கு வராமல் இருப்பது தற்செயலானதாகவோ வழக்கமானதாகவோ இருக்கக் கூடாது. இது போன்ற செயல்களை இனி நான் அனுமதிக்க மாட்டேன்” என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு சொல்லி இருக்கிறார். நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளுக்கு அவர்களே சொல்லும் சாட்சியம் இது.
இந்த நிலைமையில், ‘எதிர்க்கட்சிகள்தான் நாடாளுமன்றத்தை நடத்த விடுவது இல்லை' என்று ஆளும் பா.ஜ.க. குற்றம்சாட்டுகிறது. நாடாளு மன்றத்தை, அதற்குரிய மாண்புகளோடு நடத்தினால் எதற்காக எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவிக்கப் போகிறார்கள்.
ஓராண்டுகாலம் போராடி - 700 விவசாயிகள் இறந்து போய் - அதற்குப் பின்னால் திரும்பப் பெறப்பட்டது மூன்று வேளாண் சட்டங்கள். ஒற்றை வரியில் அதனை திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு. அதனை நாடாளுமன்றத்தில் உரிய விவாதம் நடத்தி நிறைவேற்றி இருக்க வேண்டும். கருத்துப் பரிமாற்றம் இல்லாமல் திரும்பப் பெற்றுவிட்டார்கள். திரும்பப் பெற்றதை ஆதரிக்கத்தான் வேண்டும். ஆனால் திரும்பப் பெற்ற வழி என்பது நாடாளுமன்ற வழி அல்ல. அதை விமர்சிக்கத்தான் வேண்டும்.
இப்படித்தான் நாடாளுமன்றத்தின் மிக முக்கியமான மசோதாக்கள் அனைத்தையும் விவாதம் செய்யாமல் நிறைவேற்றி விடுகிறார்கள். பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக விவாதம் நடத்தாமல் நிறைவேற்றிக் கொள்ளலாமா? இதுதான் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்வி.
“நாடாளுமன்றம் செயல்படக் கூடாது என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்க மாக இருக்கிறது. கோஷங்கள் எழுப்புவதும், அமளியில் ஈடுபடுவதும்தான் அவர்களின் வேலையாக உள்ளது” என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் சொல்லி இருக்கிறார். பேசுவதற்கான அனுமதி கிடைத்தால் அவர்கள் ஏன் கோஷம் போடப் போகிறார்கள். கருத்தைச் சொல்வதற்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டால் அவர்கள் எதற்காக அமளியில் ஈடுபடப் போகிறார்கள்? அமைதியாக அவையில் விவாதம் நடந்து கொண்டு இருந்தால் யாராவது அமளியில் இறங்குவார்களா?
“நாடாளுமன்றத்தில் விவாதங்களை அமைதியாக நடத்த வேண்டியது அரசின் கடமையே தவிர எதிர்க்கட்சிகளின் கடமை அல்ல. நாடாளுமன்ற விதிகளை நீங்களே படித்துப் பாருங்கள்” என்று ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
“அரசு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது, எனவே நாங்கள் இங்கு தான் போராட வேண்டி உள்ளது” என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
லக்கீம்பூர் படுகொலை - பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை - லடாக் விவகாரம் - விலைவாசி உயர்வு - பெகாஸஸ் விவகாரம் - மீனவர் படுகொலை - 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஆகியவைதான் எதிர்கட்சிகள் எழுப்பும் மிக முக்கியமான பிரச்சினைகள்.
இவை பற்றி விவாதம் நடத்துவதில் என்ன தயக்கம்?
இதில் குறிப்பாக லக்கீம்பூர் படுகொலை சம்பவத்தில் ஒன்றிய அமைச்சர் அஜஸ் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் மிக முக்கியமான கோரிக்கை. அந்தச் சம்பவம் என்பது விபத்து அல்ல, திட்டமிட்ட நிகழ்வு என்று விசாரணை ஆணையத்தின் அறிக்கையே வந்திருக்கிறது. விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்டது தற்செயலானது அல்ல, அதன் பின்னால் திட்டமிட்ட சதி இருக்கிறது, கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் ஆபத்தான ஆயுதங்களால் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்று சிறப்பு விசாரணைக் குழுவே சொல்லி இருக்கிறது.
அதன்பிறகாவது அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமா? அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தால் எதிர்க்கட்சிகள் எதற்காக முழக்கம் எழுப்பப் போகிறார்கள்?
லடாக் விவகாரம் தொடர்பாக ஒத்தி வைப்புத் தீர்மானம் தரப்பட்டுள்ளது. அதனை எடுக்கவில்லை. அது குறித்து விவாதம் நடத்தினால் எதற்காக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யப் போகிறார்கள்?
12 மாநிலங்களவை உறுப்பினர்களது இடை நீக்கமானது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது பற்றியாவது அவையில் விவாதம் நடத்தி இருக்க வேண்டும். மாறாக தனியாக ஒரு பேச்சுவார்த்தைக் கூட்டத்தை மாநிலங்களவைத் தலைவர் நடத்தினார். அதில் எதிர்க்கட்சிகள் பங்கெடுக்க வில்லை. அவைக்குள் பேச விடாத ஒரு விவகாரம் குறித்து தனித்து ஆலோசனை செய்வதால் என்ன பயன் என்று எதிர்க் கட்சிகள் கேட்கிறார்கள்.
நாடாளுமன்றம் நடைபெற வேண்டும். அது நாடாளுமன்றமாக நடைபெற வேண்டும்! அதற்குரிய மாண்புடன் நடைபெற வேண்டும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!